கண்டி மாவட்ட முஸ்லிம் வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்; பொதுஜன பெரமுன வேட்பாளர் ரிஷாட் மஹ்ரூப்
கண்டி மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் பிரதிநிதித்துவங்களைக் கொண்ட இடத்தில் தற்போது இரண்டு பிரதிநிதித்துவங்கள் மட்டுமே உள்ளன. எனவே இம்முறை கண்டி முஸ்லிம் வாக்காளப் பெருமக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். மக்களுடைய உரிமைகளைப் பற்றிப் பேசுவதாக இருந்தாலும் அபிவிருத்தி முன்னெடுப்புக்களை மேற்கொள்வதாக இருந்தாலும் பாராளுமன்றத்தில் முஸ்லிம் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்க வேண்டும். குறிப்பாக இது காலத்தின் தேவையாகும் என்று கண்டி மாவட்ட பொதுஜனப் பெரமுனவின் வேட்பாளர் ரிசாட் மஹ்ரூப் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், “கண்டி மாவட்டத்தைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களில் பாராளுமன்றப் பிரதிநித்தவம் இருந்த எமது பிரதேசத்தில் இரண்டு பிரதிநிதித்துவங்களே இருக்கின்றன. ஒன்று ரவுப் ஹக்கீம் மற்றையது ஹலீம் ஆவார்கள். இதற்கு முன்னர் காதர் ஹாஜியார், பைஸர் முஸ்தபா போன்ற நான்கு பேரும் இருந்துள்ளார்கள். இதை நாங்கள் இழந்து இருக்கின்றோம். கண்டி மாவட்டத்தில் 190000 வாக்காளர்கள் இருக்கின்றார்கள். ஆகவே இந்தக் கண்டி மாவட்டத்தில் உள்ள எமது முஸ்லிம்கள் நன்கு சிந்தித்து வாக்களித்தால் நான்கு பிரதிநித்துவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
நாங்கள் கட்சியாக பிரிந்து வேறுபட்டு நிறைய கருத்து முரண்பாடுகள் இருந்தாலும் கூட முஸ்லிம்கள் என்ற ரீதியில் நாங்கள் ஒன்றுபட வேண்டிய தேவை இருக்கிறது. முஸ்லிம்களுடைய பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்ளுகின்ற விடயத்தில் நாங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் வாக்குகளை செலுத்தும் போது வாக்களிப்பவர்களை சற்று ஆராய்ந்து பாருங்கள். அவர்களுடைய சூழல் என்ன அவர்கள் படித்தவர்களா அவர்கள் மக்களுக்காகப் பேசக் கூடியவர்களா? அவர்களுக்கு அரசியல் அறிவு இருக்கின்றதா ? என்பதை நன்கு ஆராய்ந்து பாருங்கள் .அவை ஆக முக்கியம்.
நாங்கள் பாராளுமன்றம் சென்று தூங்குபவர்களாய் இருக்க முடியாது. மக்களுடைய பிரதிநித்துவத்தை கௌரவிப்பவாகளாய இருத்தல் வேண்டும். அவர்களுக்கு குரல் கொடுப்பவர்களாய் இருத்தல் வேண்டும். வெறுமனே பணம் பதவிகளுக்காக போவது அல்ல. நான் அவுஸ்ட்ரேலியாவில் இருந்தாலும் இலங்கையைப் பிரதிநிதித்துவப் படுத்துவதற்காக வந்துள்ளேன்.
எமது முஸ்லிம் மக்களுடைய எதிர்கால நலனைக் கருத்திற் கொண்டே இந்தத் தேர்தலில் உங்கள் முன் களமிறங்கியுள்ளேன். எந்தவொரு வேறு நோக்கங்களோ அல்ல என்பதை மிகவும் தெளிவாக தெரிவித்துக் கொள்கின்றேன. எனக்கு வாக்களிப்பதன் மூலம் உங்கள் பிரநிதித்துவத்தை உறுதி செய்து கொள்ளுங்கள் என்று அவர் மேலும் தெரிவித்தார்.