திசைகாட்டி அரசின் வெற்றிக்கு பங்காளிகளாகுங்கள்.களுத்துறை மாவட்ட வேட்பாளர் அரூஸ் அஸாத்
களுத்துறை மாவட்டத்தில் சுமார் 135, 000 தமிழ் பேசும் வாக்காளர்கள் உள்ளனர். இந்நிலையில் தேசிய மக்கள் கூட்டணியில் இந்த மாவட்டத்தில் நான் களம் இறங்கியுள்ளேன். இது தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும்.
ஏனெனில், எமது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையை ஏற்று நாட்டு மக்கள் இன்று சாரை சாரையாக அவர் பக்கம் அணி திரண்டு கொண்டிருக்கிறார்கள். இந்த சந்தர்ப்பத்தில் நாமும் அவர்களுடன் பங்காளியாவது காலத்தின் தேவையாகும் என்று களுத்துறை மாவட்டத்தில் திசைகாட்டி சின்னத்தில் போட்டியிடும், அரூஸ் ஆஸாத் கூறினார்.
அரூஸின் தேர்தல் பிரச்சாரத்திற்கான துண்டுப் பிரசுரங்களை முதன் முதலாக அவரது தந்தை ஆஸாத் ஹாஜியாரிடம் கையளித்து பின்னர் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் அவர் கூறியதாவது,
பேருவளை தேர்தல் தொகுதியிலும், களுத்துறை மாவட்டத்திலும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிறைய இருக்கின்றன. நான் இம்மாவட்டத்திலுள்ள சகல இன, மத மக்களுக்கும் சேவை செய்ய கடமைப்பட்டுள்ளேன். குறிப்பாக தமிழ் பேசும் சிறுபான்மை இன மக்களின் குறை நிறைகளைத் தீர்த்து வைப்பதில் அலாதியான கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
இம்மாவட்டத்தின் சிறுபான்மை மக்களை கருத்திற் கொண்டே நான் களம் இறங்கப்பட்டிருக்கிறேன். எதிர்கால எமது பணிகளுக்காகவே இப்போதே திட்டங்களை தீட்டி வைத்துள்ளேன். அந்த திட்டங்கள் குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
எமது மாவட்டத்தில் 23 தமிழ்மொழி மூல பாடசாலைகள் உள்ளன. இவை அனைத்திலும் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகின்றது. பின் தங்கிய பல பாடசாலைகளில் பெளதீக வளக்குறைகளும் உள்ளன. கல்விக்கு முன்னுரிமை கொடுத்து இவற்றையெல்லாம் தீர்த்து வைக்க வேண்டியுள்ளது. பெரும்பாலான பாடசாலைகளில் நிலைமையைச் சமாளிக்க தொண்டர் ஆசிரிய, ஆசிரியைகள் அமர்த்தப்பட்டுள்ளன. இலவசக் கல்வி இங்கு கேள்விக்குறியாகியுள்ளது. இந்த விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
வேலையற்ற பட்டதாரிகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளனர். இவர்களுக்கு திறமை, தகுதி அடிப்படையில் எத்தகைய பாரபட்சமுமின்றி வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும். எமது அரசு முறையாக இவற்றை செய்து முடிக்கும்.
மேலும், பணிகள் பற்றி வினவியபோது, அரூஸ் கூறியதாவது,
பேருவளையில் செலவாணியை ஈட்டித்தரும் மூன்று பிரதான முறைகள் உள்ளன. இரத்தினக்கல் வர்த்தகம். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பே எமது ஜனாதிபதி பேருவளைக்கு விஜயம் செய்து சீனன்கோட்டையிலுள்ள இரத்தினக்கல் ஆபரண வர்த்தக சங்க காரியாலயத்தில் சங்கத்தின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார். வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் சவால்கள், தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்று ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. அவர் அமோக ஆதரவுடன் வெற்றி பெற்றார். இப்பொழுது பொதுத் தேர்தல் எதிர்கொண்டுள்ளது. இதிலும் நாம் அனைவரும் திசைகாட்டி சின்னத்திற்கு வாக்களித்து பாராளுமன்றத்தையும் வென்றெடுக்கச் செய்ய வேண்டும். ஜனாதிபதி தேர்தலில் 5139 வாக்கு வித்தியாசத்தில் பேருவளைத் தொகுதியை ஐக்கிய மக்கள் சக்தி வென்றெடுத்தது இந்த பாராளுமன்றத் தேர்தலிலும் இதனை விடவும் அமோக வாக்குகளால் வெற்றி பெறச் செய்ய வேண்டும். அப்போதுதான் மக்கள் எதிர்பார்க்கும் திருப்தியான மாற்றங்களை எமது பிரதேசமும், நாடும் அடைந்து கொள்ள முடியும். எமது வர்த்தகர்களால் சமர்பிக்கப்பட்டுள்ள மகஜர் குறித்து நான் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வந்து உரிய தீர்வைப் பெற்றுக் கொடுப்பேன் என உறுதியளிக்கிறேன்.
ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் இங்கு வந்து எமது வர்த்தகர்களுடன் சினேக பூர்வமாக கலந்துரையாடிய சம்பவம் இதுவே முதல் தடவை என்பதையும் கூறிக் கொள்கிறேன்.
எமது வர்த்தகர்கள் தன்ஸானியா, மொசம்பிக், கென்யா, மடகஸ்கர், எதியோப்பியா உள்ளிட்ட வட ஆபிரிக்க நாடுகளுக்கும் சென்ற வர்த்தகத்தில் ஈடுபட்டு பெருமளவான அந்நியச் செலாவணியை நாட்டுக்கு ஈட்டிக் கொடுப்பதை எமது ஜனாதிபதி அன்று வந்த சந்தர்ப்பத்தில் மேச்சிப் பேசினார். எனவே எமது ஆட்சியில் எங்களுக்கெல்லாம் நல்ல விடிவு கிடைக்கும். எனவே, ஜனாதிபதியோடு இணைந்து செல்லக்கூடிய அரசாங்கம் ஒன்றே அவசரத் தேவையாகும்.
மற்றொரு வருமானம் தரக்கூடிய மீன்பிடித்துறையில் மேம்பாட்டுக்கும் எமது அரசால் இயன்ற ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொடுக்கவும் நான் திட்டங்கள் வகுத்துள்ளேன். எமது கட்சி சொல்வதை சாதித்துக் காட்டுவதில் பின் நிற்கப் போவதில்லை.
கேள்வி: நீங்கள் மக்கள் விடுதலை முன்னணியை ஆதரிக்க காரணம் என்ன?
பதில்: எமது மக்கள் முன்னர் யூ.என்.பி, எல்.எல்.எப்.பி என்றே ஒட்டிக் கொண்டிருந்தனர். அக்கட்சிகளால் சமூகத்துக்கும், நாட்டுக்கும் உரிய பணிகள் வந்தடைவதில்லை என்பதை நான் மட்டுமல்ல, இப்போது தான் இந்த நாடே கண்டு கொண்டுள்ளது. சுயநலமும், ஊழல், மோசடிகளுமே அவர்களது கலாசாரமாகிப் போயிருந்தது. இதனை நான் 2015 ஆம் ஆண்டே உணர்ந்து மக்கள் விடுதலை முன்னணியில் இணைந்து அர்ப்பணிப்புச் செய்து வருகிறேன்.
2018 ஆம் ஆண்டு பேருவளை நகர சபை தேர்தலில் தேசிய மக்கள் கூட்டணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அந்த சந்தர்ப்பத்தில் எத்தகைய பாரபட்சங்களுமின்றி என்னால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை மக்கள் நன்கறிவார்கள். அதன் விளைவாகவே இன்று பாராளுமன்றத் தேர்தலிலும் இறங்கியிருக்கிறேன்.
நிச்சயமாக வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குண்டு. நான் 24 மணிநேரமும் சேவைக்குத் தயார் நிலையிலே இருப்பேன். எனக்கு வரும் தொலைபேசி அழைப்புக்கும் சுடச்சுட பதில் அளிப்பேன். இத்தகைய நற்பண்புகள் எங்கள் கட்சி உறுப்பினர்களின் உடன் பிறந்த குணம் என்பதை பலரும் அறிவார்கள். எனது சேவைகள் கண்டிப்பாக எமது தோட்டப்புற மக்களுக்கும் கிடைக்கச் செய்வேன். அவர்களது லயன் குடிசைகளையும் சென்றடையவே செய்வேன்.
(பேருவளை பீ.எம். முக்தார்)