நாட்டைக் கட்டியெழுப்ப எம்மிடமே சிறந்த அணி உள்ளது, அரசமைக்கும் அதிகாரத்தை எமக்குத் தாருங்கள்; மஹரகம கூட்டத்தில் சஜித் பிரேமதாச வேண்டுகோள்
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் அரச ஊழியர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரூ. 57500, ரூ. 25000 வாழ்க்கைச் செலவுக் கொடுப்பணவு உள்ளடங்களாக 24% சராசரி சம்பள அதிகரிப்பு, 6-36% என்ற வரி சூத்திரம் 1-24% ஆக குறைப்போம் என்று ஜனாதிபதித் தேர்தல் பிரசார கூட்டங்களில் நாம் தெரிவித்தோம். இதற்கு மாறாக தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான கட்சி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிப்போம் என்று தெரிவித்தனர். என்றாலும் திறைசேரியின் நிலையை வைத்தே சம்பளத்தை அதிகரிக்க முடியும் என அவர்கள் தற்போது தெரிவிக்கின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
2028 முதல் எமது நாட்டின் கடனை செலுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. 2033 ஆம் ஆண்டிலிருந்து கடனை செலுத்துமாறு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தும், முன்னாள் ஜனாதிபதி அதை 2028 ஆகக் குறைத்திருந்தார். 2028 ஆம் ஆண்டிலிருந்து கடனைச் செலுத்தத் தொடங்க வேண்டுமானால், நமது நாட்டின் பொருளாதாரத்தை பரந்த அளவில் பலப்படுத்தி, அந்நியச் செலாவணி கையிருப்பை பேண வேண்டும். இதற்குப் பொருத்தமான பொருளாதார வேலைத்திட்டம் இருக்க வேண்டும். அடுத்த 4 ஆண்டுகளில் விரைவான பொருளாதார வளர்ச்சி இருக்க வேண்டும், ஆனால் இன்று ஆட்சி போகும் போக்கு தொடர்ந்தால் 2028 முதல் கடனை அடைக்க முடியாது போகும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மஹரகம தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் அன்மையில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் மஹரகம தேர்தல் தொகுதி அமைப்பாளர் காமினி திலகசிறி அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் மட்டுமே அதிக சலுகையுள்ள IMF உடன்படிக்கைக்கு செல்ல முடியும். மக்கள் மீதான அழுத்தத்தை குறைக்கும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தியால் இணக்கப்பாட்டுக்கு வர முடியும். இந்த நோக்கத்திற்காக திறமையும் ஆற்றலும் கொண்ட அணியை ஐக்கிய மக்கள் சக்தி தன்னகத்தே கொண்டுள்ளது என சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. 220 இலட்சம் மக்களின் வாழ்வோடு விளையாட மாட்டோம். நேர்மன நல்ல பார்வையில் குறைகளை சுட்டிக்காட்டி மாற்று திட்டங்களை முன்வைப்போம். ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான பாராளுமன்ற பெரும்பான்மை மூலம் தற்போதைய ஜனாதிபதியுடன் நாட்டுக்காக தியாகங்களை செய்ய முடியும். ஒரு நாடாக வலுவாக இருக்க, பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த வேண்டும். இதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும். இதற்கான திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.
ஏறக்குறைய 260,000 நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்துறையினருக்கு நிவாரணமாக தற்காலிகமாக இரத்துச் செய்யப்பட்ட பரேடே சட்டம் டிசம்பர் 15 ஆம் திகதியுடன் இரத்து செய்யப்பட்டு அவர்களது சொத்து மீண்டும் ஏலம் விடப்படும். ஆகவே இத்தீர்மானத்துக்கு செல்லாது இவர்கள் குறித்து சிந்தித்து நடவடிக்கை வேண்டும். இது அரசாங்கத்தின் பொறுப்பாகும். யார் யாருக்கு வாக்களித்தாலும் 2028 முதல் கடனை அடைக்க வேண்டும் என்று சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.