சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயிலுக்கு ” மாகாண சாஹித்ய விருது!
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நடாத்தப்படவுள்ள 2024 ஆம் ஆண்டுடின் இலக்கிய விழாவுக்கு, சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் மாகாண சாஹித்ய விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில், மருத்துவம் சார்ந்த ஆக்கங்களை துறைசார் வைத்திய நிபுணர்கள் ஊடாக பெற்றுக்கொண்டு, அவற்றை தேசிய பத்திரிகை வாயிலாக, பொதுமக்களுக்கு நோய் பற்றிய தெளிவையும், அதிலிருந்து எவ்வாறு பாதுகாப்பு பெற்றுக்கொள்ளலாம் என்ற விழிப்புணர்வுகளையும்
கடந்த பல வருடங்களாக எழுதி வருகின்ற அதேவேளை, அவற்றை நூல் வடிவிலும் தொகுத்து வழங்கி வருகின்றவராக இருக்கின்றார்.
அவ்வாறு தொகுத்தெழுதிய நூல்களில் ஒன்றான “நலன் தரும் மருத்துவம்” என்ற நூல் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தெரிவுசெய்யப்பட்டு அந்நூலுக்கான “சாஹித்ய விருது” கிடைக்கவுள்ளதும்,
கடந்த வருடம் மாகாணத்திலுள்ள எழுத்தாளர்களிடம் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோரிய நூல்களில் இவரின் நூலான “நலன் தரும் மருத்துவம்” தெரிவு செய்யப்பட்டு குறித்த திணைக்களத்தினால் அச்சிடப்பட்டு கொடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
அவர் இதுபோன்ற பல மருத்துவ ஆக்கங்களையும், நூல்களையும் தொடராக எழுதிய வருகின்றவராகவும், அவரினால் தொகுத்தெழுதப்பட்ட “நோயும் தீர்வும்” என்ற முதலாவது நூல் கிழக்கு மாகாணத்தில் மட்டுமல்ல தேசிய ரீதியில் இவ்வாறு எழுதப்பட்ட முதலாவது நூலாக இருந்ததனால் எல்லா மக்களினாலும் பேசப்பட்டு பாராட்டினையும், வாழ்த்துகளையும் பெற்றமை விஷேட அம்சமாகும்.
(மட்டு. துஷாரா)