உள்நாடு

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் இலங்கை மாணவர்களுக்கு அல்லாமா இக்பால் புலமை பரிசில் வழங்கி வைப்பு

இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம், பாகிஸ்தான் உயர் கல்வி ஆணைக்குழுவின் ஒத்துழைப்புடன் தகுதியான இலங்கை மாணவர்களுக்கான அல்லாமா இக்பால் புலமைப்பரிசில் விருது வழங்கல் 2024 நிகழ்வினை 30 அக்டோபர் 2024 அன்று ஏற்பாடு செய்திருந்தது. இப்புலமைப்பரிசிலானது பாகிஸ்தானின் தலைசிறந்த கவிஞரும் தத்துவயானியுமாக திகழ்ந்த அல்லாமா முஹம்மது இக்பால் அவர்களின் பெயரில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது.

இப்புலமைப்பரிசில் திட்டமானது 2019 இல் ஆரம்பிக்கப்பட்டது. இவ்வருடம் இப்புலமைப்பரிசில் திட்டத்தின் மூலம் இலங்கை முழுவதும் உள்ள தகுதியான 200 மாணவர்களுக்கு பாகிஸ்தானில் உயர்கல்வியினை தொடர்வதற்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன. தற்போது, சுமார் 500 மாணவர்கள் ஏற்கனவே பட்டதாரி, முதுகலை மற்றும் பிஎச்டி அளவில் தங்கள் கல்விப் பட்டங்களைத் தொடர்கின்றனர். மேலும், அடுத்த ஆண்டுக்கான இப்புலமைப்பரிசிலுக்கான விண்ணப்பம் 2025ம் ஆண்டு பெப்ரவரியில் கோரப்படும்.

பாகிஸ்தானின் உயர் ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் (ஓய்வு நிலை) பாஹீம் உல் அஸீஸ் இந்நிகழ்வில் உரையாற்றும் போது, பாகிஸ்தான்-இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்டகால உறவு காணப்படுவதாகவும், பாகிஸ்தானில் கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் பாகிஸ்தானியர்களின் விசேட விருந்தினர்கள் என்றும், இம்மாணவர்கள் சிறப்பான முறையில் உபசரிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிட்டார். இலங்கை முழுவதிலும் உள்ள அனைத்து இனத்தவர்களும் பாலினம் மற்றும் சமய வேறுபாடின்றி நியாயமான முறையில் இப்புலமைப்பரிசிலுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு மாணவர்களும் பாகிஸ்தானில் தங்கள் உயர்கல்வியினை வெற்றிகரமாக முடித்து இலங்கைக்கு திரும்பியதும், அவர்கள் ஒவ்வொருவரையும் பாகிஸ்தானின் தூதுவர்களாக பாகிஸ்தான் கருதுகிறது என்று மேலும் அவர் குறிப்பிட்டார்.

பாதுகாப்புப்படைகளின் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பிரதம அதிதியாக கலந்துகொண்ட இந்நிகழ்வில் வர்த்தகர்கள், கல்விமான்கள், அரச அதிகாரிகள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். பிரதம அதிதி, உயர்ஸ்தானிகர் மற்றும் ஏனைய முக்கிய பிரமுகர்கள் புலமைப்பரிசில் விருதுகளை மாணவர்களுக்கு பகிர்ந்தளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *