சிறுபான்மை கட்சிகளின் கொட்டத்தை வேரறுக்க ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி தயாராவிட்டது
புத்தளம் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஆப்தீன் எஹியா
புத்தளம் மக்களை அடகு வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் சிறுபான்மைக் கட்சிகளின் கொட்டத்தை வேரறுக்க ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி தயாராகிவிட்டது எனத் தெரிவித்த அக்கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும், முதன்மை வேட்பாளருமான ஆப்தீன் எஹியா, அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து புத்தளம் மாவட்ட மக்களை பாதுகாப்போம் எனவும் கூறினார்.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் எழுச்சி மாநாடு செவ்வாய்க்கிழமை (5) புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த எழுச்சி மாநாட்டில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மற்றும் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.
இங்கு தொடர்ந்தும் பேசிய ஆப்தீன் எஹியா மேலும் கூறியதாவது,
அரசியல் ரீதியாக மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட புத்தளம் மாவட்டத்தில், புத்தளம் தேர்தல் தொகுதியில் இப்போதுதான் இருந்து புதிய அரசியல் வரலாறு எழுதப்படுகின்ற ஒரு நாளாக காணப்படுகிறது.
சிறுபான்மைக் கட்சிகள் புத்தளம் மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகளையும், மாவட்ட அபிவிருத்திகளையும் பெற்றுக்கொடுக்கும் என நாங்கள் நம்பிருந்த போது, அவர்கள் கட்சி அரசியலுக்காக புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகத்தை அடகுவைத்து பெரும்பான்மை கட்சிகளோடுதான் நீண்ட காலமாக பயணித்தனர்.
எமது மக்களுக்கும், மாவட்டத்திற்கும் கௌரவத்தை பெற்றுக்கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில், சிறுபான்மைக் கட்சித் தலைவர்களோடு நாங்கள் பயணித்தோம். எங்களை நம்பி புத்தளம் மாவட்ட மக்களும் சிறுபான்மைக் கட்சிகள் கூட்டு சேருகின்ற பெரும்பான்மைக் கட்சிகளுக்கு வாக்குகளை வழங்கி வந்தனர்.
எனினும், ஒவ்வொரு தேர்தல்களிலும் பெரும்பான்மைக் கட்சிகளோடு பயணிப்பதால் எமக்கான ஒரு பிரதிநிதித்துவத்தை புத்தளம் மாவட்ட சிறுபான்மை சமூகம் இழந்து வருகின்றனர் என்பதை உணர்ந்த புத்திஜீவிகளும், மக்கள் பிரதிநிதிகளும், நாம் ஒரு பலமான அணியாக ஒன்றாக சேர்ந்து போட்டியிட்டால் மாத்திரமே எமக்கான ஒரு சிறுபான்மை பிரதிநிதியை பெற்றுக்கொள்ள முடியும் என தீர்மானித்து 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரு கூட்டணியாக களமிறங்கினோம்.
எனினும் புத்தளத்தில் சிறந்த தலைமைத்துமிக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினர் வரவே கூடாது என்று ஒரு கட்சித் தலைவரின் சுயநலமான சில முடிவுகள் எமது ஒற்றுமையை மேலும் பலகீனப்படுத்தியது.
மேலும், கடந்த முப்பது வருடங்களாக புத்தளம் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்த பெரும்பான்மைக் கட்சிகளோடு முன்னர் எப்படி கூட்டு சேர்ந்து அரசியல் செய்தார்களோ அதுபோல இந்த முறையும் சிறுபான்மைக் கட்சிகள் புத்தளம் மாவட்டத்தில் பெரும்பான்மை கட்சிகளோடு பயணிக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்கள்.
எனவே, தமது கட்சி அரசியலுக்காக புத்தளம் மாவட்ட சிறுபான்மை மக்கள் பிரதிநிதித்துவத்தை மீண்டும் கேள்விக்குற்படுத்துவதற்கு சிறுபான்மைக் கட்சிகள் மறைமுகமாக சூழ்ச்சிகளை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் என்பதை உணர்ந்த நாங்கள் இந்த அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து புத்தளம் மாவட்ட மக்களை பாதுகாக்க வேண்டும் என்று யோசித்தோம். எமது ஆதரவாளர்களுடன் நீண்ட கலந்துரையாடல்களை நடத்தினோம்.
