எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்; வாக்களிப்பு ஆரம்பம்
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் இன்று (26) நடைபெறுகிறது. பதிவுசெய்யப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் ஒரு சுயேட்சைக் குழுவும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இன்று காலை 7.00 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4.00 மணி வரை 48 மையங்களில் நடைபெற உள்ளது.
இதேவேளை எல்பிட்டிய தேர்தல் தொகுதியை அண்மித்த பகுதியில் நாடாளுமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
அரசமைப்பின் பிரகாரம் பதவிக் காலம் நிறைவடைந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை வெகுவிரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. இன்னிலையில் ஜனாதிபதித் தேர்தலை நிறைவு செய்ததன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்திருந்த நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானியை ஜனாதிபதி கடந்த மாதம் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறான பின்னணியில் காலி மாவட்டம், எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்தது.