நாட்டில் உருவாகியுள்ள அரசியல் கலாசாரத்துக்கு ஏற்றதான பாராளுமன்ற கலாசாரத்துக்கு பொருத்தமானவர்களை தெரிவு செய்ய வேண்டியது மக்களின் பொறுப்பாகும்
பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய
எமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்துக்குப் பொருத்தமான புதிய கலாசாரத்தைக் கொண்ட புதிய பாராளுமன்றத்தை உருவாக்க வேண்டியது மக்களின் பொறுப்பாகும்.
இதற்கான சந்தர்ப்பம் இப்போது மக்களுக்கு கிடைத்துள்ளது.நாட்டுக்கான கொள்கை உருவாக்கம்,சட்ட உருவாக்கம் மற்றும் நிதி நிர்வாகம் ஆகிய தேசமொன்றுக்கான பிரதானமான செயல்பாடுகள் பாராளுமன்றத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதற்கு தகுதியான பொருத்தமானவர்களைத் தேர்ந்தெடுத்து பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டியது மக்களின் கடமையும் பொறுப்புமாகும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் களுத்துறை மற்றும் பாணந்துறை தேர்தல் தொகுதிகளில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் உரையாற்றும்போதே பிரதமர் ஹரினி அமரசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மக்கள் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யும் பிரதிநதிகள் மக்களுக்கு பொறுப்புக் கூருபவர்களாக இருத்தல் வேண்டும்.நாட்டின் கொள்கை உருவாக்கம், சட்ட உருவாக்கம் மற்றும் நிதி பரிபாலனம் ஆகிய பிரதானமான மூன்று விடயங்களும் உருவாக்கம் பெறும் இடமாக பாராளுமன்றம் விளங்குகின்றது. இந்த மூன்று விடயங்களுக்கும் மதிப்பளிப்பவர்களையே மக்கள் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.குறைந்தது ஊழல் மற்றும் மோசடி பேர்வழிகளத் தவிர்த்தல் வேண்டும்.இருந்த 225 பேர் தொடர்பில் மக்களுக்கு நன்கு தெரியும்.இவர்கள் மக்களின் வாக்குகளால்தான் பாராளுமன்றம் போனார்கள்.எமது அரசியல் கலாசாரத்தில் திருடர்களையும் பாராளுமன்றம் அனுப்பும் நிலைதான் இருந்தது.
மக்களுக்காக சேவையாற்றுபவர்களை தெரிவு செய்வதற்கு குறைந்தது அவர்கள் கொள்கைக்கு மதிப்பளிப்பவர்களாக இருத்தல் வேண்டும்.சட்டத்தை உருவாக்குபவர் சட்டத்துக்கு மதிப்பளிப்பவராக இருத்தல் வேண்டும்.இவ்வாறு இல்லாதவருக்கு சட்டத்தை உருவாக்க பொறுப்புக் கொடுக்க முடியாது.ஊழல் மோசடி பேர்வழிகளுக்கு நாட்டின் நிதி பரிபாலனத்தை வழங்க முடியாது எனவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
எமது நாட்டில் அரசியல் புது யுகமொன்றை உருவாக்க கடந்த செப்தம்பர் இருபத்தோராம் திகதி தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வழங்கிய ஆணை மிகவும் உறுதியான தீர்மானமாகும்.இந்த மாற்றத்தை உருவாக்க அனைவரும் அர்ப்பணத்துடன் செயல்பட்டனர்.எமது மக்களுக்கு ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றம் என்ற உணர்வு இருக்கவில்லை.இப்போதுதான் மக்களின் சகோதர ஜனாதிபதி ஒருவர் இருக்கின்றார் என்ற உணர்வு மக்களிடம் காணப்படுகின்றது.இந்த மாற்றம் இருபத்தோராம் திகதிக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றம் என்றே நான் நம்புகிறேன்.
தேசிய மக்கள் சக்தி என்ற தேசிய வேலைத் திட்டத்தை கட்டியெலுப்ப மக்கள் காட்டிய ஆர்வமும் அர்ப்பணிப்புகளும் மகத்தானது.இதனால்தான் எமது கோட்பாட்டை நாட்டின் நிறைவேற்று ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க முடிந்தது.இப்போது நாம் ஆரம்பித்துள்ளது பயணத்தின் தொடக்கம் மாத்திரமாகும். “வளமான தேசம் அழகான வாழ்க்கை” என்ற எண்ணக்கருவை முன்னெடுக்க உலகிலேயே சிறிய அமைச்சரவையான மூன்று உறுப்பினர்களுடன் ஆரம்ப பணியை தொடங்கியுள்ளோம்.தேசத்தின் நிலையான வெற்றிக்காக அர்ப்ணத்துடன் செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.
களுத்துறை மாவட்ட வேட்பாளர்களான சட்டத்தரணி நிலந்தி கொட்டகச்சி, சந்திம ஹெட்டியாரச்சி மற்றும் களுத்துறை தொகுதி வேட்பாளர்களும் உரையாற்றினர்.
(எம்.எஸ்.எம்.முன்தஸிர்)