லூவிஸின் சதத்தால் மே.இ.தீவுகளுக்கு ஆறுதல் வெற்றி; இருப்பினும் தொடர் இலங்கை வசம்
இலங்கை அணிக்கு எதிராக 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் லிவிஸின் அதிரடி சதம் மற்றும் ருத்தர்பேர்டின் அரைச்சதம் ஆகியன கைகொடுக்க டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்டுக்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றி பெற்ற போதிலும் தொடரை 2:1 என தனதாக்கியது இலங்கை அணி.
கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலங்கை வந்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட ரி20 மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் ஆகிய வெள்ளைப் பந்து தொடரில் பங்கேற்றிருந்தது. இதில் ரி20 தொடரை இலங்கை 2:1 என வென்றெடுத்தது.
பின்னர் இடம்பெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் இரு போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை தனதாக்கியிருந்தது. இந்நிலையில் நேற்று (26) இடம்பெற்ற 3ஆவதும், இறுதியுமான ஒருநாள் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இலங்கை அணிக்கு வழங்கியிருந்தது. அதற்கமைய ஆரம்ப வீரர்களாக பெத்தும் நிசங்க மற்றும் அவிஷ்க ஜோடி களமிறங்கி சிறந்த ஆரம்பத்தினை வழங்கியது. இந்நிலையில் அவிஷ்க 34 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அப்போது இலங்கை அணி இலங்கை அணி 17.2 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 87 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டியில் மழை குறுக்கிட்டது.
தொடர்ந்து ஐந்து மணித்தியாலங்கள் போட்டி தடைப்பட்டு போட்டி பின்னர் ஆரம்பமாகி அணிக்கு 23 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டு நடைபெற்றது. அதற்கமைய பெத்தும் நிசங்க பெற்ற பொறுப்பான 56 மற்றும் குசல் மெண்டிஸ் பெற்ற அதிரடியான 56 ஓட்டங்களும் கைகொடுக்க இலங்கை அணி 23 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
பின்னர் டக்வர்த் லூயிஸ் முறையில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு வெற்றியிலக்காக 23 ஓவர்களுக்கு 195 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கமைய பதிலுக்கு களம் நுழைந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஆரம்ப வீரரான பிரண்டன் கிங் 16 ஓட்டங்களையும் , சாய் ஹோப் 22 ஓட்டங்களையும் பெற்று ஏமாற்றம் கொடுத்த போதிலும் மற்றைய ஆரம்ப வீரரான லூவிஸ் இலங்கை பந்துவீச்சை வெளுத்துத் தள்ளினார். அவருடன் களத்திலிருந்த ருதர்போர்ட் தன் பங்கிற்கு அதிரடி காட்டி மிரட்டி (50) அரைச்சதம் பூர்த்தி செய்தார். தொடர்ந்தும் களத்திலிருந்த லூவிஸ் 61 பந்துகளில் 102 ஓட்டங்களை பெற்றுக் கொடுக்க மேற்கிந்தியத் தீவுகள் அணி 22 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 196 ஓட்டங்களை பெற்று டக்வேர்த் லூயிஸ் முறைப்படி 8 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றது.
இப்போட்டியின் நாயகனாக சதம் அடித்த லூவிஸ் தெரிவாக, தொடரின் நாயகனாக இலங்கை அணியின் தலைவரான சரித் அசலங்க தெரிவானார். இப் போட்டியில் இலங்கை அணி தொல்வி கண்ட போதிலும் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்றமையால் இலங்கை அணி தொடரை 2:1 என கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)