உள்நாடு

கிராமப்புற முஸ்லிம்களும் ஹஜ்ஜை நிறைவேற்றும் வகையில் திட்டம் வகுக்க அரசு கவனம் செலுத்தும்

முஸ்லிம் சமூகத்தின் ஐந்து கடமைகளில் ஹஜ் யாத்திரையும் ஒன்று. அந்தப் பொறுப்பை நிறைவேற்றும் போது, அந்த வாய்ப்புகள் சலுகை விலையில் மக்களுக்கு கிடைக்க வேண்டும். மேலும், கொழும்பிலும் கிராமப்புறங்களிலும் வாழும் முஸ்லிம் சமூகத்தினரும் புனித ஹஜ் யாத்திரை நடவடிக்கைகளில் பங்குபற்றும் வகையில் திட்டம் வகுக்கப்பட வேண்டுமெனவும், இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்படும் எனவும்புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார்.

அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் முகவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கும் போது,

ஹஜ் யாத்திரையை ஏற்பாடு செய்யும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்காலத்தில் ஹஜ் தொடர்பான நடவடிக்கைகளை மிகவும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தல் காலத்தில் முஸ்லிம் சமூகத்தில் பரப்பப்படும் அவதூறுகள் குறித்தும் கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் அனைத்து மத நம்பிக்கைகளும் அனுமதிக்கப்படுவதாகவும், இதில் எந்த தடையும் இல்லை எனவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரோ அல்லது பின்னரோ இஸ்லாமிய திருமண விதிகளை மாற்றுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை எனவும், சமூக வலைத்தளங்கள் ஊடாக உலாவரும் ஒவ்வொரு அமைப்பின் கருத்தும் ஐக்கிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கருத்து அல்ல எனவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

மேலும் சவூதி அரசினால் இலங்கைக்கு வருடாந்தம் வழங்கப்படும் ஹஜ் கோட்டா விநியோகம் தொடர்பில் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், 2004ஆம் ஆண்டு அமைச்சரவை அமைச்சராக இருந்த போது முஸ்லிம் பெண்களின் பாடசாலைச் சீருடைக்கு ஹிஜாப் தைக்கத் தேவையான துணியை ஒதுக்குவது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரத்தின் மூலம் தேவையான பணிகளைச் செய்திருந்தமையும் நினைவுகூரப்பட்டது.

இதன்போது, மத கலாசார அமைச்சின் செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, புத்தசாசன. முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், இலங்கை ஹஜ் குழு தலைவர் இப்றாகீம் அன்சார் மற்றும் உறுப்பினர்கள், திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்கள், திணைக்கள அதிகாரிகள், அமைச்சின் அதிகாரிகள் எனப் பலரும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *