அரசாங்கதைக் கவிழ்க்க நினைக்கவும் வேண்டாம், அனைத்து மக்களின் பாதுகாப்புக்கும் அரசாங்கமே பொறுப்பு; புத்தளத்தில் ஜனாதிபதி அனுர உறுதி
கடந்த ஜனாதிபதி தேர்தலில் புத்தளம் மாவட்டத்தில் பல தொகுதிகளில் எமக்கு வெற்றியைப் பெற்றுத்தந்ததைப்போன்றே பொதுத்தேர்தலிலும் இந்த மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் வெற்றிபெறுவதை இந்த பெருந்திரளான மக்கள் கூட்டம் உறுதிசெய்கின்றது. புத்தளம் மாவட்டத்தில் இருந்து இதுவரை தெரிவுசெய்து அனுப்பிய உறுப்பினர்கள் மக்களுக்கு துரோகமிழைக்கும் செயல்களில் ஈடுபட்டிருந்தார்கள்.
பலவந்தமாக காணிகளை கைப்பற்றுதல், போதைத்தூள் வியாபாரம் செய்தல், கள்வர்கள் தங்கக் கடத்தலில் ஈடுபடுதல், கப்பம் பெறுதல், பலவந்தமாக இறால் பண்ணைகளை கைப்பற்றுதல் போன்ற மக்களை அல்லற்படுத்துகின்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக மக்களுடன் தோள்கொடுத்து நாட்டைக் கட்டியெழுப்பகின்ற புதிய கலாச்சாரத்தைக்கொண்ட உறுப்பினர்களை புத்தளம் மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பிவையுங்கள். அதற்காக இருப்பது தேசிய மக்கள் சக்தியின் அணி மாத்திரமே. பாராளுமன்ற உறுப்பினர்கள்மீது பொதுவில் நிலவுகின்ற எதிர்ப்பினை முடிவுறுத்தி பாராளுமன்றத்தை துப்பரவாக்குகின்ற பாரிய சிரமதானத்திற்காக திசைகாட்டியிலிருந்து அதிகமான எண்ணிக்கைகொண்ட உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பிவைக்கவேண்டும். நாங்கள் அவ்வாறு கூறும்போது திசைகாட்டி வேட்பாளர்களின் முகங்கள்கூட தெரியாதென ஒருசிலர் கூறுகிறார்கள்.
எனினும் பலவிதமான குற்றச்செயல்களில் ஈடுபட்டு முழுநாட்டிலுமே பிரபல்யமடைந்துள்ள குற்றச்செயல் புரிபவர்களுக்குப் பதிலாக இந்த நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய திசைகாட்டியின் பலம்பொருந்திய அரசாங்கமொன்றை உருவாக்க செயலாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலின் பின்னர் உலகில் இருக்கின்ற மிகச்சிறிய அமைச்சரவையை முன்னெடுத்து வருகின்ற செயற்பாடுகளில் ஏதேனும் குறைபாடுகளை உணர்கிறீர்களா? அவ்வாறான குறைபாடு கிடையாது. ஒரு பட்டாசுகூட கொளுத்தாமல் வெற்றியைக் கொண்டாடியதன் மூலமாக வெளிப்படுத்திய எடுத்துக்காட்டினை இந்த பொதுத்தேர்தலிலும் தேர்தல் இயக்கத்தில் பாதுகாத்து வருகிறோம்.
குறிப்பாக புத்தளம் மாவட்டம் என்பது தேர்தல் பீதிநிலையை பரப்பிய மாவட்டமாகும். எனினும் இந்த தேர்தல் காலத்தில் அமைதியான தேர்தலொன்றை நடாத்துதல் தொடர்பில் வரலாறு படைத்துள்ளோம். ஐரோப்பாவில் நிலவுகின்ற முன்னேற்றமடைந்த அரசியல் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்புகின்ற தேர்தல் இயக்கமொன்றை தேசிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகின்றது. பொதுத்தேர்தலில் பெற்ற மகத்தான வெற்றியின் பின்னரும் இந்த நிலைமையைப் பாதுகாக்கின்ற அரசியல் கலாச்சாரத்தை உறுதிசெய்கிறோம்.
அரசியலை வெறுத்திருந்த இளைஞர் தலைமுறையினரை முதன்மையாகக்கொண்ட மக்கள் புதிய உணர்வுடன் நாடு பூராவிலும் அரசியலில் ஒன்றுசேர்ந்து வருகிறார்கள். தேர்தலின் பின்னர் விஞ்ஞானரீதியான அடிப்படையில் இருபத்தைந்து பேருக்கு குறைவான அமைச்சரவையை நியமித்து நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான திட்டங்களை அமுலாக்குவோம். “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்பதைக் கட்டியெழுப்புகின்ற வேலைத்திட்டம் ஏற்கெனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது திட்டங்களை அமுலாக்கி வருகின்ற அதேவேளையில், குறிப்பாக மத்தியக் கிழக்கில் உருவாகியுள்ள யுத்த முரண்பாட்டின் தாக்கம் உலகம் பூராவிலும் பரவிவருவதோடு இலங்கை மீதும் ஒருசில அபாயநேர்வுமிக்க நிலைமைகள் வந்துள்ளன.
