உள்நாடு

அமெரிக்கத் தூதரகமும் சேவ் த சில்ட்ரன் அமைப்பும் பாடசாலை போசாக்கு நிகழ்ச்சித் திட்டத்தினை நகர்ப்புற கொழும்பு பாடசாலைகளுக்கு விஸ்தரிக்கின்றன..!

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தினால் (USDA) நிதியளிக்கப்படும் McGovern-Dole சர்வதேச சிறார்களின் போசாக்கு மற்றும் கல்விக்கான உணவு எனும் நிகழ்ச்சித்திட்டமானது இம்மாதம் கொழும்புப் பிரதேசத்திலுள்ள பாடசாலைகளையும் உள்ளடக்கும் விதத்தில் விஸ்தரிக்கப்படுகையில், அது நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து அவதானிப்பதற்காக கொழும்பு மஹரகமவில் அமைந்துள்ள புவனேகபா ஆரம்பப் பாடசாலைக்கு அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் 2024 ஒக்டோபர் 30 ஆம் தேதி விஜயமொன்றை மேற்கொண்டார். தனது விஜயத்தின்போது தூதுவர் சங் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பாடசாலைக்கான உணவு வழங்குநர்கள் ஆகியோரைச் சந்தித்தார். இந்நிகழ்ச்சித்திட்டம் குழந்தைகளின் ஆரோக்கியத்திலும், அவர்களது கல்வி வெற்றியிலும் எவ்வாறு ​சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்துகிறது என்பது தொடர்பான கருத்துக்களை அவர்கள் தூதுவருடன் பகிர்ந்துகொண்டனர்.

இங்கு கருத்துத் தெரிவித்த தூதுவர் ஜுலீ சங், “உங்களது பாடசாலையில் ஒரு காலைப் பொழுதினை அனுபவிப்பதற்காக இங்கு மஹரகமைக்கு வருகை தந்ததையிட்டு நான் பெருமையடைகிறேன். காலையுணவு முதல் வகுப்பறை நடவடிக்கைகள் வரை, ஆர்வமுள்ள மாணவர்களின் புன்னகையையும், மீண்டெழும் தன்மையுடைய ஆசிரியர்களின் அர்ப்பணிப்பையும் பார்ப்பது மனதுக்கு இதமாக இருக்கிறது. போசாக்குடைய உணவை வழங்குவதோடு மட்டுமன்றி கல்வி கற்பதற்கான ஒரு சிறந்த சூழலையும் உருவாக்குவதற்கான முன்முயற்சிகளுக்கு உதவி செய்வதில் அமெரிக்கா பெருமிதம் கொள்கிறது. கொழும்பின் நகர்ப்புற பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் இம்முதலீடானது, பிள்ளைகளுக்கும் மற்றும் சமூகங்களுக்கும் மிகவும் தேவையாக இருந்த உதவியினை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒன்றாக இணைந்து பணியாற்றுவதன் மூலம், இந்த மாணவர்களில் நாம் முதலீடு செய்து, தமது கனவுகளை நனவாக்குவதற்கும், இலங்கைக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டமைப்பதற்கும் அவர்களை நாம் வலுவூட்டுகிறோம்.” எனக் கூறினார்.

சேவ் த சில்ட்ரன் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மற்றும் சிறுவர் போசாக்கிற்கான உணவு (PALAMA II செயற்திட்டம்) எனும் USDAஇன் நிகழ்ச்சித்திட்டமானது, பாதிப்பிற்குள்ளாகக்கூடிய நகர்ப்புறப் பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் குறுகியகால பசியினைப் போக்குவதிலும், கல்வி அடைவுகளை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துகிறது. தினசரி பாடசாலை உணவுகளை வழங்குதல், ஆசிரியர்களுக்குப் பயிற்சியளித்தல், கல்வியறிவை மேம்படுத்துதல் மற்றும் பாடசாலைகளில் மாணவர் சேர்க்கையினையும், அவர்களது கல்வியியல் செயற்திறனையும் அதிகரிப்பதற்காக இலங்கை முழுவதுமுள்ள உள்ளூர் சமூகங்களுக்கு உதவிசெய்தல் போன்ற விடயங்கள் இம்முன்முயற்சியின் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.

கடந்த ஆறு ஆண்டுகளாக இலங்கையிலுள்ள ஏழு மாகாணங்களில் இந்நிகழ்ச்சித்திட்டம் ஏற்கெனவே நடைமுறையிலிருந்தபோதிலும், கொழும்பிற்குள் அது விஸ்தரிக்கப்படுவது புதிய விடயமாகும். பாடசாலைக் கல்வியினை இடைநடுவே கைவிடும் விகிதங்கள் தொடர்ந்தும் உயர்வாகக் காணப்படும் நகர்ப்புறங்களில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகளின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக இது  வடிவமைக்கப்பட்டுள்ளது. PALAM/A II நிகழ்ச்சித்திட்டமானது தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சித் திட்டத்திற்கு துணையாக கொழும்பிலுள்ள 44 பாடசாலைகளில் கல்வி கற்கும் 16,231 ஆரம்பப்பாடசாலை மாணவர்களுக்கு தினசரி உணவை வழங்குவதன் மூலம், இக்குழந்தைகள் கல்விகற்பதற்கும் செழித்து வளர்வதற்கும் தேவையான ஊட்டச்சத்து அவர்களுக்குக் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது.

2018ஆம் ஆண்டு முதல் McGovern-Dole நிகழ்ச்சித்திட்டத்தினூடாக இலங்கையில் சிறார்களின் ஆரோக்கியம் மற்றும் கல்வியினை மேம்படுத்துவதற்காக 60 மில்லியன் டொலர்களுக்குமதிகமான பங்களிப்பினை அமெரிக்கா வழங்கியுள்ளது. 10,260 மெட்ரிக் தொன்னிற்கும் அதிகமான அமெரிக்காவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட பொருட்களையும், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 1,820 மெட்ரிக் தொன் சத்தூட்டப்பட்ட அரிசி மற்றும் டின்களில் அடைக்கப்பட்ட மீன் ஆகியவற்றையும் பதுளை, கொழும்பு, கிளிநொச்சி, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை ஆகிய எட்டு மாவட்டங்களுக்கு விநியோகித்தமையும் இந்த உதவிகளுள் உள்ளடங்குகின்றன.

ஒக்டோபர் 2024 மற்றும் 2028 இற்கிடையில் PALAM/A II நிகழ்ச்சித்திட்டத்தின் பயன்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடிய ஏதுநிலையிலுள்ள சமூகங்களுக்கு முன்னுரிமை வழங்கி, 917 ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த 199,136 பாடசாலைப்பருவ வயதுடைய பிள்ளைகளையும், மற்றும் இலங்கை முழுவதுமுள்ள 500 ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்தி (ECD) மையங்களைச் சேர்ந்த 23,200 குழந்தைகளையும் சென்றடையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *