விளையாட்டு

தொடருமா இலங்கையின் வெற்றி வேட்டை; நியூசிலாந்துடன் இன்று பலப்பரீட்சை

சுற்றுலா நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று (9) ஏழு மணிக்கு தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம் பெற உள்ளது.

மிச்சேல் சாண்ட்னர் முதன் முறையாக நியூசிலாந்து அணியின் தலைவராக செயற்படவுள்ள இச் சுற்றுத்தொடரில் 2 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர்கள் அங்கம் வகிக்கின்றன. அதற்கமைய முதலில் 2 போட்டிகள் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று (9) இலங்கை நேரப்படி இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது. மேலும் 2ஆவதும் இறுதியுமான போட்டி நாளை (10) இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்விரு அணிகளும் இதுவரையில் 23 ரி20 சர்வதேச போட்டிகளில் நேருக்கு நேர் மோதியிருக்க இதில் நியூசிலாந்து அணி 13 போட்டிகளிலும், இலங்கை அணி 9 போட்டிகளிலும் வெற்றிபெற்றுள்ளன. ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளது.

மேலும் இறுதியாக இவ்விரு அணிகளும் மோதிய 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் நியூசிலாந்து அணி 2:1 என தொடரை கைப்பற்றியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. மேலும் இலங்கை அணி கடந்த மூன்று மாதங்களாக சிறந்த பெறுபேறுகளை பெற்றுவரும் நிலையில் இத் தொடரில் நியூசிலாந்து அணியில் அனுபவமிக்க பல வீரர்கள் இடம்பெறாமை இலங்கை அணிக்கு மேலும் தொடர் வெற்றிகளைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

அத்துடன் இலங்கை அணி இறுதியாக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ரி20 மற்றும் ஒருநாள் தொடர்களை வெற்றி கொண்டிருந்தது. மேலும் கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் நியூசிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:0 என இழந்திருந்தது. இருப்பினும் இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3:0 என வெள்ளையடித்துக் கைப்பற்றியமை அவ் அணிக்கு இத் தொடரின் உத்வேகத்தைக் கொடுக்கலாம்.

அத்துடன் இன்று மற்றும் நாளை இடம்பெறவுள்ள 2 போட்டிகள் கொண்ட ரி20 தொடர் நிறைவடைந்தன் பின்னர் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 13 ஆம் திகதி இதே தம்புள்ள மைதானத்தில் இடம்பெறவுள்ளதுடன், 2 ஆவது மற்றும் 3ஆவது போட்டிகள் கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *