அனுராதபுரத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்க சதி செய்கின்றனர்.
முன்னாள் எம்.பீ.இஷாக் ரஹ்மான் குற்றச்சாட்டு.
சமூக நலனில் அக்கறையில்லாத சுயநல சிந்தனையுடைய சில அரசியல் வாதிகள் ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் கிடைக்கப்பெற்ற பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சதி செய்து வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வேட்பாளர் இஷாக் ரஹ்மான் தெரிவித்தார்.
நச்சியாதீவில் (27) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்:- நாடு சுதந்திரம் அடைந்து ஏழு தசாப்தங்களுக்கு பின்னர் அனுராதபுரம் மாவட்டத்தில் பெற்றுக்கொள்ள முடியாத சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை கடந்த 2015 ,2020 தேர்தலில் வெற்றி கொள்ள முடிந்தது.அந்த பிரதிநிதித்துவத்தை இல்லாமல் செய்வதற்கு சில தலைவர்களும் பிரதேசத்தில் தோன்றிய அரசியல் வாதிகளும் இணைந்து சதி செய்து வருகின்றனர்.
கடந்த இரண்டு தேர்தலிலும் வெற்றி பெற்றதன் மூலம் ஒன்பது வருடங்களாக அனுராதபுரம் மாவட்டத்திலுள்ள சகல முஸ்லிம் கிராமங்களுக்கும் பெரும்பாலான மாற்று மத சகோதர கிராமங்களுக்கும் சமய வழிபாட்டு தலங்களுக்கும் என்னாலான அபிவிருத்தியை மேற்கொண்டுள்ளேன்.
நாச்சியாதீவை பொறுத்தவரையில் பள்ளிவாசல், பாடசாலை,மத்ரசா மற்றும் வில்லு பாதை உள்ளிட்ட பாதைகளையும் அபிவிருத்தி செய்துள்ளேன்.இந்த கிராமத்தில் அபிவிருத்தி செய்யப்படாமலிருந்த பல குறைபாடுகள் இனங்காணப்பட்டு அபிவிருத்தி செய்யப்பட்டதை இந்த கிராம மக்களும் இந்த மண்ணும் சான்று பகிரும்.