விளையாட்டு

பெட் கமின்ஸின் சகலதுறை அசத்தலால் பாகிஸ்தானை போராடி வீழ்த்தியது ஆஸி

சுற்றுலா பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பெட் கமின்ஸின் சகலதுறை அசத்தலால் 2 விக்கெட்டுக்களால் போராடி வென்ற அவுஸ்திரேலிய அணி தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது.

இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (4) மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் பாகிஸ்தான் அணியின் சார்பில் சைம் ஐயூப் மற்றும் இர்பான் கான் ஆகியோர் சர்தேச அறிமுகத்தினைப் பெற்றுக் கொண்டனர்.

இதற்கமைய நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை பாகிஸ்தான் அணிக்கு வழங்கியது. அதன்படி முதலில் களம் நுழைந்த பாகிஸ்தான் அணியின் ஆரம்ப வீரர்களான சைம் ஐயூப் (1) அப்துல்லாஹ் ஷபீக் (12) ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். பின்னர் ந்த முன்னாள் அணித்தலைரான பாபர் அஸாம் சற்று நிதானமாக ஆடி 37 ஓட்டங்களையும் , தற்போதைய அணித்தலைவரான முஹம்மது ரிஸ்வான் 44 ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்து பெவிலியன் திரும்பினர்.

பின்னர் வந்த வீரர்கள் நிலைக்காமல் போக பின்வரிசையில் வந்த வேகப்பந்துவீச்சாளரான நஸீம் ஷா அதிரடி காட்டி 4 ஆறு ஓட்டங்கள் அடங்களாக 40 ஓட்டங்களை விளாசிக் கொடுத்து ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 203 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் மிச்சல் ஸ்டார்க் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் அணியால் நிர்ணயிக்கப்பட்ட 204 என்ற எட்டக்கூடிய வெற்றி இலக்கினை நோக்கி பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப வீரர்கள் இருவரும் 1 மற்றும் 16 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். இருப்பினும் 3ஆது விக்கெட்டில் இணைந்த ஸ்டீபன் ஸ்மித் மற்றும் ஜோஸ் இங்லிஸ் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இந்த ஜோடி தமக்கிடையில் 85 ஓட்டங்களைப் பகிர்ந்திருக்க ஸ்மித் 44 ஓட்டங்களுடனும், இங்லிஸ் 49 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க , அடுத்தடுத்து வந்த லபுசங்கே மற்றும் மெக்வெல் ஆகியோர் உடன் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் கொடுத்தனர்.

பின்னர் வந்த பின்வரிசை வீரர்களில் சேன் அபோர்ட் 13 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க அணியின் தலைரான பெட் கமின்ஸ் வெற்றிக்குத் தேவையான 32 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுக்க 33.3 ஓர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது அவுஸ்திரேலிய அணி. பந்துவீச்சில் ஹரிஸ் ரௌப் 3 விக்கெட்டுக்களையும், ஷஹீன் அப்ரீடி 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1:0 என முன்னிலை பெற்றது அவுஸ்திரேலிய அணி.

(அரபாத் பஹர்தீன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *