இப்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை வாங்குவதற்குக் கூட வரிசைகள் ஏற்பட்டுள்ளன.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச
தற்போதைய அரசாங்கம் பொருட்களின் விலைகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பயனற்ற முறையில் பொருளாதாரக் கொள்கையை முன்னெடுத்து வருகிறது. குறுகிய காலத்தில் உணவு, பானங்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால் சிரமத்துடன் வாழ்ந்து வரும் மக்களின் வாழ்வாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
வாழக் கூடிய நாட்டை உருவாக்குவோம் என தேர்தல் காலத்தில் வாக்குறுதிகள் அளித்த போதிலும், உணவுப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவு அதிகரித்து மக்கள் வாழ முடியாத நிலையை எதிர்நோக்கியுள்ளனர். வருமானம் சுருங்கி, மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்து வரும் நேரத்தில், அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வரும்வேளையில் அந்த உணவுப் பொருட்களை குறைந்த விலையில் பெற வரிசையில் காத்திருக்கும் நிலை இன்று ஏற்பட்டுள்ளது. இங்கு மக்கள் நலன் பாதுகாக்கப்படுகிறதா என்பது குறித்து கேள்வி எழுகின்றன என்று தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் (23) அவிசாவளையில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் அவிசாவளை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சுதத் விக்ரமரத்ன அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தக்கூடிய வலுவான பொருளாதாரக் கொள்கை ஐக்கிய மக்கள் அரசாங்கத்தில் முன்னெடுப்போம். 220 இலட்சம் மக்களின் நலனுக்காக சிறந்த ஆட்சியை நாம் முன்னெடுப்போம். அத்தியாவசிய உணவுப் பொருட்களை மலிவு விலையில் பெற்று மக்களை வாழ வைக்க நடவடிக்கை எடுப்போம். மக்களின் ஆசியைப் பெறுவதற்காக பொய் சொல்லும் யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, வளமான நாட்டையும் எதிர்காலத்தையும் உருவாக்க நாம் செயற்படுவோம். ஊழல், மோசடி, திருட்டு இடம்பெறாத நாட்டை உருவாக்குவோம் என்றும் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.