வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி. பரிசோதனை
எமது நாட்டில் வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்படுவதாக வைத்திய நிபுணர் விந்தனா கொடிப்பிலி அவர்கள் தெரிவிக்கிறார்.
2022 ஆம் ஆண்டில் 607 ஆகவும் 2023 இல் 694 ஆகவும் பதிவாகியுள்ளது.
எய்ட்ஸ் நோயாளிகள் அதிகரிக்காமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வைத்திய நிபுணர் விந்தனா கொடிப்பிலி அவர்கள் கடுமையான முயற்சியில் இறங்கியுள்ளார். அவர்களுக்கு நாமும் ஒத்துழைப்பு வழங்கி எய்ட்ஸ் நோய் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம்.
தேசிய எய்ட்ஸ் வைத்திய நிபுணர் விந்தனா கொடிப்பிலி அவர்களின் அறிக்கையிலிருந்து தெரியவருவதாவது இலங்கையில் இளம் வயதினர் மத்தியில் எய்ட்ஸ் நோய் அதிகரித்திருப்பது என்பதே.
உலக சுகாதார அமைப்பினால் எயிட்ஸ் நோய் உலக பரவு நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. எய்ட்ஸ் என்பது தேடிப்பெற்ற நீர்ப்பிடணக் குறைபாடு நோய்த்தொகுதி என்பதாகும். எச்.ஐ.வி. என்னும் வைரஸ் மூலமே இந்நோய் உருவாகிறது. எச்.ஐ.வி. வைரஸ் உடலினுள் புகுந்து வெண்குருதிக் கலங்களைத் தாக்கி நோய் எதிர்ப்பு சக்தியைப் பலவீனப்படுத்துகிறது. இதனால் எய்ட்ஸ் பீடிக்கப்பட்ட ஒருவர் விரைவில் மரணத்தைத் தழுவுகிறார்.
எச்.ஐ.வி. வைரஸ் 3 வழிகளில் ஒருவருக்குக் கடத்தப்படலாம். அவையாவன 1. நோயுற்றவர்களுடன் பாதுகாப்பற்ற முறையில் உடலுறவு கொள்ளுதல், 2. நோயாளரின் குருதியை மற்றையவருக்கு மாற்றுவதன்மூலம் அல்லது நோயாளி பாவித்த ஊசியை வேறுறொருவருக்கு பயன்படுத்துவதன் மூலம், 3. நோயுள்ள தாய் தன் கருவிலுள்ள குழந்தைக்குக் கடத்தல். இந்நோயின் பாதிப்பிலிருந்து சிறுவரைப் பாதுகாக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்படுகிறது. அதேவேளை பெற்றோருக்கும் இது பற்றிய விழிப்புணர்வு அவசியம்.
இலங்கையில் முதலாவது எய்ட்ஸ் நோயாளி 1987 ஆம் ஆண்டு தொழில் நிமித்தம் நைஜீரியா சென்று நாடு திரும்பிய களுத்துறை மாவட்ட வாசி ஒருவரை இனம் காணப்பட்டதை அடுத்து இலங்கை தம்மை உசார் படுத்திக் கொண்டது. அன்று தொடக்கம் 31.10.1997 வரை 76 பேர் எய்ட்ஸ் நோய்க்கு இலக்காகி 61 பேர் இறந்தனர். இவர்களில் ஆண்கள் 46 பேர், பெண்கள் 15 பேர் ஆகும். 2012ஆம் ஆண்டில் இலங்கையில் எய்ட்ஸ் தொற்றினால் 1597 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 22 பேர் மரணமடைந்துள்ளதாகவும் தேசிய பாலியல் நோய் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தற்போது
இலங்கையில் தொடர்ச்சியாக எச்.ஐ.வி. தொற்று அதிகரிப்பதற்கான காரணங்கள் குறித்த ஆய்வுகளின் போது, பாலியல் தொழிலாளர்களுக்கு ஊடாகவே நாட்டில் அதிகளவானவர்கள் எச்.ஐ.வி. தொற்றுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் அவதானத்துடன் நோக்கப்பட வேண்டியவர்கள் என்று எச்.ஐ.வி – எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பின் அதிகாரி தெரிவித்தார். இலங்கையில் ஆயிரக்கணக்கில் பெண் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாக
எச்.ஐ.வி – எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புள்ளி விபர முடிவுகளின்படி உலக சனத்தொகையில் கிட்டத்தட்ட 3 கோடி 80
இலட்சம் மக்களுக்கு மேல் எச். ஐ. வி. தொற்றுடன் வாழ்ந்து வருகின்றார்கள். உலகத்தில் தென் ஆபிரிக்காவே அதிகளவில் எச்.ஐ.வி. நோயாளிகளைக் கொண்டிருக்கின்றது. இதைத் தொடர்ந்து நைஜீரியாவும் இந்தியாவும் உள்ளன. இலங்கையில் எச்.ஐ.வி, எய்ட்ஸ் உடன் 4500 இற்கும் அதிகமானோர் வாழ்ந்து வருகின்றனர்.
