அறிவும், நேர்மையும், அனுபவமும் உள்ளோரை உங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுங்கள்; ஐ.ம.சக்தி குருநாகல் மாவட்ட வேட்பாளர் ரிஸ்வி ஜவஹர்ஷா
நேர்மையான ஊழற்ற கண்ணியமான முறையில் அரசியல் செய்யக் கூடிய வகையிலான மக்கள் பிரதிநிதிகளையே இன்றைக்கு எதிர்பார்க்கின்றனர். ஆயினும் அவை பற்றிய அறிவும் திறனும் இருத்தல் வேண்டும் என்று குருநாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ரிஸ்வி ஜவஹர்ஷா தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், நேர்மையான ஊழற்ற கண்ணியமான முறையில் அரசியல் செய்யக் கூடிய வகையிலான மக்கள் பிரதிநிதிகளையே எமது நாடு எதிர்பார்க்கின்றது என்பதை நாம் ஒவ்வொருவரும் தெளிவாக அறிந்து வைத்திருக்கின்றோம். இதில் எந்தத் தவறும் இல்லை. அவற்றையே நாங்களும் எதிர்பார்க்கின்றோம். கடந்த 20 வருட காலமாக இந்த அரசியலையே நாங்களும் செய்து வருகின்றோம். நாங்கள் வேண்டி நிற்பதும் கூட இந்த மாற்றத்தைத்தான். இந்த மாற்றத்திற்காகத்தான் நாங்கள் இவ்வளவு காலமும் எதிர் பார்த்துக் கொண்டிருந்தோம்.
கடந்த காலங்களில் ஊழல்மிக்க கொழுத்த பணங்களைச் சம்பாதித்த அரசியல்வாதிகளுடன்தான் நாங்கள் மோத வேண்டி இருந்தது. நாங்கள் அவர்களுடன் மோத முடியாது. அந்தளவு பொருளாதாரம் எங்களிடம் இல்லை. நாங்கள் ஒவ்வொரு முறையும் நேர்மையான அரசியலைச் செய்யவே எதிர்பார்க்கின்றோம். சமூகத்திற்கு நிறைய நியாயமான வேலைகளைச் செய்ய விரும்புகின்றோம். ஆனால் அவர்களுடைய பண பலத்திற்கு முன்னால் ஒவ்வொரு முறையும் தோல்வியுற்று விடுகின்றோம். இந்தத் தோல்வியை எந்நாளும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதில் மாற்றம் வர வேண்டும். எனவே இளைஞர்களிடத்தில் இருக்கின்ற கோசத்தில் யதார்த்தை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் புதுமுகங்கள் வரும் போது நீங்கள் யார்? எங்கு இருந்து வருகிறார்கள்.? அவர்களுடைய கல்விப் பின்புலங்கள் என்ன? இவர்கள் சாதிக்கக் கூடிய உணர்வு அல்லது ஏதாவது தேவைகள் இருக்கலாம். அதற்கான ஆற்றல் இருக்கிறதா? அல்லது இல்லையா? என்பது எமக்குத் தெரியாமல் இந்த நாட்டில் எழுந்துள்ள அலைக்குப் பின்னால் எமது இளம் பிள்ளைகள் அகப்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த காலங்களில் எங்களது தலைமைகள் என்ன செய்தார்கள். எமது முஸ்லிம் சமூகத்தின் நலன்களில் எத்தனையோ போராட்டங்களை எமது மூத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் செய்துள்ளார்கள். முஜிபுர்ரஹ்மான் போன்ற நல்ல திறன்மிக்க பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் இழக்க இயலுமா, ரவூப் ஹக்கீம். கபீர் ஹாசிம் போன்ற முஸ்லிம் அரசியல் தலைவர்களை நாங்கள் இழக்க இயலுமா? அவர்களுடைய பேச்சாற்றல். அவர்களுடைய போராட்டத்திறன்கள் என்பவற்றை நாங்கள் நேரடியாகவே பார்த்திருக்கின்றோம்.
இந்தப் புதிய அலைக்குள் அகப்பட்டு எமது இளம் வாலிபர்கள். இந்த விடயம் பற்றி ஒரு முறை அல்ல இரு முறை ஆழமாக யோசிக்க வேண்டும். புது முகம் பாராளுமன்றம் செல்ல வேண்டும்தான். ஆனாலும் நானும் பாராளுமன்றத்திற்குப் புதுமுகம்தான். ஆனால் அரசியலில் நீண்ட கால அனுபவங்கள் எனக்கு இருக்கின்றன. இந்தப் பாராளுமன்றத்தில் களமிறங்குகின்ற வேட்பாளர்களை உன்னிப்பாக அவதானியுங்கள். என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(சிபான்)