இலங்கை பல்கலைக்கழக நூலகர் சங்க சர்வதேச ஆய்வு மாநாடு.
இலங்கை பல்கலைக்கழக நூலகர் சங்கத்தினால் நடாத்தப்படும் 14 வது சர்வதேச ஆய்வு மாநாடு நாளை மறுதினம் ( 29) கொழும்பு Galle Face ஹோட்டலில் இடம்பெறவுள்ளது.
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட உதவி நூலகரும் – நூலகர் சங்கத்தின் 2023 / 2024 இற்கான தலைவருமாகிய – கலாநிதி மஷ்றூபா மஜீத் தலைமையில் இடம்பெறவுள்ளது.
பிரதம அதிதியாக – பிரதமர் – கலாநிதி ஹரூனி அமரசூரிய பங்குபற்றவுள்ளார்.
ஏறத்தாழ இரண்டரை தசாப்தங்களாக இலங்கைப் பல்கலைக்கழக நூலகர்கள் சங்கமானது இலங்கைப் பல்கலைக்கழகங்களின் கல்விசார் நிபுணத்துவ செயற்பாடுகளுக்கும் மற்றும் ஆராய்ச்சியின் வளர்ச்சிக்கும் விலைமதிப்பற்ற பங்களிப்பைச் செய்துள்ளது.
வருடாந்த தேசிய அல்லது சர்வதேச ஆராய்ச்சி மாநாடுகளை ஏற்பாடு செய்தல் என்பன குறிப்பிடத்தக்க சில நடவடிக்கைகளாகும்.
“நூலக சேவைகளில் புரட்சியை ஏற்படுத்தும் செயற்கை நுண்ணறிவு , சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறவுள்ள இந்த மாநாட்டின் பிரதான உரையை இலங்கை தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் பதில் உபவேந்தர் பேராசிரியர் நுவான் கொடகொட ஆற்றவுள்ளார்.
காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு, நூலக சேவைகள், பல்கலைக்கழக நூலகங்கள், நூலக அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக் கட்டுரைகள் அறிக்கை செய்யப்படவுள்ளன.
மேலும் – பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உப தலைவர் பேராசிரியர் வசந்த குமார, இலங்கைப் பல்கலைக்கழக உபவேந்தர்கள் மற்றும் பணிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரும் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் உபவேந்தருமான பேராசிரியர் சஞ்சீவனி கினிகந்தர மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி யு.எல். அப்துல் மஜீத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
அத்துடன் ஆசிய நாடுகளில் மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் கணனி அறிவியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொடர்புடைய பாடப் பிரிவுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தற்போதைய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
இத்தகைய ஆய்வு மாநாடுகள், நூலகம் மற்றும் தகவல் விஞ்ஞானத்தின் காலத்திற்கேற்ற முக்கிய அம்சங்களில் கவனம் செலுத்துவதுடன் – பல்வேறு பரிமாணங்களின் கீழ் புதிய ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைவதுடன், பல்கலைக்கழக நூலக சேகரிப்புகளின் பயன்பாடானது இலங்கையின் அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு முக்கிய பங்காற்றுகின்றது.