பாராளுமன்றத்தில் சுக போகம் அனுபவிக்கும் சிலருக்கு இத்தேர்தல் பாடம் புகட்டும்; மு.கா வேட்பாளர் சிராஸ் மீராசாஹீப்
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகாமடுல்ல மாவட்டத்தில் மூன்று ஆசனங்களை பெறக்கூடிய நிலைக்கு முன்னேரி வருவதாக நிகாமடுல்ல மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மூன்றாம் இலக்க வேட்பாளரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் முதல்வருமான சிராஸ் மீராசாஹீப் தெரிவித்தார்.(27)
கட்சியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில் நடைபெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு அவர் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையின் முதல்வராகவிருந்து மக்கள் பணி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு உதாரணமாக பிரதேச வேறுபாடுகளின்றி மக்களுக்கு தேவையான விடயங்களை இனம் கண்டு சேவையாற்றியவன் என்ற வகையில் இந்த பாராளுமன்றத் தேர்தலில் நானும் ஒரு வேட்பாளராக களமிறங்கியுள்ளேன் பாராளுமன்றத்திற்கு புதுமுக வேட்பாளராகவிருந்தாலும் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கப் பெறுமாகயிருந்தால் ஒரு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக நான் செயல்பட திடசங்கற்பம் பூண்டுள்ளேன்.
மக்கள் வாக்குகளைப் பெற்று சுகபோகம் அனுபவிக்கின்றவர்களுக்கு மத்தியிலிருந்து அவர்களது வாக்குகளால் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒருவனாக இந்தப் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப் பெறுமானால் செய்து காட்ட தயாராகவுள்ளேன். ஊழலற்ற நேர்மையான ஒருவனாக இந்த அரசியல் களத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்ற நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்து மக்களின் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கின்றவனாகவும் மக்களது தேவைகளை இனம் கண்டு அபிவிருத்திகளின் பால் நமது பிரதேசத்தை ஈர்க்கின்ற ஒருவனாகவும் சர்வதேசம் தொடக்கம் தேசிய ரீதியில் பல்வேறு தரப்பினருடனும் தொடர்புகளை வைத்துள்ள என்னால் பல விடயங்களை மக்களுக்காக செய்து காட்ட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
அந்த வகையில் சிறந்த தலைமைத்துவத்தின் வழிகாட்டலின் கீழ் திறமையான நேர்மையான வேட்பாளர்கள் தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வெற்றியை உறுதி செய்வதோடு மூன்றாம் இலக்க வேட்பாளரான எனக்கும் மரச் சின்னத்துக்கும் வாக்களித்து நமக்கான பிரதிநிதித்துவத்தைஉறுதி செய்து கொள்வதற்கு நாம் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
(எம். எப். றிபாஸ்)