சுழலில் மிரட்டிய பாகிஸ்தான், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டது
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 3ஆவதும், இறுதியுமான போட்டியில் சுழலில் அசத்திய பாகிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றி பெற்றதுடன் தொடரை 2:1 என தன் வசப்படுத்திக் கொண்டது.
சுற்றுலா இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் சென்றிருந்தது. இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்க , 2ஆவது போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை 1:1 என சமன் செய்திருந்தது.
இந்நிலையில் கடந்த 24ஆம் திகதி ராவல்பிண்டி இல் ஆடம்பித்த தொடரை தீர்மானிக்கும் 3ஆவதும், இறுதியுமான போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.
இதற்கமைய களம் நுழைந்த இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்களை சுழல்பந்து வீச்சாளர்களான சாஜிட்கான் மற்றும் நுஹ்மான் அலி ஆகியோர் விரைவாக பெவிலியன் அணிப்பி வைக்க 267 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இங்கிலாந்து அணி. துடுப்பாட்டத்தில் ஜெமி ஸ்மித் 89 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் சாஜிட்கான் 6 விக்கெட்டுகளையும், நுஹ்மான் அலி 3 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பாகிஸ்தான் அணிக்காக சவூட் சகீல் தனித்துப் போராடி 134 ஓட்டங்களையும், பந்துவீச்சில் அசத்திய நுஹ்மான் அலி மற்றும் சாஜிட்கான் ஆகியோர் முறையே 44 மற்றும் 48 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுக்க சகல விக்கட்டுக்களையும் இழந்து 344 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. பந்துவீச்சில் ரெஹான் அஹமட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
பின்னர் 77 ஓட்டங்கள் முதல் இன்னிங்ஸ் பின்னிலையுடன் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்கள் நிலைக்கத் தவறியதுடன் மீண்டும் நுஹ்மான் அலி மற்றும் சாஜிட்கான் ஆகியோரிடம் சரணடைய இங்கிலாந்து அணி 112 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஜோ ரூட் 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார். பந்துவீச்சில் நுஹ்மன் அலி மற்றும் சாஜிட்கான் ஆகியோர் முறையே 6 மற்றும் 4 விக்கெட்டுக்களை அள்ளிச் சுருட்டினர்.
பின்னர் 35 என்ற வெற்றி இலக்கினை நோக்கி தமது 2ஆவது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் அணி 3.1 ஓவரில் ஒரு விக்கெட்டினை மாத்திரம் இழந்து 37 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கெட்டுக்களால் இலகு வெற்றியைப் பெற்றதுடன் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2:1 என கைப்பற்றியது. போட்டியின் நாயகனாக சதம் அடித்த சவுத் சகீலும், தொடரின் நாயகனாக சாஜிட்கானும் தெரிவானமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)