கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலக ஆலோசகருக்கு இடையிலான கலந்துரையாடல்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் ஐ.நா. வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் (UNRCO) சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் திரு. பெட்றிக் மெக்கார்த்தி ஆகியோருக்கிடையிலான முக்கிய கலந்துரையாடல் இன்று (08) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கலந்துரையாடலின் தொடக்கத்தில் ஆளுநரை வாழ்த்திய திரு. மெக்கார்த்தி, இந்த வாரம் முழுவதும் கிழக்கு மாகாணத்தில் விஜயம் மேற்கொள்வதாக கூறினார். பிந்தைய ஜனாதிபதி தேர்தல் காலம் அமைதியாக அமைந்துள்ளதையும், தற்போதைய பாராளுமன்ற தேர்தல் காலமும் கூட அதே போல அமைதியாக உள்ளதையும் அவர் ஆளுநருடன் பகிர்ந்துகொண்டார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் நிலவும் காணி பிரச்சினைகள், மீள்குடியேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் தொடர்பான சவால்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது. ஆளுநர், தற்போது மாகாணத்தில் மிகக்குறைந்த அளவில் தேர்தல் பிரச்சினைகள் காணப்படுவதாகவும், தேசியக் கொள்கையின் அடிப்படையில் காணி பிரச்சினைகளுக்கு மத்திய அரசுடன் இணைந்து நியாயமான தீர்வுகளை வகுக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம்கள் வாழும் கிழக்கு மாகாணத்தில் இனப்பிரச்சினைகள் அல்லது தேவையற்ற அரசியல் தலையீடுகள் அடிப்படையில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படாது என ஆளுநர் உறுதியளித்தார்.
இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தொழில்நுட்ப ஆதரவு மற்றும் தகவல் முகாமைத்துவ அமைப்பை உருவாக்குவதைத் தமது முக்கிய பணியாகக் கருதுவதாகவும், நில ஆணைக்குழுவுக்கு தேவையான தொழில்நுட்ப ஆதரவை வழங்க ஐ.நா. செயல்பட்டு வருவதாகவும் திரு. மெக்கார்த்தி கூறினார்.
பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை அதிகரிக்கவும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே நெருக்கமான உறவை ஏற்படுத்தவும் ஜனாதிபதி மாளிகை மற்றும் அலறி மாளிகை அருகிலுள்ள வீதிகளை மீண்டும் திறப்பது பெரும் முன்னேற்றம் என திரு. மெக்கார்த்தி குறிப்பிட்டார்.
அரசாங்கத்தின் மீது மக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதே முக்கிய பணிகளில் ஒன்று என ஆளுநர் தெரிவித்தார். கலந்துரையாடலின் போது, கிழக்கு மாகாணத்தின் கல்வி, சுகாதாரம், சுற்றுலா மற்றும் மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் பல்வேறு விடயங்கள் விவாதிக்கப்பட்டன.
(எம்.ஏ.எம் முர்ஷித்)