உள்நாடு

தூய்மையான ஆட்சிக்கு மக்கள் சக்தியை தேர்ந்தெடுங்கள்; களுத்துறை வேட்பாளர் அரூஸ் அஸாத்

நாட்டு மக்கள் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளராக போட்டியிட்ட அநுரகுமார திஸாநாயக்க வை தெரிவு செய்ததைப் போல் ஊழல், இலஞ்சம், வீண் விரயம், அரசியல் பழிவாங்கல்கள் இல்லாத தூய ஆட்சியை முன்னெடுக்க பலமான அரசாங்கத்தையும் தெரிவு செய்வது காலத்தின் தேவையாகும் என தேசிய மக்கள் சக்தி களுத்துறை மாவட்ட வேட்பாளரும், பேருவளை நகர சபை முன்னாள் உறுப்பினருமான அரூஸ் அஸாத் தெரிவித்தார்.

பேருவளை தொகுதியில் உள்ள தர்காநகர், மக்கொன, பயாகலை ஆகிய பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

களுத்துறை மாவட்ட தலைமை வேட்பாளர் டாக்டர். நளிந்த ஜயதிஸ்ஸ உட்பட வேட்பாளர்கள் கலந்து கொண்ட இக் கூட்டங்களில் பெருமளவிலானோர் பங்குபற்றினர்.

அரூஸ் அஸாத் மேலும் கூறியதாவது, நடைபெறவுள்ள தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். இதில் சிறிதேனும் சந்தேகமில்லை. களுத்துறை மாவட்ட மூவின மக்களும் ஒன்றிணைந்து எமக்கு பெரு வெற்றியை பெற்றுத் தர வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி சார்பில் டாக்டர். நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் சிறந்த வேட்பாளர் குழுவொன்று போட்டியிடுகிறது. குறைந்த பட்சம் 8 பாராளுமன்ற பிரதிநிதிகளையாவது இம் மாவட்ட மக்கள் தேசிய மக்கள் சார்பில் தெரிவு செய்ய வேண்டும். அதன் மூலம் கூடிய சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.

நாட்டு மக்களை ஊழல், அதிகார துஷ்பிரயோகம், இலஞ்சம், மோசடிகளற்ற தூய ஆட்சியையே வேண்டி நிற்கின்றனர். அதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வை தெரிவு செய்தார்கள். அதே போல் இனவாதம் இல்லாத ஆட்சியை வேண்டி நின்றனர். 14 ஆம் திகதி மலரப் போகும் தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் இனவாதத்திற்கு ஒரு போதும் இடம் கிடையாது. நாட்டு மக்கள் எதிர்பார்த்த சிறந்த ஆட்சி மலரும்.

தேசிய மக்கள் சக்தியையும், சகோதரர் அநுர குமார திஸாநாயக்க வை பற்றியும் ஜனாதிபதி தேர்தலின் போது போலியான அவதூறுகளை கூறினார்கள். மக்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை. சகோதரர் அநுரகுமார திஸாநாயக்க வை வெற்றி பெறச் செய்தார்கள். இந்த பொதுத் தேர்தலிலும் போலியான கட்டுக்கதைகளை கூறி எதிர் கட்சியினர் வாக்குகளை பெற முயற்சிக்கின்றனர். அந்த முயற்சி கை கூடாது.

எதிர்வரும் ஐந்து வருட ஆட்சி சிறப்பானதாக அமையும். இதற்கு மக்களின் முழுமையான ஒத்துழைப்பு அவசியம். களுத்துறை மாவட்ட சிறுபான்மை சமூகங்களும் இன்று தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக இன்று எம்முடன் கைகோர்த்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் போது இந்த மாவட்டத்திலிருந்தும் சிறுபான்மை பிரதிநிதி அங்கம் வகிக்க வேண்டும். சிறுபான்மை மக்களின் முழுமையான பங்களிப்பு மூலமே அது சாத்தியமாகும் என்றும் கூறினார்.

(பேருவளை பீ.எம் முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *