பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாயத் தேவையாகும்; ஐக்கிய தேசிய கட்டமைப்பு வேட்பாளர் சியாம் நாகூர்
பாரளுமன்றத் தேர்தலைப் பொறுத்தவரையில் இதுகால வரையில் பதுளை மாவட்டத்தின் பெருங்குறையாகவிருக்கும் முஸ்லிம் பிரதிநதித்துவம் இல்லாமலிருப்பது மிகவும் கவலைக்குரியதொரு விடயமாகும். ஆக இக் குறைபாடானது நீக்கப்பட வேண்டும். இது விடயத்தில் எமது சமூகம் ஒன்றுபட்டு சிந்தித்து செயலாற்றவேண்டும். பாராளுமன்றத்தில் எமக்கான குரலும் ஓங்கி ஒலிக்க வேண்டும். எனவே பதுளை மாவட்ட முஸ்லிம் பிரதிநிதித்துவம் காலத்தின் கட்டாயத் தேவையாகும். இதனை சரியாகப் புரிந்துகொண்டு தூரநோக்கொடு வாக்களிக்க முன்வர வேண்டும்.
இவ்வாறு பதுளை மாவட்டத்தில் ‘ஐக்கிய தேசியக் கூட்டமைப்பில் போட்டியிடும் வர்த்தகப் பிரமுகரும், சமூக சேவையாளருமான சியாம் நாகூர் ஹாஜியார் தெரிவித்தார்.
சியாம் நாகூர் ஹாஜியின் தேர்தல் அலுவலகம் பதுளை – பதுளுப்பிட்டிய தண்ணீர் தாங்கிக்கும், பஃதமிழ் மகளிர் கல்லூரிக்கும் அண்மித்த பதுளுப்பிட்டிய வீதியில் திறந்து வைக்கப்பட்டது. இதன்போது மக்கள் மத்தியில் கருத்துரைக்கையிலே வேட்பாளர் சியாம் நாகூர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நிகழ்வில் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரின் மக்கள் தொடர்பு, ஊடக இணைப்பாளர் பாபு ஆனந்தராஜா, ரூஃபில் மௌலவி, ரினாஸ் மௌலவி, ஃபாயிஸ் ஆசிரியர் ஆகியோரும் உரை நிகழ்த்தினர்.
சியாம் மேலும் உரை நிகழ்த்துகையில் நான் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பில் ‘தராசு’ சின்னத்தில் முதன்மை வேட்பாளரான முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் சகிதம், போட்டியிடுகின்றேன். இதற்கு முன்னரும் இவ்வாறு தராசு சின்னத்தில் போட்டியிட்டும் தேர்தல் நடைபெறவில்லை.
எமது முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சர் அ. அரவிந்தகுமார் மாவட்ட ரீதியிலும், மாகாண ரீதியிலும், தேசிய மட்டத்திலும் இன, மத, மொழி, பிரதேச போதமேதுமின்றி பலதரப்பட்ட சிறந்த சேவைகளைப் புரிந்திருக்கின்றார்.
குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் பள்ளிவாசல்கள், பாடசாலைகள், நலன்புரி அமைப்புகள் என பெருமளவு நிதியுதவியினையையும் வழங்கி பணியாற்றியிருக்கிறார். அவர்தம் பதுளை மாவட்ட முஸ்லிம் விவகார இணைப்பாளராகவும் கடமையாற்றிய நானும் அவரிடமிருந்து எமது சமூகத்திற்காக குறித்த தனியான நிதியுதவிகளைப் பெற்று பலதரப்பட்ட சேவைகளை செய்திருக்கிறேன்.
நான் அரசியலுக்கு வரமுன்னரே இவ்வாறான பல்வேறு வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட சமூக சேவைகளைப் புரிந்திருக்கிறேன்.
ஆக எமது சமூகத்திற்காகவும் சேவையாற்றிய முன்னாள் அமைச்சர் அரவிந்தகுமாரின் சேவைகளையும் நாம் மறக்க முடியாது. அவருக்காக நாம் நன்றிக்கடன் பட்டவர்களாகவும் நாம் இருக்கின்றோம்.
சரியான போட்டியான இக்காலக்கட்டத்தில் நாம் எமது வாக்குப் பலத்தை சரியாக, பிரயோசனமாக பிரயோகிக்க வேண்டும். தூரநோக்கோடு சிந்தித்து செயலாற்றவேண்டும். நாம் ஒற்றுமைப்பட்டால் நிச்சயம் வெற்றியைப் பெறலாம். பதுளை மாவட்டத்தில் ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக்கொள்ளலாம். ஆக, இதற்காக நாம் அனைவரும் இனம், மதம், மொழி, பிரதேசம், கட்சி வேறுபாடின்றி கைகோர்த்து செயற்பட முன்வர வேண்டும்! என்றார்.
(அப்துல் வாஹிட் ஏ. குத்தூஸ்)