உள்நாடு

ஐ.ம.சக்தியின் வெற்றிக்காக மூவன மக்களும் அணி திரண்டுள்ளனர்

பொதுத் தேர்தலில் களுத்துறை மாவட்ட மூவின மக்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றிக்காக எம்மோடு அணி திரண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேட்பாளருமான எம்.எஸ்.எம்.அஸ்லம் ஹாஜியார் கூறினார்.

தர்கா நகரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களான அஸ்லம் ஹாஜியார்,இப்திகார் ஜமீல் ஆகியோரை ஆதரித்து நடைபெற்ற இக் கூட்டத்தில் அவர் மேலும் கூறியதாவது-
தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றத்திற்கு தெரிவான போதிலும் இந்த மாவட்ட மக்களுக்கு எவ்வித வேறுபாடுகளுமின்றி சேவை செய்துள்ளேன். அதற்கு முன்னர் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்து பாரிய பணிகளையும் செய்துள்ளேன்.

களுத்துறை மாவட்ட முஸ்லிம் பாடசாலைகளின் அபிவிருத்திக்கும் ஆசிரியர் பற்றாக்குறையை தீர்க்க வேண்டியும்,குர்ஆன் மதரஸா அரபுக் கல்லூரிகளின் முன்னேற்றத்திற்கும் பள்ளிவாசல்களுக்கும் மாகாண சபை மூலம் நிதியுதவிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளேன்.

முஸ்லிம்,தமிழ்,சிங்கள மக்களை சமமாக மதித்து சேவை செய்துள்ளேன். முஸ்லிம் கிராமங்களுக்கும் தோட்டப்புற தமிழ் மக்களுக்கும் செய்துள்ள சேவைகள் அளப்பரியது. குடிநீர் வசதி,வீதி புணரமைப்பு,வடிகால்திட்டங்கள்,விளையாட்டு மைதான அபிவிருத்தி,மின்சார வசதி,வீடுகள் அமைக்க நிதியுதவி என பாரிய பணிகளைச் செய்துள்ளேன்.

சுய தொழில் முயற்சிகளை ஆரம்பிக்க எல்லா பிரதேச செயலகங்களுக்குமாக நிதி ஒதுக்கினேன். விளையாட்டு கழகங்களுக்கு உபகரணம் பெற்றுக்கொடுத்தேன். பாராளுமன்ற உறுப்பினர் பதவி இல்லாத காலத்தில் கூட எனது பணிகளை மக்களுக்காக முன்னெடுத்தேன்.

ஐக்கிய மக்கள் சக்தி மூலம் இம் முறையும் போட்டியிடுகிறேன். இந்த மாவட்ட மக்கள் பொதுத்தேர்தலில் சஜித் பிரேமதாச தலைமையில் ஆட்சி அமைக்க இன்று எம்மோடு அணி திரண்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றாலும் பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.

நாம் குறைந்த பட்சம் 6 ஆசனங்களை யாவது பெற்றுக் கொள்வோம். அதில் நானும் இப்திகார் ஜமீலும் தெரிவாக வேண்டி எமகு கூடுதலான வாக்குகளை பெற்றுத் தாருங்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியூடாக இம் மாவட்ட மக்களுக்கு கூடுதலான பணிகளைச் செய்வோம் என்றார்.

வேட்பாளர் இப்திகார் ஜமீல் பேருவளை பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஆர்.எம்.பதியுத்தீன் உட்பட முன்னாள் உறுப்பினர்கள் பலரும் இங்கு உரையாற்றினர்.

இத் தேர்தலில் தர்கா நகர் மக்களின் முழுமையான ஆதரவை ஐக்கிய மக்கள் சக்திக்கு பெற்று கொடுக்க இங்கு கூடியிருந்தோர் உறுதியளித்தனர்.

(பேருவளை பீ.எம்.முக்தார்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *