ஐ.ம.சக்தியில் கம்பஹாவில் களமிறங்கும் சசிகுமார்
கம்பஹா மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்களின் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் கூட்டணியின் தொலைபேசி சின்னத்தில் 18ஆம் இலக்க வேட்பாளராக சசிகுமார் 2024ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார். கௌரவ தலைவர் மனோ கணேசன் அவர்களின் வழிகாட்டலின் கீழ், தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், சமுதாய வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை சவால்களை எதிர்கொண்டு போராடி வரும் சசிகுமார், தமிழர்களின் சமுதாய முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபட்டு வருகிறார்.
கம்பஹா மாவட்டத்தில் 154,000 தமிழ் பேசும் வாக்காளர்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், மத வேறுபாடுகளை மீறி ஒற்றுமையாக செயல்பட்டால், இரண்டு தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது சாத்தியமென அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
சசிகுமார் 2013ஆம் ஆண்டு முதல் கம்பஹா மாவட்டத்தில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அவர் வத்தளை மாபோல நகரசபையின் உறுப்பினராகவும், மக்கள் சேவையில் முன்னணி தலைவராகவும் பரவலாக அறியப்பட்டவர். 2020ஆம் ஆண்டின் தேர்தலில் தமிழ் மக்களின் வலிமையான ஆதரவைப் பெற்றாலும், வெற்றி பெற இயலவில்லை. இருப்பினும், இம்முறை மக்களிடமிருந்து வரவேற்பு அதிகரித்து, வெற்றியை நோக்கி நிச்சயம் முன்னேறுவேன் என உறுதிபட கூறினார்.
தமிழர்களுக்கு இணையாக, முஸ்லிம் சமூகத்தின் ஆதரவும் சசிகுமாரின் வெற்றிக்காக முக்கிய பங்கு வகிக்கக்கூடும். வத்தளை, மினுவாங்கொடை, நீர்கொழும்பு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் 11%-15% முஸ்லிம் மக்கள், தமிழ் – முஸ்லிம் ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் ஆதரவை வழங்கலாம்.
மினுவாங்கொடை, நீர்கொழும்பு பகுதிகளில் நடைபெற்ற மக்கள் சந்திப்புகளில் முஸ்லிம் சமூகத்தினர் கலந்துகொண்டு, கல்வி, வேலைவாய்ப்பு, சமுதாய முன்னேற்றம் தொடர்பான கேள்விகளை முன்வைத்தனர். இதற்கு பதிலளித்த சசிகுமார், “முஸ்லிம் மக்களின் தேவைகளை மனதில் கொண்டு, அனைத்து சமூகத்திற்கும் சம உரிமை வழங்கும் அரசியலை முன்னெடுப்பேன்” என்றார்.
தமிழ் – முஸ்லிம் மக்களின் ஒற்றுமை வலுப்பெற்றால், கம்பஹா மாவட்டத்தில் தமிழ் சமூகத்தின் உரிமைகள் உறுதியாக வளரும் என்ற நம்பிக்கையில், எதிர்வரும் மாதம் வலிமையான வாக்கு ஆதரவுடன் சசிகுமார் வெற்றி பெறுவார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
(ஏ.சி.எம் பௌசுல் அலிம்)