எமது ஆட்சியின் கீழ் அனைத்து இன மக்களும் சுதந்திரமாக வாழ முடியும்
தேசிய மக்கள் சக்தி
இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களது சட்டங்களுக்கும் தேசிய மக்கள் சக்தி மதிப்பளிப்பதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட அமைப்பாளர் சரோஜா போல்ராஜ் 2019 ஆம் ஆண்டு முஸ்லிம்களது விவாக சட்டங்கள் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சை குறித்து உதயம் பத்திரிகை தேசிய மக்கள் சக்தியை தொடர்பு கொண்டு வினவியபோதே அக்கட்சியின் ஊடகப் பிரிவு இவ்வாறு தெரிவித்தது.
இது தொடர்பில் தேசிய மக்கள் சக்தி தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
2019 ஆம் ஆண்டு எமது கட்சியின் மாத்தறை மாவட்ட பெண்கள் அமைப்பாளராக இருந்த சரோஜா போல்ராஜ் மகளிர் தினமொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே முஸ்லிம்களது விவாக சட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்திருந்தார். முஸ்லிம்களது விவாக சட்டங்களை மாத்திரம் குறிப்பிட்டு அவர் கருத்து தெரிவிக்கவில்லை. ஏனைய மதங்களது சட்டங்கள் தொடர்பிலும், குறிப்பாக சிங்கள மக்களது கண்டிய விவாக சட்டங்கள் தொடர்பிலும் கருத்து தெரிவித்திருந்தார். அனைத்து இன பெண்கள் மற்றும் சிறுமிகளது நலன் கருதியே அவர் அன்று அவ்வாறானதொரு கருத்தைத் தெரிவித்திருந்தார். அன்றைய காலப் பகுதியில் அக்கருத்தை முஸ்லிம் அமைச்சர்களோ, தலைவர்களோ எதிர்க்கவில்லை.
இப்போது தேர்தல் காலம் என்பதால், முஸ்லிம் மக்களது வாக்குகளை திசைதிருப்பும் நோக்கில் எதிர்க்கட்சிகள் சரோஜா போல்ராஜ் அன்று தெரிவித்த கருத்தை திரிவு படுத்தி வெளியிட்டு இவ்வாறு மக்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். எவ்வாறாயினும் தேசிய மக்கள் சக்தி இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களது மதங்கள் மற்றும் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளிப்பதற்கு என்றும் பின்நிற்கப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்தது.