பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலைக்கு விஜயம் செய்த ஜேர்மன் பிரமுகர்களுக்கு மாபெரும் வரவேற்பு
பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலைக்கும் ஜெர்மனியிலுள்ள எல்பர்ட் ஏன்ஸ்டைய்ன் (Albert Einstein Gymnasiun) பாடசாலைக்கும் இடையில் நடைபெறும் மாணவர் பரிமாற்ற வேலைத்திட்டம் கடந்த 8 வருடங்களாக செயற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் ஜேர்மனிய பாடசாலை மாணவர்கள் 20 பேரும், 3 ஆசிரியர்களும் 11 ஆம் திகதி (11-11-2024) பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலைக்கு விஜயம் செய்தனர்.
ஜேர்மன் மேய்ன் கிங்ஸிக் பிரேஸ் மாநில முன்னாள் மாவட்ட அமைச்சர், கர்ல் எயர் கவுபர், அவரது பாரியார் திருமதி. மரியொன் எயர் கவுபர் உள்ளிட்ட ஜெர்மனிய நாட்டு பிரமுகர்களும் இந்த விஜயத்தில் அடங்குகின்றனர்.
வருகை தந்த ஜேர்மனிய பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு பாடசாலை முகாமைத்துவ தலைவர் அஷ்ஷெய்ஹ். பெளஸர் ஹுஸைன் (நளீமி) தலைமையில் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.
இதன் போது, விஸ்டம் சர்வதேச பாடசாலை மாணவர்களின் பாரம்பரிய கலை, கலாசார நிகழ்ச்சிகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலையின் நிர்வாக அதிபர் திருமதி. அனூவா ராஜபக்ஷ, கல்வித்துறை தொடர்பான அதிபர் நிலூபா லியனகே, பிரதி அதிபர் அப்துல் காதர், பாடசாலை பணிப்பாளர் ஹாதிக் பெளஸர் மற்றும் பத்ரிய்யா பெளஸர் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலைக்கும், ஜெர்மனியிலுள்ள பாடசாலைகளுக்குமிடையே 2016 ஆம் ஆண்டு முதல் மாணவர் பரிமாற்று வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலை மாணவர்கள் ஜெர்மனிக்கு விஜயம் செய்வதோடு, அங்குள்ள பாடசாலையில் கற்றல், கற்பித்தல் முறை தொடர்பாக நேரடியாக பார்வையிட்டு அனுபவங்களை பெற்று வருகின்றனர்.
அதேபோல் , ஜேர்மனியிலுள்ள மாணவர்கள் இப்பாடசாலைக்கு வருகை தந்து இங்கு கற்றல், கற்பித்தல் முறைகளை நேரடியாக அவதானித்து அனுபவங்களை பெறுகின்றனர்.
விஸ்டம் சர்வதேச பாடசாலையில் ஜெர்மனிய மொழியும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்த வரவேற்பு நிகழ்வின் போது மாணவர்களும், ஆசிரியர்களும் ஜெர்மனிய மொழியில் உரையாற்றினர். இந்த மாணவர்களின் ஜெர்மனிய மொழி வளம் குறித்து பலரும் பாராட்டி பேசினர்.
சீனன்கோட்டையைச் சேர்ந்த சமூக சேவையாளர் இர்ஸான் முஹம்மதின் வழிகாட்டலின் கீழ் ஜெர்மனிய முன்னாள் மாவட்ட அமைச்சர் கர்ல் எயர் கவுபரின் பங்களிப்போடு இந்த மாணவ பரிமாற்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய கர்ல் எயர் கவுபர் விஸ்டம் சர்வதேச பாடசாலையின் முன்னேற்றம், மாணவர்களின் ஆளுமை ஆசிரியர்களின் தியாக சேவை குறித்து பெரிதும் பாராட்டினார்.
விஸ்டம் சர்வதேச பாடசாலை சார்பில், கர்ல் எயர் கவுபருக்கு அவரது பொதுப்பணிகளையும் கெளரவித்து நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.
ஜேர்மனிய மாணவர்கள் விஸ்டம் சர்வதேச பாடசாலை வகுப்பறைகளுக்குச் சென்று மாணவர்கள் கற்பிக்கும் ஆசிரியருடன், கலந்துரையாடலில் பங்குபற்றினர். ஜேர்மனிய மாணவர்களது மேடை நிகழ்ச்சியும் இங்கு இடம் பெற்றமை விஷேட அம்சமாகும்.
(பேருவளை பீ.எம் முக்தார்)