அவற்றில் ஏதேனுமொரு சம்பவம் இலங்கையிலும் ஏற்படக்கூடுமென்ற தகவல் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் எமக்கு கிடைத்தது. நாங்கள் சம்பந்தப்பட்ட இடங்களின் பாதுகாப்பினை வேகமாக உறுதிசெய்தோம். உளவுப் பிரிவுத் தகவல்கள் பதிவாகின்றபோது நாங்கள் ஊடக கலந்துரையாடல்களை நடாத்துவதில்லை. அந்த தகவல்களுக்கு நேரொத்தவகையில் பொறுப்புடன் செயலாற்றுவோம். பொறுப்புடைமயவர்களாக பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிசெய்வோம். அதைப்போலவே உளவுப்பிரிவுத் தகவல்களின் அடிப்படையில் புலனாய்வுகளை துரிதமாக நடாத்தி ஒருசில சந்தேக நபர்களைக் கைதுசெய்தோம். எனினும் செய்திகளை வெளியிடுவதையோ ஊடக கலந்துரையாடல்களை நடாத்துவதையோ செய்யவில்லை. ஒரு அரசாங்கம் என்றவகையில் எமது பொறுப்பு அவ்வாறான சம்பவங்களை தடுப்பதாகும்.
முன்னர் செய்தது அவ்வாறான உளவுத் தகவல்களை பொருட்படுத்தாமல் விடுவது அல்லது ஊடகங்களுக்கு அறிவித்து பதற்றத்தை உருவாக்குவதாகும். மக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக பொலீஸாருடனும் பாதுகாப்பு பிரிவுகளுடனும் மிகவும் நெருக்கமாக கவனஞ்செலுத்தி மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அது சம்பந்தமாகவும் ஒருசிலர் கலவரமடைந்திருக்கிறார்கள். பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது பொறுப்புடன் இயங்கிவருகின்ற அரசாங்கமொன்றின் செயற்பொறுப்பாகும். பொருளாதாரரீதியாக, பாதுகாப்புரீதியாக, தொழில்முயற்சிகளை முன்னேற்றுகின்ற பக்கத்தில், பிள்ளைகளின் கல்விப் பக்கத்தில் போன்றே உழைக்கும் மக்களின் பக்கத்தில் அனைவரையும் பேணிப்பாதுகாக்கவேண்டியது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனை நாங்கள் ஈடேற்றிக்கொண்டிருக்கிறோம்.
வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கப்படுகின்றது. அவ்வாறின்றேல் குறைநிரப்பு மதிப்பீடு மூலமாக சம்பந்தப்பட்ட செலவினை ஏற்பதற்கான அங்கீகாரம் பெறப்படல் வேண்டும். அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பணத்தை ஒதுக்கியதாக முன்னாள் ஜனாதிபதி கூறுகிறார். அவர் ஒதுக்கியிராவிட்டாலும் எதிர்வரும் வரவுசெலவில் நாங்கள் அதற்கு அவசியமான நிதியை ஒதுக்கீடுசெய்வோம். முன்னாள் ஜனாதிபதி தோல்விகண்ட பின்னர் எம்மை அங்குமிங்கும் கிள்ளிக்கொண்டிருக்காமல் வீட்டில் இருக்கவேண்டுமென நாங்கள் ஞாபகப்படுத்துகிறோம். ஆனால் அவர்கள் ஏதாவது பிரச்சினையையோ அல்லது புனைகதையையோ உருவாக்கி மீண்டும் அதிகாரத்தைக் கையகப்படுத்திக்கொள்ள முயற்சிசெய்து வருகிறார்கள். எங்கள் அரசாங்கம் மூன்றே மாதங்களில், ஆறே மாதங்களில் வீழ்ந்துவிடுமென கூறவும்தொடங்கி இருக்கிறார்கள்.
நாங்கள் இந்த நாட்டை சீராக்கியே தீருவோமென்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அதனை சாதிக்காமல் தேசிய மக்கள் சக்தி நின்றுவிடப் போவதில்லை. பொருளாதாரரீதியாக முன்னேற்றமடைந்த ஒரு நாடு, சுத்தத்தினால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு, மனிதர்களின் நடத்தைகளால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு, சட்டத்தின் ஆதிக்கத்தினால் முன்னேற்றமடைந்த ஒரு நாடு போன்றே சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்களிடையே தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்படுகின்ற ஒரு நாட்டை நாங்கள் உருவாக்குவோம். அதற்கு மேலதிகமாக தேசிய பாதகாப்பினை உறுதிசெய்து, சுற்றாடலை நேசித்து, பாசத்துடன் பாதுகாக்கின்ற முன்னேற்றமடைந்த நாடாக இலங்கையை மாற்றியமைப்போம்.
