உள்நாடு

இவ்வாறு நடந்தால் கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்திக்கு 11 ஆசனங்கள்

நாட்டில் அதிக வாக்காளர்களையும் அதிக பாராளுமன்ற‌ ஆசனங்களையும் கொண்ட எமது கம்பஹா மாவட்டத்தில் பொதுத்தேர்தல் முடிவுகள் எவ்வாறு அமையும்? யாருக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்று பல்வேறு கலந்துரையாடல்கள் மற்றும் பதிவுகளை சமூக ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது. 

முதலில் அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை சற்று ஆராய்வோம். 1,881,129 பதிவு செய்யப்பட்ட கம்பஹா மாவட்டத்தில் 1,487,770 (79.09%) வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. எனினும் அவற்றில் 29,381 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்ததனால் செல்லுபடியான வாக்குகள் 1,458,389 ஆகும். 

பொதுவாக ஜனாதிபதி தேர்தலை விட அதனை தொடர்ந்து வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவடையும். முன்னைய தேர்தல்கள் தொடர்பான புள்ளி விபரங்களில் அதனை அவதானிக்கலாம்.

எனினும் இக்கட்டுரையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதேபோன்று இப் பொதுத்தேர்தலிலும் அளிக்கப்பட்டால் 19 ஆசனங்களைக் கொண்ட கம்பஹா மாவட்டத்தில் எந்தெந்த கட்சி எத்தனை ஆசனங்களை பெறும் என்று ஆராய்வோம்.

தற்போது அமுலில் உள்ள விகிதாசார தேர்தல் முறையில் அமுலில் உள்ள வெட்டுப்புள்ளி 5% இனை விட குறைவாக பெற்றுக்கொண்ட கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் போட்டியிலிருந்து நீக்கப்படும். 

கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களான அநுர குமார திஸாநாயக்க, சஜித் பிரேமதாச, ரணில் விக்கிரமசிங்க, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர ஆகியோரின் கட்சிகள் கம்பஹா மாவட்டத்தில் இம்முறை பொதுத் தேர்தலிலும் போட்டியிடுவதால் அவர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்றுக்கொண்ட வாக்குகளை அதேபோன்று பொதுத்தேர்தலிலும் பெற்றுக்கொண்டால் எவ்வாறு ஆசனங்கள் பகிரப்படும் என்று ஆராய்வோம்.

கீழேயுள்ள படத்தில் குறித்த வேட்பாளர்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பெற்றுக்கொண்ட வாக்குகளாகும்.

அதனடிப்படையில் 5% வெட்டுப்புள்ளியை பெற்றுக்கொள்ளாத SLPP (பொஹொட்டுவ) மற்றும் திலித் ஜயவீரவின் சர்வஜன பலய ஆகிய கட்சிகள் போட்டியிலிருந்து நீக்கப்படுகின்றன.

விகிதாசார தேர்தல் முறையில் மாவட்டத்தில் வெற்றி பெறும் கட்சிக்கு போனஸ் ஆசனம் கிடைக்கும். அதனடிப்படையில் அதிக வாக்குகளைப் பெற்றுக்கொண்ட  தேசிய மக்கள் சக்திக்கு போனஸ் ஆசனம் செல்லும்.

அதனடிப்படையில் மீதி 18 ஆசனங்கள் 5% வெட்டுப்புள்ளியை தாண்டிய கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் அடிப்படையில் பகிரப்படும். 

செல்லுபடியான வாக்குகள் 1,458,389 இலிருந்து 5% இனை விட குறைவாகப்பெற்ற கட்சிகளின் வாக்குகளை கழித்தால் 1,374,988 வரும். அதனை 18 ஆசனங்களால் பிரித்தால் 76,388 வாக்குகள் ஆகும்.

அதாவது, மேலே கூறப்பட்டது போல நடைபெற்றால் கம்பஹா மாவட்டத்தில் அரசியல் கட்சியொன்று அல்லது சுயேட்சை குழு ஒன்று ஆசனம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கான பெற்றுக்கொள்ள வேண்டிய வாக்குகள் 76,388 ஆகும்.

