பேருவளை நகர சபை ஏற்பாட்டில் மீலாத் மற்றும் பரிசளிப்பு நிகழ்வு.
பேருவளை நகரசபை நிருவாகத்தால், நடாத்தப்பட்ட மீலாதுன் நபி விழாவும், பரிசளிப்பு நிகழ்வும் பேருவளை ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயத்தின் அஷ்ஷெய்க். முஸ்தபா ஞாபகார்த்த மண்டபத்தில் நகர சபைச் செயலாளரும் மீலாத் விழா ஏற்பாட்டுக் குழு தலைவியுமான ரனசிங்ஹ குணவர்தன தலைமையில் (2024-10-26) கடந்த சனிக்கிழமை காலையில் நடை பெற்றன.
பேருவளை நகர சபை வரலாற்றில் முதற்தடவையாக நடைபெற்ற இந்நிகழ்வில் பேருவளை பகுதியில் இயங்கும் அரச, தனியார் சர்வதேச பாடசாலைகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கிடையே நடாத்தப்பட்ட சமய அறிவியல் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய சகல பிள்ளைகளதும் நிகழ்சிகள் மேடையேற்றப்பட்டன. அத்துடன் முதல் மூன்று இடங்களையும் பெற்ற பிள்ளைகளுக்கு பரிசுகளும், பதக்கங்களும், சான்றிதழ்களும் அதிதிகளினால் கையளிக்கப்பட்டன.
ஆரம்பத்தில் பேருவளை டீ.எல் சேனாநாயக்க மகா வித்தியாலய மாணவி அன்னல் நபியின் புகழ் பாடும் “விருது” பாடல் ஒன்றை இசைத்து நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து நிகழ்வுக்கு தலைமை வகித்த நகர சபை செயலாளர் திருமதி. ரனசிங்ஹ குணவர்தன வரவேற்புரையுடன் அறிமுக உரையையும் நிகழ்த்தினார்.
அதன் போது அவர் கூறியதாவது, எமது நகர சபை பகுதிக்குட்பட்ட தமிழ், சிங்களம், ஆங்கில மொழி பாடசாலைகளில் பயிலும் பெளத்த, கிறிஸ்தவ, இந்து, முஸ்லிம் பிள்ளைகளின் சமய அறிவை விருத்தி செய்வதற்கு ஒவ்வொரு சமயங்களின் பண்டிகைகளை முன்னிட்டு மாணவர்களின் மத்தியில் மும்மொழிகளிலுமான அறிவியல் போட்டிகளை நடாத்தி பரிசில்களை வழங்கும் திட்டத்தை முன்னெடுக்கும் முன்னோடியாகவே இன்று இந்நிகழ்வை ஒழுங்கா செய்தேன்.
முகம்மது நபி அவர்கள் முன்மாதிரியாக வாழ்ந்த மாமனிதர். அவர் கல்விக்கும் முன்னுரிமை கொடுத்திருக்கிறார். கற்பவனாக இரு, கற்றுக்கொடுப்பவனாக இரு, கற்போருக்கு உதவுபவனாக இரு, நான்காமவனாக இருந்து விடாதே. என்று போதித்துள்ளதாக நான் அறிந்திருக்கிறேன். அந்த வகையில் இந் நிகழ்வு கல்விக்து உதவும் ஒரு நிகழ்வு என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடன் நகர சபை அதிகாரிகள், ஊழியர்கள் பலரும் இந்நிகழ்வுக்கு பெரிதும் பங்களிப்புச் செய்தார்கள் என்றார்.
நகர சபை முகாமைத்துவ அதிகாரியும், மீலாத் குழு தலைவியுமான ஷிஹானா காதர் உரையில், எமது நகர சபை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் இதுவாகும். எமது மாணவர்களின் சிறப்பான ஆற்றல்களை இந்நிகழ்வு வெளிப்படுத்தாயுள்ளன. இதில் எமது செயலாளர் சிறப்பான பங்களிப்புக்களை வழங்கியுள்ளார். மேலும் எமது பகுதி கொடை வள்ளல்களும் இதற்காக கை கொடுத்துள்ளனர்.
பேருவளை பிரதேச செயலாளர் ஷானக பெரேராவின் உரையில்,
பேருவளை பல்லின, பன்மத மக்கள் இணைந்து, இரண்டறக்கலந்து வாழும் பிரதேசம். இத்தகைய நிகழ்வு இன ஐக்கியத்திற்கு ஒரு முன்மாதிரியாகும். முகம்மது நபியவர்கள் மனிதன் மற்றும் சகல உயிரினங்கள் மீதும் அன்பு, கருணை, ஆதரவு காட்டும்படி நற் போதனை புரிந்துள்ளார்கள். உலக அமைதிக்கு சிறந்த முன்மாதிரிகளை காட்டிச் சென்றுள்ளார்கள். இங்குள்ள முஸ்லிம் மக்களோடு பணியாற்றக் கிடைத்தமையை இட்டு இத்தகைய நிகழ்வில் கலந்து கொள்ளக் கிடைத்தமையை இட்டும் மேலாக கருதுகிறேன்.
விஷேட அதிதியாக கலந்து கொண்டு உரையை நிகழ்த்திய விரிவுரையாளர் எம்.பீ.எம் முகம்மத் நவாஸ் மெளலவியின் உரையில்,
மனித குலம் நிம்மதியாகவும், சீரும் சிறப்புமாகவும் வாழ ரஸுல் (ஸல்) அவர்களின் வாழ்விலும், வாக்கிலும் பூரணமான முன்மாதிரிகள் உள்ளன. ஒரு மனிதனின் உள்ளம் சீரானால் அவனது சகல செயற்பாடுகளும் மிகவும் சிறப்பாக அமையும் என்பதை முகம்மது (ஸல்) அவர்கள் மிகவும் சுருக்கமாக எடுத்தியம்பியுள்ளார்கள்.
சமூகத்தில் சாந்தி, சமாதானம் பிரதிபலிக்க அது ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் உருவாக்கப்பட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர் மீதும், பிள்ளைகள் பெற்றோர் மீதும் அன்பு, கருணை செலுத்த வேண்டும். இதற்கும் நபி (ஸல்) அவர்கள் முன்மாதிரி காட்டியுள்ளார்கள்.
ஒருமுறை ரஸுல் (ஸல்) அவர்கள் இரவு வீடு வந்த போது மனைவி ஆயிஷா நாயகியவர்கள் நன்கு உறக்கத்தில் இருந்தார்கள். அவரது தூக்கத்தை கலைக்காது நபியவர்கள் மாவு எடுத்து பிசைந்து ரொட்டி தயாரித்தார்கள். சாப்பிடுவதற்காக சகல ஒழுங்குகளையும் செய்த பின்னர் ஆமிஷாவை சாப்பிட எழுப்பினார்கள். இப்படி குடும்ப நல்லிணக்க உறவு உச்சகட்ட முன்மாதிரியல்லவா?
தவறு ஒன்றைத் திருத்துவதிலும் ஏராளமான முன்மாதிரிகளை காட்டித் தந்துள்ளார்கள். மதீனா பள்ளியில் காட்டரபி ஒருவர் சிறுநீர் கழித்த வேளையில் ஸஹாபாக்கள் கொதித்தெழுந்த போது, மிகவும் அமைதியான முறையில் ரஸுல் (ஸல்) அவரை அணுகி, அன்பாக கதைத்து முரட்டு அரபியின் தவறை சுட்டிக் காட்டி அவர் திருந்தி நடக்க வழி செய்ய பண்பாடு மிகவும் உன்னதமானது.
பேருவளை நகர சபை ஆயுர்வேத வைத்தியர் சந்திமா அல்விஸ் களுத்துறை நகர சபை ஆணையாளர், செயலாளர், விஸ்டம் சர்வதேச பாடசாலை அதிபர் அப்துல் காதர் உள்ளிட்ட பாடசாலை அதிபர்கள், அரச நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், மாணவர்களின் பெற்றோர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோரால் மண்டபம் நிரம்பி வலிந்திருந்தது.
உரைகளுக்கு மத்தியில் போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவ, மாணவிகளின் மும்மொழிகளிலுமான உரைகள், இஸ்லாமிய கீதங்கள், ஹதீஸ் மனனம், கஸீதாக்கள் போன்ற நிகழ்ச்சிகளாலும் சபை களைகட்டியது.
(பேருவளை பீ.எம் முக்தார்)