எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2025 ல் 4700 ஆக அதிகரிக்கலாம்; விஷேட வைத்திய நிபுணர் விந்தனா குமாரப்பிளி
இலங்கையில் 2025 ஆம் ஆண்டாகும் போது எச் ஐ வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 4,700 ஆக இருக்கும் என தேசிய பாலியல் தொற்று நோய் கட்டுப்பாட்டு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் விந்தனா குமாரப்பிளி அனுராதபுரத்தில் தெரிவித்தார்.
2030 ஆம் ஆண்டளவில் இந்நாட்டில் இருந்தும் வடமத்திய மாகாணத்திலிருந்தும் எச் ஐ வி மற்றும் பாலியல் உள்ளிட்ட தொற்றினை எவ்வாறு முற்றாக தடுப்பது பற்றிய விரிவான திட்டத்தை மேற்கொள்வது தொடர்பில் ஒன்றிணைந்த செயற்திட்டங்களை மேற்கொள்வதற்கு வடமத்திய மாகாண Aids குழுக்கூட்டம் அனுராதபுரம் விஜேபுரவில் அமைந்துள்ள மாகாண சுகாதார பயிற்சி பணிமனை கேட்போர் கூடத்தில் (21) நடைபெற்றது.
அந்த குழுக்கூட்டத்தில் கருத்து தெரிவித்த பாலியல் மற்றும் எச் ஐ வி தடுப்பு பிரிவின் பிரதானி விசேட வைத்திய நிபுணர் விந்தனா குமாரப்பிளி இவ்வாறு தெரிவித்தார்.
இந்நாட்டில் முதல் Aids நோயாளி 1987 ஆம் ஆண்டு இனங்காணப்பட்டுள்ளார். தற்போது வரைக்கும் இனங்காணப்பட்டுள்ள Aids நோயாளர்களின் எண்ணிக்கை 3,409 ஆகும்.ஆனாலும் நாட்டில் தொற்று சதவீத அடிப்படையில் பார்க்கும்போது 0.1 வீதமாகும் .இருந்த போதிலும் இதனை கட்டுப்படுத்துவது தொடர்பில் விழிப்புணர்வு மற்றும் நோயாளிகளை இனங்காண்பது தோடர்பில் விரிவான செயற்திட்டம் ஒன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
எனினும் முன்னரை விட எச் ஐ வி தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை காணக்கூடியதாகவுள்ளது.வடமத்திய மாகாணத்தில் இது விருத்தியடைந்துள்ளதுடன் போலன்நறுவை மாவட்டத்திலும் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சகல மாவட்டங்களுடனும் ஒப்பிடுகையில் பொலன்னறுவை மாவட்டம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.