எவருக்காவது இதனைப் பார்த்துப் பொறுத்துக்கொண்டிருக்க முடியாவிட்டால் ஒருபுறம் ஒதுங்கி அழுதுபுலம்பிக் கொண்டிருக்கவே நேரிடும். கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது எமக்கெதிரான அனைத்துவிதமான பிரச்சாரங்களையும் அவர்கள் மேற்கொண்டார்கள். எமக்கு வெளிநாட்டுத் தொடர்புகள் கிடையாதென அவர்கள் ஒரு பீதியைக் கிளப்பினார்கள். ஏற்கெனவே மத்தியவங்கி உத்தியோகத்தர்கள், நிதி அமைச்சின் உத்தியோகத்தர்கள், பொருளாதார ஆலோசகர்கள் அமெரிக்காவிற்குச் சென்று சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறார்கள். அதைப்போலவே உலகின் அனைத்து நாடுகளுடனும் நெருக்கமான உறவுகளை இராஜதந்திரரீதியாக உறுதிசெய்து கொண்டிருக்கிறோம். அதனால் இன்று அவர்களால் கூட்டமொன்றுக்கு வந்து கூறுவதற்கு ஒன்றுமே இல்லாமல் போய்விட்டது. அதனால் ஊடக சந்திப்புகளை நடாத்தி மீண்டும் மீண்டும் அவதூறான கதைகளைக் கூற, பொய்ப்பிரசாரங்களை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள்.
எனினும் தேசிய மக்கள் சக்தி எல்லாவேளைகளிலும் உண்மையை அடிப்படையாகக்கொண்டு அரசியலில் ஈடுபடுகின்ற இயக்கமென்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன். பாராளுமன்றத்திலும் காலில் இழுக்க இடமளிக்காத, பிரச்சினையை ஏற்படுத்த முடியாத பலம்பொருந்திய அதிகாரத்தை தேசிய மக்கள் சக்திக்கு பெற்றுக்கொடுங்கள். உங்கள் அனைவரதும் பொறுப்பினை ஏற்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் நிறுவுவோம். ஏதேனும் சந்தேகத்தை மனதில் வைத்துக்கொண்டு ஜனாதிபதி தேர்தலில் எமக்கு வாக்குகளை அளித்திராதவர்கள் இந்த தேர்தலில் எமக்காக ஒன்றுசேர்ந்து வருகிறார்கள்.
அரசாங்கமென்பது தனக்கு வாக்குகளை அளித்திராதவர்களினதும் நம்பிக்கையை வென்றெடுத்த சக்தியாகும். கழிகின்ற ஒவ்வொரு தருணத்திலும் எம்மீது கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருகின்றது. அதனால் எமது அரசாங்கத்தைக் கவிழ்க்க முடியுமென நினைத்துக்கூட பார்க்கவேண்டாமென அவர்களுக்கு ஞாபகப்படுத்துகிறேன். அவர்களின் பல தலைமுறையினர் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற நிலைமை முற்றுப்பெற்றுள்ளதால் வேதனையின் ஓலக்குரல்கள் பல ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இந்த எவையுமே எமது அரசாங்கத்திற்கு சிறிதளவிலேனும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாதென்பதை ஞாபகப்படுத்துகிறேன். ஒருசில அரசியல் கட்சிகள் இறுதித்தருணத்திலும் அரசியல் இலாபத்தைப் பெற்றுக்கொள்வதற்காக பிரச்சாரங்களை மேற்கொண்டு, தேர்தலின்பின்னர் எம்மோடு இணைவதாக கூறிவருகின்றன. அங்குமிங்கும் தாவுதல் தொடர்பில் மக்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பு நிலவுகின்றது. சந்தர்ப்பவாதிகளாக தாவுகின்ற தரகர்கள், கொந்துராத்துக்காரர்கள் இல்லாத ஒரேயோர் அரசியல் இயக்கம் தேசிய மக்கள் சக்தியாகும். எதிர்காலத்திலும் எமது நிலைப்பாட்டினை அவ்விதமாகவே பாதுகாத்து, நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய மகத்தான வெற்றியைப் பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறேன். வளமான நாட்டைக் கட்டியெழுப்பி அழகான வாழ்க்கையை உருவாக்கிக் கொடுப்பதற்காக அனைவரையும் அணிதிரளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.