குர்பாஸின் சதமும், ஒமர்ஷாயின் சகலதுறையும் கைகொடுக்க வங்கதேசத்துக்கு எதிராக தொடரை வென்றது ஆப்கான்
பங்களாதேஷ் அணிக்கு எதிரான 3ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ரஹ்மதுல்லாஹ் குர்பாஸின் சதமும் ஹஸ்மதுல்லாஹ் ஒமர்ஷாயின் சகலதுறை அசத்தலும் கைகொடுக்க 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட தொடரை 2:1 என வெற்றெடுத்தது.
சார்ஜா சர்வதேச மைதானத்தில் இடம்பெற்றுவந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இவ்விரு அணிகளும் ஒன்றுடன் ஒன்று பலப்பரீட்சை நடாத்தின. இதில் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியும், 2ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியும் வெற்றி பெற்று தொடரை 1:1 என சமன் செய்திருந்தன. இந்நிலையில் தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவதும் , இறுதியுமான போட்டி நேற்று முன்தினம் (11) பகலிரவு ஆட்டமாக இடம்பெற்றது.
இந்தப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்ந்தெடுத்தது. அதற்கமைய களம்புகுந்த பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர்களில் மத்திய வரிசையில் வந்த அனுபவ வீரரான முஹம்மதுல்லாஹ் ரியாஸ் 2 ஓட்டங்களால் சதத்தினை தவறவிட்டு 98 ஓட்டங்களையும், அணித்தலைவராக செயற்பட்ட மெஹதி ஹசன் மிராஸ் 66 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுக்க, பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 244 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ஹஸ்மதுல்லாஹ் ஒமர்ஷாய் 4 விக்கெட்டுக்களை வீழ்தினார்.
தொடர்ந்து பங்களாதேஷ் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 245 ஓட்டங்கள் என்ற சவால்மிக்க வெற்றி இலக்கினை விரட்டியடிக்கக் களம் நுழைந்த ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்ப வீரரான ரஹ்மதுல்லாஹ் குர்பாஸ் ஒருபக்கம் நிலைத்திருந்து அணியின் வெற்றிக்குத் தேவையான ஓட்டங்களைச் சேர்க்க, மற்றைய வீரர்களான அட்டால் (14), ரஹ்மத் ஷா (8) மற்றும் ஷஹீடி (6) ஆகியோர் சொற்ப ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஏமாற்றம் கொடுத்தனர்.
பின்னர் நம்பிக்கை கொடுத்த குர்பாஸ் உடன் இணைந்த ஒமர்ஷாய் அணியை வெற்றியின் பக்கம் அழைத்துச் சென்றனர். பொறுப்புடன் ஆடிய குர்பாஸ் சதம் விளாசி அசத்தியதுடன் ஒமர்ஷாய் உடன் இணைந்து 100 ஓட்டங்களை இணைப்பாட்டம் புரிந்து 101 ஓட்டங்களுடன் பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து களத்திலிருந்த ஒமர்ஷாய் அரைச்சதம் கடந்து ஆட்டமிழக்காமல் 70 ஓட்டங்களையும், முஹம்மது நபி ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களையும் பெற்று கொடுக்க ஆப்கானிஸ்தான் அணி 48.2ஆவது ஓவரில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 246 ஓட்டங்களைப் பெற்று 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றதுடன் தொடரை 2:1 என கைப்பற்றி அசத்தியது. பந்துவீச்சில் நஹிட்ரானா மற்றும் முஸ்தபிஷிர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)