SLIBFI விருதுகள் 2024 இல் ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான தங்க விருதை சுவீகரித்தது அமானா வங்கி
அமானா வங்கி, அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இலங்கை இஸ்லாமிய வங்கியியல் மற்றும் நிதியியல் தொழிற்துறை விருதுகள் (SLIBFI) 2024 நிகழ்வில், ஆண்டின் சிறந்த நிறுவனத்துக்கான தங்க விருதை சுவீகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்றதுடன், இதன் நடுவர்களாக KPMG செயலாற்றியதுடன், UTO EduConsult ஏற்பாடு செய்திருந்தது.
விருதுகள் வழங்கும் நிகழ்வின் பிரதான விருதை சுவீகரித்திருந்தமைக்கு மேலாக, ஆண்டின் சிறந்த டீலுக்கான தங்க மற்றும் வெள்ளி விருதுகளை சுவீகரித்தது. விதுல்லங்காவின் நிலத்தில் பொருத்தப்பட்ட ஹொரண சூரிய வலு ஆலை மற்றும் பொலன்னறுவையிலுள்ள முன்னணி அரிசி ஆலைக்கு சூரிய வலு வசதியை ஏற்படுத்த நிதிவசதிகளை வழங்கியிருந்தமைக்காக இந்த கௌரவிப்புகள் வழங்கப்பட்டன. ESG கொள்கைகளுக்கான தமது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் இஸ்லாமிய நிதியியல் நிறுவனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்டிருந்த ESG பிரிவில் தங்க விருதையும் அமானா வங்கி சுவீகரித்திருந்தது.
வட்டி-சாராத இஸ்லாமிய வங்கியியல் பிரிவில் அமானா வங்கியின் தொடர்ச்சியான முயற்சிகளை கௌரவிப்பதாக SLIBFI விருதுகள் அமைந்திருந்ததுடன், நிதிசார் உள்ளடக்கம் மற்றும் நிலைபேறாண்மை ஆகியவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தது.
அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் தமது கருத்துகளை பகிர்ந்து கொள்கையில், “அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட மக்களுக்கு நட்பான வங்கியியல் மாதிரியின் அர்ப்பணிப்பான செயற்பாடுகளுக்கு இந்த விருதுகள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன. எமது செயற்பாடுகளினூடாக பொருளாதார வளர்ச்சி மற்றும் நிலைபேறாண்மைகளுக்கு ஆதரவளிக்கப்படுவதுடன், எமது சமூகத்தில் நாம் மேற்கொள்ளும் நேர்த்தியான தாக்கங்களுக்கு ஏதுவாக அமைந்துள்ளன. எமது வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்காளர்களின் ஒப்பற்ற ஆதரவுக்கு நாம் நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், அந்த ஆதரவினூடாக எம்மால் நிதிக் கொள்கைகளை பேணி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க முடிந்துள்ளது.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.