ஆனால் 3169 பேர் மாத்திரமே சிகிச்சை பெறுகின்றனர். எச்.ஐ.வி. தொற்றிலிருந்து பாதுகாத்து கொள்ளவோ அல்லது, முழுமையாக மீள்வதற்கோ இன்னமும் தடுப்பு மருந்து இன்னும் பூரணமாக கண்டுபிடிக்கப்படவில்லை என்ற போதும், உயிரியல் விஞ்ஞானிகள் அதற்கான தீர்வை நோக்கி வேகமாக பயணித்து வருகிறார்கள். எச்.ஐ.வி.யை எதிர்க்கும் திறன் கொண்ட நோய் எதிர்ப்பாற்றல் குருதியணுக்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரபல நோபல் பரிசு பெற்ற மருத்துவவியலாளர் டேவிட் பல்டிமோர், தமது பரிசோதனைகளை எலிகளில் நிகழ்த்திய போது அனுகூலங்களான முடிவுகள் பெறப்பட்டதாக கூறுகிறார்.
ஆண் விருத்தசேதனமானது எச்.ஐ.வி நோய்த்தொற்று அபாயத்தை அறுபது சதவிகிதம் குறைக்கின்றன என சுற்று மாதிரி கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தெரிவிக்கின்றன. இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் போக்கு கணக்கற்ற நடைமுறை, கலாச்சார மற்றும் கருத்து சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியிருக்குமென்றாலும் இது பல நாடுகளில் உத்வேகத்துடன் பரிந்துரைக்கப்டுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
எய்ட்ஸ் நோய் உலகிற்கு ஓர் அச்சுறுத்தல். இந் நோயானது வெகு விரைவில் மரணத்தை சம்பவிக்ககூடியது. இந் நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதன் மூலமே முற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்லலாம்.
நோய்த்தடுப்பு யுத்திகள் நன்கறியப்பட்டுள்ள போதிலும் கணிசமான அளவு இளைஞர்கள் எச்.ஐ.வி, எய்ட்ஸ் பற்றிய அறிவைப் பெற்றிருந்த போதிலும், தாங்கள் எச்.ஐ.வி தொற்றுதலுக்காளாகும் அபாயத்தைக் குறைவாக மதிப்பிட்டு, பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைளில் இறங்குகின்றனர் என எச்.ஐ.வி, எய்ட்ஸ் ஒழிப்பு அமைப்பு கூறுகின்றது.
பாலியல் தொழிலாலும் ஓரினச் சேர்க்கையாலும் இலங்கையில் எய்ட்ஸ் நோய் பரவுகின்றன.
இலங்கையில் விபச்சார விடுதிகள் எய்ட்ஸ் நோயாளிகளை உருவாக்கும் நிலையமாகவுள்ளது. எனவே விபச்சார விடுதிகளை முற்றாக ஒழித்துக் கட்டுவதிலேயேதான் எய்ட்ஸினை முற்றாக ஒழித்துக் கட்ட முடியும் என்ற நோக்கில் பொலிஸாரும் விபச்சார விடுதிகளை தேடி கண்டுபிடித்து விபச்சாரிகளையும் விடுதிகளை நடத்துபவர்களையும் கைது செய்கின்றனர். இது வரவேற்கத்தக்க விடயமாகும்.
பாலியல் தொழிலாலும் ஓரினச் சேர்க்கையினாலும் இலங்கையில் எய்ட்ஸ் நோய் பரவுகின்றன. கடந்த காலங்களை விட தற்போது 15, 16, 17 வயது மாணவர்கள் அதிகளவில் விபசாரத்தில் ஈடுபடுவதாகவும் தெரியவருகிறது. எதிர்காலங்களில் மாணவர்கள் மத்தியில் அதிகளவு எய்ட்ஸ் நோயாளிகள் உருவாகும் அபாயம் தோன்றியுள்ளது எனவும் அதிர்ச்சியான தகவல்கள் தெரிவிக்கிறது. எனவே பெற்றோர்கள் இது விடயத்தில் கூடிய கவனம் எடுக்குமாறு வேண்டப்படுகின்றனர். சிறுவர்கள் ஆபாச படங்களை பார்ப்பதனால்தான் விபசாரத்திற்கு தள்ளப்படுகின்றனர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் மதவழிபாட்டு போதகர்களும் ஆபாச படங்களை பார்ப்பதிலிருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கான புத்திமதிகளை எடுத்துக் கூறி மாணவர் சமுதாயத்தை பாதுகாக்க முன்வர வேண்டும்.
பாலியல் உறவை திருமண வாழ்க்கைக்குள் மாத்திரம் வரையறுப்பதன் மூலம் எய்ட்ஸ் நோயிலிருந்து பாதுகாப்பு பெற முடியும்.
பாலியல் தொழிலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் எய்ட்ஸ் நோய் இல்லாத மனித சமுதாயத்தை உருவாக்கலாம்.
2030 ஆம் ஆண்டில் எச்.ஐ.வி. நோயாளர்களின் எண்ணிக்கையை பூச்சியமாக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்கும் முயற்சிக்கு நாமும் ஒத்துழைப்பு வழங்குவது அவசியம்.
கலாபூஷணம் பரீட் இக்பால் – யாழ்ப்பாணம்.