திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகம்
கடந்த காலங்களில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் கட்சிக்கும் அதன் தலைமைக்கும் துரோகம் செய்துவிட்டுச் சென்றனர் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ரிஷாத் பதியுத்தீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு நேற்றிரவு (24) அட்டாளைச்சேனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட மத்திய குழு தலைவரும், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அப்துல் ரசாக் ஜவாத் தலைமையில் இடம்பெற்ற இந்த வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வில், கட்சியின் தேசிய தலைவர் ரிஷாத் பதியுத்தீன் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், கட்சியும் அதன் தலைமையும் கூறிய வாக்குறுதிகளை நம்பியே மக்கள் வாக்களித்து எம்பியாக்கினர். அவ்வாறு எம்பியானவர் கட்சியின் தலைவரை 8 வருடங்களுக்கு சிறையிலடைக்கச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு, கட்சியின் தலைமைப் பதவியை எடுப்பதற்கான பாரிய சதி முயற்சியை செய்தார். நான் எந்தத் தவறான செயற்பாடுகளிலும் ஈடுபடவில்லை. அதனால், இறைவனின் என்னைப் பாதுகாத்தான்.
இம்முறை திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் நிறுத்தப்பட்ட வேட்பாளர்கள் மார்க்கப்பற்றுள்ள, நல்ல ஆளுமையுள்ள, கட்சியின் கொள்கைக்கும் தலைமைக்கும் கட்டுப்பட்டு ஒரு விட்டுக்கொடுப்புடன் செயற்படுகின்றவர்களாகவே இருக்கின்றார்கள் என்றார்.
இந்த அறிமுக நிகழ்வில் பங்கேற்ற 10 வேட்பாளர்களும் தங்களின் பிரதேசங்களில் முன்னெடுத்த மற்றும் முன்னெடுத்துச் செல்லவுள்ள தேர்தல் செயற்பாடுகள் பற்றிய உரையுடன் அவர்களைப்பற்றியும் அறிமுகம் செய்து வைத்தனர்.