புத்தளத்தின் அரசியல் பொக்கிஷமாக காணப்பட்ட மர்ஹூம் பாயிசின் மரணத்திற்குப் பின்னர் புத்தளம் அரசியல் இடைவெளியை நிரப்புவது யார் , மக்களின் அபிலாஷைகளை தீர்ப்பது யார் என்ற கேள்விகள் தொடர்ச்சியாக புத்தளம் மாவட்ட மக்கள் மத்தியில் மேலெழுந்து வந்தன. இந்த நிலையில்தான் நாங்கள் பொதுத் தேர்தல் ஒன்றை சந்தித்திருக்கிறோம்.
புத்தளம் மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்த சிறுபான்மைக் கட்சிகளுக்கும், பெரும்பான்மைக் கட்சிகளுக்கும் நல்ல பாடத்தை புகட்டுவதற்கும், புத்தளம் மாவட்டத்தில் வாழும் மக்களுக்கு நல்ல விடிவு காலத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கும்,வெமது மக்களை அரசியல் சூழ்ச்சிகளில் இருந்து பாதுகாப்பதற்கும் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் ஊடாக பயணிப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என்பதை உணர்ந்து, புரிந்து கொண்ட நாம் இந்த புதிய கட்சியில் எமது பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம்.
புத்தளம் மாவட்ட மக்கள் சிறுபான்மை , பெரும்பான்மைக் கட்சிகள் மீது வைத்திருந்த நம்பிக்கையை இழந்துவிட்டனர். இன்று புத்தளத்தில் எந்தக் கட்சிகளாலும் அரசியல் கூட்டங்களை நடத்த முடியாது. அதனால்தான் ஏனைய கட்சி வேட்பாளர்கள் விடு வீடாகச் சென்று தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
எமது புதிய கட்சி மீதும், கட்சித் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை காரணமாக இளைஞர், யுவதிகள், முதியவர்கள் ஆண்கள் , பெண்கள் என இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் ஆயிரக்கணக்கானோர் அணிதிரண்டுள்ளனர். மக்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நாம் நிச்சயமாக பாதுகாப்போம்.
ஒரு மாகாண சபை உறுப்பினராக இருந்துகொண்டு, புத்தளம் மாவட்டத்தில் எப்படி கல்வித்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினேனோ அதுபோல ஒரு பாராளுமன்ற உறுப்பினரா கி புத்தளம் மாவட்டத்தில் மூவின மக்களும் இதுவரை காலமும் அனுபவித்துவந்த அத்தனை கஷ்டங்களுக்கும், துன்பங்களுக்கும் விமோசனங்களை பெற்றுக்கொடுப்பேன்.
கடல் வளத்தை பாதுகாக்கவும், மீனவர்கள், விவசாயிகள், சுயதொழில் முயற்சியாளர்கள் ஆகியோரின் வாழ்வாதாரங்களை முன்னேற்றுவதற்கும், மக்களுக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், படித்த மற்றும் படிப்பை பாதியில் கைவிட்ட இளைஞர், யுவதிகளுக்கு அவர்கள் விரும்பும் துறைகளில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது , கல்வி, போக்குவரத்து, சுகாதாரம், விளையாட்டு என அனைத்து துறைகளிலும் புத்தளம் மாவட்டத்தை முன்னேற்றம் அடையச் செய்வதுதான் எமது ஒரே நோக்கமாக உள்ளது.
எனவே, அரசியலில் எங்களை பலவீனப்படுத்த எடுக்கும் ஒவ்வொரு முயற்சிகளையும் நாம் முறியடிப்போம்.
அரசியல் ரீதியாக எங்களை அடிப்படுத்த சிறுபான்மை, பெரும்பான்மை கட்சிகள் எடுக்கும் நடவடிக்கைகளில் இருந்து புத்தளத்தையும், புத்தளம் மாவட்ட மக்களையும் நாம் நிச்சயமாக பாதுகாப்போம்.
எமது அணியில் நேர்மையான வேட்பளார்கள் இருக்கிறார்கள். யார் எங்களை பலகீனப்படுத்த பார்த்தாலும், புத்தளம் மாவட்ட மக்கள் எங்களோடுதான் இருக்கிறார்கள்.
நிச்சயமாக ஐக்கிய ஜனநாயக குரல் கட்சி இந்த தேர்தலில் புத்தளத்தில் இரண்டிற்கும் மேற்பட்ட ஆசனங்களைப் பெறுவதுடன், நாடு முழுவதும் கூடுதலான ஆசனங்களைப் பெற்று இந்த நாட்டின் ஒரு பலமான எதிர்க்கட்சியாக வரும் என்றார்.
(ரஸீன் ரஸ்மின், அரபாத் பஹர்தீன்)