உள்நாடு

பொய் சொல்லும் கம்மன்பிலவின் தொழில் 14ஆம் திகதிக்குப்பின் முடிவுக்கு வரும்; அமைச்சர் விஜித ஹேரத்

“முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஓர் அரசியல் அநாதை. அரசியல் அடைக்கலம் கோருவதற்காகவே அரசாங்கத்தின் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். கம்மன்பில போன்றவர்களுக்குப் பொய் கூறுவதே தொழில். எதிர்வரும் 14 நாட்களில் இந்தத் தொழிலும் இல்லாமல் போய்விடும்” என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

நீர்கொழும்பில் நேற்று (31) இடம்பெற்ற தீபாவளி வழிபாடுகளின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “நாங்கள் ஆட்சிக்கு வந்து குறுகிய காலத்தில் நாட்டை மாற்றக்கூடிய குழுவே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ளதென்பதை உறுதிப்படுத்தியிருக்கிறோம். மிகவும் அமைதியான முறையில் தேர்தல் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. இதுபோன்ற பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வோம்.

அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாகவும் ஜனவரியிலிருந்து அதனைப் பெற்றுக்கொடுக்க முடியுமென்றும் கடந்த அரசாங்கம் நாட்டுக்கு அறிவித்தது. ஆனால், இது போலி வாக்குறுதியாகும். ஜனாதிபதித் தேர்தல் நெருங்கிய சந்தர்ப்பத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பளக் கொடுப்பனவை அதிகரிப்பதாகக் கூறினார்கள். ஆனால், அதற்காக நிதி அமைச்சில் நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இந்த யோசனைக்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கும்போது நிதி அமைச்சின் மதிப்பாய்வையும் பெற்றுக்கொள்ளவில்லை.

ஆனால், சம்பள அதிகரிப்புக்குத் தேவையான பணம் இருப்பிலில்லை. தேர்தலை இலக்கு வைத்து நாங்கள் எந்த வாக்குறுதியையும் வழங்க மாட்டோம். எனவே, அடுத்த வருடத்தில் அரச உத்தியோகத்தர்களின் சம்பள அதிகரிப்பை வழங்க நடவடிக்கை எடுப்போம். நிதி இருப்பின் அடிப்படையிலேயே அது தொடர்பில் தீர்மானம் எடுப்போம். எனவே, அரச உத்தியோகத்தர்களை நாங்கள் ஏமாற்றியதும் இல்லை. ஏமாற்றவும் மாட்டோம். ரணில் ராஜபஷக்களைப்போன்று பொய்கூற மாட்டோம்.

பணம் அச்சிடப்படவில்லையென்றும் பணம் அச்சிடப்பட்டதாகக் கூறப்படும் தகவல் அடிப்படையற்றதென்றும் தவறான கருத்தென்றும் மத்திய வங்கி தெளிவாக அறிவித்திருக்கிறது. எனவே, அரசியல் அநாதைகளாகியுள்ள, அரசியல் அடைக்கலம் கோருபவர்களாக இருப்பவர்களே வெவ்வேறு கருத்துகளை முன்வைக்கிறார்கள்.

மக்களை ஏமாற்றுவதற்காகவும் அவர்களின் கவனத்தைத் திசை திருப்புவதற்காகவுமே இதுபோன்ற பொய்களைக் கூறி வருகிறார்கள். பொய் கூறுவதே இவர்களின் தொழில். இன்னும் 14 நாட்களுக்கே இவர்களால் இந்தத் தொழிலை முன்னெடுக்க முடியும்.

கம்மன்பில அடிப்படையற்ற பொய்களையே கூறி வருகிறார். 2022 ஆம் ஆண்டு எமது அரசாங்கத்துக்கு பெற்றுக்கொடுக்கவேண்டிய நிதி தொடர்பில் உலக வங்கி விளக்கமளித்திருக்கிறது. அதனைப் பகுதி அடிப்படையில் வழங்க இணக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 500 டொலர் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு தொகுதியே உலக வங்கியிடமிருந்து தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. அதற்கப்பால் புதிதாக கடனெதுவும் பெறவில்லை. ரணில் விக்கிரமசிங்க மூன்று மாதங்களில் ஆட்சியைப் பொறுப்பேற்பதற்கு முன்னர் பொதுத் தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *