உள்நாடு

களுத்துறை மாவட்ட சிறுபான்மையினர் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

எதிர்காலத்துக்கான தலைவிதியை நிர்ணயிக்கும் முக்கியமான திருப்புமுனை என்பதால் களுத்துறை மாவட்ட சிறுபான்மை சமூகம் தூர நோக்கோடு சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் கூட்டணி வேட்பாளர் இப்திகார் ஜமீல் கூறினார்.

பேருவளை நகர சபைப் பகுதிக்குட்பட்ட சீனன்கோட்டை, மஹகொடை, மருதானை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் கூட்டணி சார்பில் தொலைபேசி சின்னத்தில் 10ஆம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் இப்திகார் ஜமீல், 11ஆம் இலக்கத்தில் போட்டியிடும் முன்னாள் எம்.பி அஸ்லம் ஹாஜியார் மற்றும் வேட்பாளர் சட்டத்தரணி மகேஷ் கான்சன ஆகியோரை ஆதரித்து இடம் பெற்ற இக்ஸகூட்டங்களில் அவர் மேலும் கூறியதாவது,

இரு தசாப்தங்களாக வெற்றிடமாக உள்ள சிறுபான்மை பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இம் முறையாவது பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கடந்த 20 வருடங்களாக சிறுபான்மை சமூகத்திற்கென ஒரு பிரதிநிதி இந்த மாவட்டத்தில் இல்லாமல் உள்ளது. சிறுபான்மை சமூகங்களின் வாக்குகள் பல கட்சிகளுக்குமாக பிரிந்தமையே இதற்கு காரணமாகும்.

சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை பாராளுமன்றத்தில் இல்லாமல் செய்ய கடந்த முறை பசில் ராஜபக்ஷ சதி செய்து சுயேற்சை குழுவொன்றில் களமிறங்கினார். மக்களும் அவர்களின் வலையில் சிக்கினார்கள். இதனால் பிரதிநிதித்துவத்தை இழந்தோம்.

களுத்துறை மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்கள் தோல்வியடையும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்காது, வெற்றி பெறுபவர்களுக்கே வாக்களிக்க வேண்டும். கடந்ந நான்கு தடவைகள் நடைபெற்ற பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட மக்கள் வாக்குகளை பிரித்து சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்து கொண்டனர். அந்த வரலாற்றுத் தவறினை மீண்டும் ஒருமுறை செய்து விடாதீர்கள்.

களுத்துறை மாவட்ட சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடனேயை உள்ளனர். இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (ஜே.வி.பி) யினரின் போலிப் பிரசாரங்களில் சிக்கி விடக்கூடாது. 14 ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலானது களுத்துறை மாவட்ட சிறுபான்மையினரின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற ஒரு முக்கிய திருப்பு முனையாகும் என்பதை மறந்து விடாதீர்கள்.

களுத்துறை மாவட்ட மக்களுக்கு பாரிய சேவைகளைச் செய்துள்ளேன். மூவின மக்களினதும் பிரச்சினைகளை மாகாண சபை உறுப்பினர் பதவியையும், அமைப்பாளர் பதவியையும் பயன்படுத்தி முடியுமானளவு தீர்த்து வைத்துள்ளேன்.

நான் அரசியலுக்கு புதியவனல்ல. மக்களுடன் என்றும் இருப்பவன். 24 மணி நேரமும் மக்களுக்காக எனது கதவு திறந்திருக்கும். என்னை யாரும் சந்திக்கலாம். தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இந்த மாவட்ட மக்களுக்கு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் மூலம் எதிர்காலத்தில் கூடிய சேவையை வழங்குவேன்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *