ஜேர்மன் நாட்டு பிரமுகர்கள் நாளை பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலைக்கு விஜயம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜேர்மன் மேய்ன் கிங்ஸிக் பிரேஸ் மாநில முன்னாள் மாவட்ட அமைச்சர், கர்ல் எயர் கவுபர், அவரது பாரியார் திருமதி. மரியொம் எயர் கவுபர் உள்ளிட்ட ஜெர்மனிய நாட்டு பிரமுகர்கள் நாளை (2024-11-11) பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலைக்கு விஜயம் செய்கின்றனர்.
சீனன்கோட்டை ஜாமியா நளீமிய்யா வீதியிலுள்ள மேற்படி, பாடசாலைக்கு காலை 08:00 மணிக்கு வருகை தரும் இந்த பிரமுகர்களுக்கு பாடசாலை முகாமைத்துவ தலைவர் அஷ்ஷெய்ஹ். பெளஸர் ஹுஸைன் (நளீமி) தலைமையில் வரவேற்பளிக்கப்படவுள்ளது.
விஸ்டம் சர்வதேச பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்ச்சிகளையும் இவர்கள் கண்டுகளிப்பர். அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பல பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொள்வர்.
பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலைக்கும், ஜெர்மனியிலுள்ள பாடசாலைகளுக்கிடையே வருடாந்தம் மாணவர் பரிமாற்று வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கரந்த சில வருடங்களாக இந்த வேலைத்திட்டத்தின் கீழ் பேருவளை விஸ்டம் சர்வதேச பாடசாலை மாணவர்கள் ஜெர்மனிக்கு விஜயம் செய்ததோடு, அங்குள்ள பாடசாலை மாணவர்கள் விஸ்டம் சர்வதேச பாடசாலைக்கும் விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
ஜெர்மனிய முன்னாள் மாவட்ட அமைச்சர் கர்ல் எயர் கவுபர் கடந்த 10 வருடங்களாக நாட்டின் பல பகுதிகளிலும் விஷேடமாக பேருவளை தொகுதியில் பாரியளவிலான பொதுப்பணிகளை செய்துள்ளார்.
2004 சுனாமிக்குப் பின்னர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாரியளவில் சேவைகளை செய்து வருகின்றவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
வீடுகள் அமைப்பு, பாடசாலைகளுக்கு, பாலர் பாடசாலைகளுக்கு கட்டிடங்கள் நிர்மாணித்தல், சுகாதார நிலையங்கள் அமைத்தல், கடற்தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு உதவி செய்தல், சுய தொழில் முயற்சிகளை ஆரம்பித்தல், உதவி செய்தல், விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல பணிகளைச் செய்து பேருவளை மக்களின் அபிமானத்தைப் பெற்றுக்கொண்டவராவார்.
சீனன்கோட்டையைச் சேர்ந்த பிரபல சமூக சேவையாளர் இர்ஸான் முஹம்மதின் வழிகாட்டலின் கீழ் இந்த அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மிகச் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
சீனன்கோட்டை ஸன்ரைஸ் விளையாட்டு கழகத்தின் போசகர்களில் ஒருவரான க்ர்ல் எயர் கவுபர் இந்த விளையாட்டு கழகத்தின் 50 வருட பூர்த்தி விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்ள தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.
(பேருவளை பீ.எம் முக்தார்)