ஹரிஸ் ரௌபின் வேகமும், சைமின் அதிரடியும் கைகொடுக்க ஆஸியை பழிதீர்த்தது பாகிஸ்தான்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் வேகப்பந்துவீச்சாளரான ஹரிஸ் ரௌப் 5 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டியதுடன் இளம் ஆரம்ப வீரரான சைம் ஐயூப் அதிரடி அரைச்சதம் விளாசிக் கொடுக்க பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பெற்று தொடரை 1:1 என சமன் செய்தது.
இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று தொடரில் 1:0 என முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தீர்மானமிக்க 2ஆவது போட்டி இன்று (8) அடிலைட்டில் இடம்பெற்றது. இப் போட்டியின் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்திருந்தது.
அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடக் களம் நுழைந்த அவுஸ்திரேலிய அணிக்கு ஆரம்பம் சற்று சுமாராக இருந்தது. இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டது. அத்துடன் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளரான ஹரிஸ் ரௌப் பந்துவீச அழைக்கப்பட்டதிலிருந்து அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர்கள் விரைவாகப் பெவிலியன் திருப்பப்பட்டனர். அதனால் அவுஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 163 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.
அவுஸ்திரேலிய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் ஸ்டீபன் ஸ்மித் 35 ஓட்டங்களை அதிகபட்சமாகப் பெற்றார். பந்துவீச்சில் ஹரிஸ் ரௌப் 29 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுக்களை சாய்த்தார். மேலும் சஹீன் அப்ரீடி 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
பின்னர் அவுஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 164 என்ற வெற்றி இலக்கினை நோக்கி பதிலளித்த பாகிஸ்தான் அணிக்கு ஆரம்ப வீரர்களாக களம் நுழைந்த இளம் வீரரான சைம் ஐயூப் மற்றும் அப்துல்லாஹ் ஷபீக் ஜோடி அதிரடி ஆரம்பத்தைக் கொடுத்தது. 6 ஓட்டங்களை விளாசித் தள்ளிய சைம் ஐயூப் ஒருநாள் அரங்கில் தனது முதல் அரைச்சதத்தை கடந்து அசத்தினார். இந்த ஜோடி தமக்கிடையில் 137 ஓட்டங்களை பெற்றிருக்க 6 ஆறு ஓட்டங்கள் மற்றும் 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 82 ஓட்டங்களை விளாசி ஐயூப் ஆட்டமிழந்தார்.
பின்னர் களத்தலிருந்த அப்துல்லாஹ் ஷபீக்குடன் பாபர் இணைந்து கொள்ள அப்துல்லாஹ் ஷபீக் தன் 4ஆவது அரைச்சதம் பதிவு செய்திருக்க பாகிஸ்தான் அணி 26.3 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 169 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றது. களத்தில் ஷபீக் மற்றும் பாபர் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 64 மற்றும் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தனர். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி தொடரை 1:1 என சமன் செய்ததுடன், இவ்விரு அணிகளுக்கும் இடையிலான தொடரை தீர்மானிக்கும் 3ஆவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் (10) இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)