Thursday, October 31, 2024
Latest:
உள்நாடு

தேர்தல் மேடையில் பெரும் வீராப்பு பேசினாலும் இன்று ஜனாதிபதி சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிடுகிறார்..! -ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

தற்போது எமது நாடு மிகவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி தேர்தல் மேடைகளில் நாட்டு மக்களுக்கு பல வாக்குறுதிகளை வழங்கினார். வரிச்சுமை குறையும் என நாடு காத்திருந்து. IMF உடனான பேச்சுவார்த்தைக்கு பின், வரி குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை. VAT, நேரடி மற்றும் மறைமுக வரிகளை குறைக்க முடியாது போயுள்ளது. அநுர குமார திசாநாயக்க தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளையும் அவரால் நிறைவேற்ற முடியாதுபோயுள்ளது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தலை இலக்காக் கொண்டு ஐக்கிய மக்கள் சக்தியின் தெமடகொட கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் (27) தெமடகொட பிரதேசத்தில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் ஜனக நந்த குமார அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தேர்தல் மேடையில் பெரும் வீராப்பாக பேசினாலும், சர்வதேச நாணய நிதியத்தின் முன் மண்டியிட வேண்டி ஏற்பட்டுள்ளது. IMF இன் அடுத்த மீளாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நாடு முன்னோக்கி செல்ல வேண்டுமாயின், வரிச்சுமையை குறைக்க வேண்டுமாயின், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை திருத்த வேண்டுமாயின், சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு ஐக்கிய மக்கள் சக்தி சர்வதேச நாணய நிதியத்துடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி, மக்கள் ஆணை கிடைத்தால் இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்வதாகக் கூறியது. அதை ஏற்று மக்களை நிர்க்கதிக்கு ஆளாக்கும் திட்டத்தை நீக்குவதாக உறுதியளித்தனர். எனவே தான் இந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கிறோம். இதன் ஊடாக சர்வதேச நாணய நிதியத்தின் புதிய உடன்படிக்கையை எட்ட முடியும் என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *