அனைத்து இன, மத மக்களையும் உள்வாங்கிய மட்டக்களப்பை கட்டியெழுப்புவதே எனது கனவு; மட்டக்களப்பு தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் பிர்தௌஸ் நளீமி
மட்டக்களப்பில் வாழும் அனைத்து இன, மத, கொள்கை வேறுபாடுகளைக் கொண்ட மக்களையும் இலங்கையர் எனும் அடையாளத்தின் கீழ் ஒன்றிணைப்பதே தனது பிரதான இலக்கு என தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி தெரிவித்தார்.
காத்தான்குடியில் நடைபெற்ற முதலாவது தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில், “அனைவரையும் உள்ளடக்கிய மட்டக்களப்பு (Inclusive Batticaloa)’ என்பதே எனது கனவாகும். கடந்த காலங்களில் யுத்தம் மற்றும் வேறு பல காரணங்களால் மக்கள் மத்தியில் பிரிவினைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன. அரசியல்வாதிகளும் தமது வாக்கு வங்கிக்காக இங்கு வாழும் சமூகங்களை பிரித்து வைப்பதிலேயே குறியாக இருந்துள்ளனர். இதற்காகவே பிரதேசவாதமும் மக்கள் மனங்களில் விதைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இந்த வேறுபாடுகளை மறந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் 38 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகளை வழங்கியுள்ளனர். நாம் வேறுபாடுகளை மறந்து இலங்கையர் என்ற குடையின் கீழ் ஒன்றிணைந்ததன் மூலமே இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. அதேபோன்றுதான் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலிலும் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட வேண்டும். இதற்கான சரியான தெரிவு இனத்துவ சிந்தனைகளை முன்னிறுத்திய கட்சிகளை விடுத்து, சகல இன மக்களையும் ஒன்றிணைக்கக் கூடிய தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதேயாகும்.
தமிழ் பிரதிநிதி ஒருவர் முஸ்லிம்களுக்காக குரல் கொடுக்கின்ற நிலைமையும், அதேபோல் முஸ்லிம் பிரதிநிதி ஒருவர் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுக்கின்ற நிலைமையும் இந்த மாவட்டத்தில் உருவாக்கப்பட வேண்டும். ஓர் ஊரைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அந்த ஊருக்கு மாத்திரமன்றி முழு மாவட்டத்திற்குமே சேவை செய்கின்ற அரசியல் கலாசாரத்தை நாம் தோற்றுவிக்க வேண்டும். அந்தவகையில் நான் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டால் வெறுமனே ஓர் ஊருக்காக அல்லது ஓர் இனத்துக்காக மாத்திரமின்றி முழு மாவட்டத்திற்குமான பிரதிநிதியாக செயல்படுவேன்.” என்றார்.