NPP இற்கு ஏற்கனவே ஒரு போனஸ் ஆசனம் சென்று விட்டது. மிகுதி 18 ஆசனங்களும் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் அடிப்படையில் பின்வருமாறு பகிரப்படும்.

படத்தில் 1 என்று இருப்பது ஒவ்வொரு சுற்றிலும் ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் என்பதுடன், அதற்கு கீழ் உள்ள இலக்கங்கள் குறித்த‌ சுற்றில் ஆசனம் ஒதுக்கப்பட்டதனை தொடர்ந்து அதாவது, 76,388 வாக்குகளை கழித்ததனை தொடர்ந்து வரும் மீதி ஆகும். 

NPP – தேசிய மக்கள் சக்தி (திசைகாட்டி)

SJB – ஐக்கிய மக்கள் சக்தி (தொலைபேசி)

NDF – புதிய ஜனநாயக முன்னணி (சிலிண்டர்)

இவ்வாறு ஆசனங்கள் பகிரப்படும் போது 16வது ஆசனத்தை தேசிய மக்கள் சக்தி தனது 10வது ஆசனமாக பெற்றுக்கொள்ளும். அதனை தொடர்ந்து 03 ஆசனங்கள் மீதி என்பதுடன், எந்தவொரு கட்சிக்கும் 76,388 வாக்குகள் மீதி இல்லை. 

எனவே ஆகக்கூடிய மீதியை (63,252) உடைய சிலிண்டர் கட்சிக்கு 17வது ஆசனமும் அதனை அடுத்ததாக கூடிய மீதியை (45,530) கொண்ட தேசிய மக்கள் சக்திக்கு 18வது ஆசனமும், அதற்கு அடுத்தபடியாக அதிகூடிய மீதியை (43,998) கொண்ட ஐக்கிய மக்கள் சக்திக்கு 19வது ஆசனமும் பகிரப்படும். 

இறுதியில் தேசிய மக்கள் சக்தி மொத்தமாக 11 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி மொத்தமாக 05 ஆசனங்களையும் சிலிண்டர் (NDF – புதிய ஜனநாயக முன்னணி) 03 ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும்.

மேற்கூறிய விடயங்கள் கடந்த ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை போன்றே இம்முறை பொதுத்தேர்தலிலும் அரசியல் கட்சிகள் வாக்குகளை பெறும் பட்சத்தில் ஆசனங்கள் எவ்வாறு பகிரப்படும் என்ற விளக்கம் மட்டுமே ஆகும்.

வழமை போன்று இம்முறையும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பு வீதம் குறைவடையும் சாத்தியம் இருப்பதுடன், நிராகரிக்கப்படும் வாக்குகளும் அதிகமாகலாம். அவ்வாறு நடந்தால் ஆசன எண்ணிக்கையை தீர்மானிக்கும் வாக்கு எண்ணிக்கையிலும் கணிசமான அளவு மாற்றம் ஏற்படும்.

அத்துடன் பிரபல அரசியல்வாதியும் நடிகருமான ரஞ்சன் ராமநாயக்க (ஐக்கிய மக்கள் குரல் – மைக்) மற்றும் பிரபல வர்த்தகரும் தெரண வலையமைப்பின் தலைவருமான திலித் ஜயவீர (சர்வஜன பலய – பதக்கம்) ஆகியோர் நேரடியாக கம்பஹா மாவட்டத்தில் தத்தமது கட்சியில் குதித்துள்ளதுடன் பெரும் தொகை பணம் செலவிட்டு மாவட்டம் முழுவதும் முழுவீச்சில் வாக்கு வேட்டை நடாத்தி வருகின்றனர். 

அவர்களும் 5% வெட்டுப்புள்ளியை தாண்டும் பட்சத்தில் ஆசனங்கள் கிடைக்கும் சாத்தியம் இருக்கிறது. 

கள நிலவரங்கள் இறுதிக்கட்டத்திலும் மாறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *