பாகிஸ்தானின் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் புதிய தலைவராக முஹம்மது ரிஸ்வான்
பாகிஸ்தானின் ஒருநாள் மற்றும் ரி20 அணிகளின் புதிய தலைவராக விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரரான முஹம்மது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன் அவ்வணி பங்கேற்கவுள்ள சிம்பாப்வே மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான ஒருநாள் மற்றும் ரி20 தொடர்களுக்கான அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் ரி20 அணிகளின் தலைவராக மிக நீண்ட காலம் செயற்பட்ட நட்சத்திர துடுப்பாட்ட வீரரான பாபர் அஸாம் கடந்த மாதம் தலைமைப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக பாகிஸ்தான் அணி ஒருநாள் மற்றும் ரி20 போட்டிகளில் பங்கேற்காதமையால் பல வாரங்களாக புதிய அணித்தலைவர் யார் என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்நாட்டு கிரிக்கெட் சபையால் நேற்றுமுன்தினம் புதிய அணித்தலைவர் மற்றும் சிம்பாப்வே, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுடன் இடம்பெற இருக்கும் தொடருக்கான பாகிஸ்தான் வீரர்கள் குழாம் என்பன அறிவிக்கப்பட்டது.
அதற்கமைய புதிய ஒருநாள் ரி20 அணிகளின் தலைவராக விக்கெட் காப்பாளரும், பாகிஸ்தான் அணியின் நம்பிக்கைக்குறிய துடுப்பாட வீரருமான முஹம்மது ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.
32 வயதான முஹம்மது ரிஸ்வான் இதுவரையில் பாகிஸ்தான் அணிக்காக 74 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று 3 சதங்கள் மற்றும் 13 அரைச்சதங்களுடன் 2088 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் 102 ரி20 போட்டிகளில் பங்கேற்று ஒரு சதம், 29 அரைச்சதங்கள் அடங்களாக 3313 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அடுத்த மாதம் ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியா பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ரி20 ஆகிய தொடரில் பங்கேற்கின்றது. இத் தொடருக்கான அணியில் மீண்டும் பாபர் அஸாம், ஷஹீன் அப்ரீடி மற்றும் நசீம் ஷா ஆகியோர் உளவாங்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் இளம் வீரர்களான பைஸல் அக்ரம், ஹசீபுல்லாஹ் கான் மற்றும் கம்ரான் குலாம் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர். ரி20 தொடருக்கான அணியில் அர்பட் மின்ஹாஸ், இர்ஃபான் கான் மற்றும் ஒமைர் யூசுப் ஆகியோர் உள்வாங்கப்பட்டு உள்ளனர்.
மேலும் எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி சிம்பாப்வே இல் இடம்பெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான பாகிஸ்தான் அணியை ரிஸ்வான் வழிநடாத்துகிறார். இருப்பினும் இத் தொடருக்கு முக்கிய வீரர்களான பாபர் அஸாம், நசீம் ஷா மற்றும் ஷஹீன் அப்ரீடி ஆகியோருக்கு ஒய்வு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் சிம்பாப்வே அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடருக்கு ரிஸ்வானுக்கு ஓய்வு வழங்கப்பட பாகிஸ்தான் அணியை சல்மான் அஹா வழிநடாத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)