ஒன்றுபட்டு ஓரணியாக நிற்பதன் மூலம் கம்பஹா மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதியொருவரை வென்றெடுக்க முடியும்
தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் முனீர் முழப்பர்.
கம்பஹா மாவட்டத்தில் ஏறத்தாழ 95 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்கள் உள்ளனர்.எனவே முஸ்லிம்கள் ஒன்று பட்டு ஓரணியாக நின்று வாக்களிப்பதன் மூலம் இம் மாவட்டத்துக்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க முடியும் என கம்பஹா மாவட்ட தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அஷ்ஷெய்க் முனீர் முழப்பர் தெரிவித்தார்.
கஹட்டோவிட்டவில் கடந்த புதன்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில் இலங்கையைப் பொறுத்த வரை கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மிக முக்கியமானதொரு மாவட்டம்.இம் மாவட்டத்திலிருந்து தேசிய கட்சிகள் மூலம் இது வரை முஸ்லிம் பிரதிநிதியொருவர் பாராளுமன்றம் செல்லவில்லை.
எனினும் அதற்கான வாய்ப்புக் கிட்டியிருக்கிறது.எனது வெற்றிக்காக சிங்கள மக்களும் அணி சேர்ந்திருக்கிறார்கள்.இம் மாவட்டத்தில் வேறு எந்த தேசிய கட்சிகளாளும் முஸ்லிம் பிரதிநிதியொருவரை வென்றெடுக்க முடியாது . சிங்கள மக்களும் எனது வெற்றிக்கு அணி கோர்த்திருப்பதால் இந்த முறை அதற்கான வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
எனவே முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிப்பதன் மூலம் எனது வெற்றியை உறுதி செய்ய வேண்டும். கடந்த கால தேர்தல்களில் தேசிய கட்சிகள் முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தி அவர்களது வாக்குகள் மூலம் பாராளுமன்றம் சென்றார்கள்.எனினும் தேசிய மக்கள் சக்தி இம் மாவட்டத்தில் எனது வெற்றியை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது.இம் மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளை மையப்படுத்தி அங்குள்ள பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்றுத் தருவதற்கு திட்டமிட்டிருக்கிறார்கள்.
எனவே முஸ்லிம் மக்களும் தமது பூரணமான ஆதரவை வழங்குவதன் மூலம் எனது வெற்றியை உறுதி செய்ய முடியுமென நம்புகின்றேன். கஹட்டோவிட்ட மக்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனுர குமார திஸாநாயக்கவின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பினை வழங்கினார்கள்.இந்த முறை தேசிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதியானது.எனவே இப் பிரதேச மக்கள் முன்னறை விட அதிகப்படியான வாக்குகளை வழங்கி எனது வெற்றியையும் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியையும் உறுதி செய்ய வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
இக் கூட்டத்தில் வேட்பாளர் புபுது கப்ருகே, பிரபல மேடை நாடக கலைஞர் ரொட்னி வர்ணகுல, உட்பட மேலும் பலரும் உரையாற்றினர்.