Thursday, October 31, 2024
Latest:
உள்நாடு

அனைவருக்கும் “நான் இலங்கையன்” எனும் உணர்வு இருக்கின்ற ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம்

இலங்கையில் பலம்பொருந்திய மாற்றத்தை மேற்கொள்வதற்காக தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த நாங்கள் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றோம். அதன் பின்னர் மிகக் குறுகிய காலத்தில் பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய ஆட்சியொன்றை உருவாக்குவதற்கான வாய்ப்பினை மக்களுக்கு பெற்றுக்கொடுத்தோம். பொதுத் தேர்தலின் பின்னர் அரசாங்க அதிகாரத்தை நிறுவுதல் வரை இலங்கையிலும் உலகத்திலும் வரலாறு படைத்த மூவரை கொண்ட அரசாங்கமொன்றை நாங்கள் பேணிவருகிறோம். பொதுத் தேர்தல் நிறைவடையும் வரை மக்களின் அத்தியாவசிய சேவைகள் சீர்குலையாமல், பொருளாதாரம் சீர்குலையாமல், நாட்டின் பாதுகாப்பு சீர்குலையாமல் பேணி வரவேண்டிய பொறுப்பு எம்மூவருக்கும் கையளிக்கப்பட்டிருக்கிறது. நவம்பர 14 ஆம் திகதிக்குப் பின்னர் பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்த பெருமளவிலான உறுப்பினர்கள் மத்தியில் இருந்து இருபத்து ஐந்து பேருக்கு குறைவான அமைச்சரவையொன்றை அமைத்துக் கொள்வோம். இராஜாங்க அமைச்சர் பதவிகள் கிடையாது. அமைச்சுப் பதவிகளுக்கு ஒத்துவரக்கூடியதாக பிரதியமைச்சர் பதவிகள் இருக்கும். அது முதல் படிப்படியாக நாட்டைக் கட்டியெழுப்பி இந்தப் பயணத்தை தொடருவோம். நிலவிய பாராளுமன்றம் மக்கள் அனைவரினதும் எதிர்ப்பிற்கு அருவருப்பிற்கு இலக்காகியிருந்தது. கொவிட் பெருந்தொற்றின் போது வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை அனர்த்தங்களின் போது கூட அந்த எதிர்ப்பு மக்களிடமிருந்து தோன்றியது. ஒரு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு கத்திகள், மிளகாய்த்தூளை எடுத்து வந்தார்கள். ஒருசிலர் புத்தகங்களை எறிந்து சண்டைப்பிடித்த விதத்தை நாங்கள் கண்டோம். எமது நாட்டில் மிருகக்காட்சிசாலை மக்களுக்கு தடைசெய்யப்படவில்லை. எனினும் பாராளுமன்றம் தடைசெய்யப்பட்டது. அந்தப் பாராளுமன்றம் மக்களுக்கு பொருத்தமற்ற பாராளுமன்றமொன்று அல்லவென்பது அதன் மூலமாக வெளிப்பட்டது. அந்தப் பாராளுமன்றத்தை சுத்தம் செய்து புதுப்பிக்க அணித்திரளுகின்ற வேளையில் முன்னாள் பாராளுமன்றத்திலிருந்த அறுபத்தியிரண்டு பேர் தன்னிச்சையாகவே நீங்கிச் சென்றிருக்கிறார்கள். திசைகாட்டியின் நேர்மையான, ஊழலற்ற, அதைப்போலவே மக்களுக்காக எந்தவொரு சவாலையும் வெற்றிக்கொள்ளக்கூடியவர்களைக் கொண்டு பாராளுமன்றத்தை நிரப்புங்கள். அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மிகச்சிறந்த பங்களிப்பினை பெற்றுக்கொடுங்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அதற்காக திருகோணமலை மாவட்டத்திலிருந்து பாரிய சக்தி வழங்கப்பட்டது. 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐயாயிரத்திற்கு குறைவான வாக்குகளே திசைகாட்டிக்கு கிடைத்திருந்தது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐம்பதாயிரத்தை விட அதிகமானதாகும். அப்படியானால் பொதுத் தேர்தலில் என்ன நடக்கும்? ஏனைய கட்சிகள் தேர்தல் இயக்கத்தை தொடங்கும்போதே தோல்வியை ஏற்றுக்கொண்டுவிட்டன. எமது நாட்டில் நிலவுகின்ற பல பிரதான சவால்களை வெற்றிக்கொள்ள திருகோணமலை மாவட்டத்திலிருந்து திசைகாட்டிக்கு பலம்பொருந்திய வெற்றி தேவை. சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் நீண்டகாலமாக சந்தேகம், பகைமை, குரோதம், அவநம்பிக்கை பரப்பப்பட்டிருந்தது. அந்த நிலையில் தமிழ் மக்கள் தமிழ் கட்சிகளை நோக்கியும் முஸ்லிம் மக்கள் முஸ்லிம் கட்சிகளை நோக்கியும் தள்ளப்பட்டார்கள். அதன்பின்னர் அந்தக் கட்சிகளின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அரசாங்கத்தின் அதிகாரத்தை உறுதிசெய்துகொள்வதற்கான அரசியலை அவர்கள் முன்னெடுத்துவந்தார்கள். திருகோணமலை நகரமும் மாவட்டமும் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வசிக்கின்ற நிலைமைக்குப் பதிலாக மக்களை பிரித்து மோதல்களை ஏற்படுத்தி அவர்களின் ஆட்சியை கொண்டு நடத்தினார்கள். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்கான கட்சிதான் தேசிய மக்கள் சக்தி. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் நாம் வெற்றிபெறுவோம் என நம்பவில்லை. அதனால் நாங்கள் பொதுத் தேர்தலுக்கு பிரவேசிப்பது நாங்கள் வெற்றிபெற்றுள்ள ஒரு பின்புலத்துடன்தான். அனைத்து மக்களும் ஒற்றுமைக்கான ஒரே குடையின் கீழ் வந்து நிழல் பெறவேண்டும். தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே அதனை சாதிக்க முடியும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவரும் நம்புகின்ற அனைத்து மக்களினதும் நல்லாசி கிடைக்கின்ற அரசாங்கத்தை தேசிய மக்கள் சக்தியால் மாத்திரமே நிறுவ முடியும்.

ஜனாதிபதித் தேர்தலின் வெற்றிக்குப் பின்னர் வடக்கிலுள்ள மக்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி மீதான பாரிய எழுச்சி தோன்றியுள்ளது. நம்பிக்கை வளர்ந்துள்ளது. பிரிந்து ஒதுங்கியிருந்த யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து ஒற்றுமையைக் கொண்ட அரசாங்கத்தை நிறுவ வேண்டிய விசேட பொறுப்பு திருகோணமலை மாவட்ட மக்களுக்கு இருக்கின்றது. சிங்கள, தமிழ், முஸ்லிம் அனைவருக்கும் சமமாக அமுலாக்கப்படுகின்ற சட்டத்தைக் கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புகிறோம். ஒரு சில தடையேற்படுத்தும் சட்டங்கள் இருக்குமாயின் அவற்றை மாற்றியமைத்து மக்களின் நன்மைக்காக ‘நான் இலங்கையன்” என்கின்ற உணர்வை கொண்ட ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். ‘நான் இலங்கையன்” என பெருமையுடன் கூறிக்கொள்ளக் கூடிய பின்புலத்தை தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் உருவாக்கிக்கொடுக்கும்.

நாங்கள் நாட்டை அந்த நிலைமைக்கு கொண்டுவருகின்ற வேலைத்திட்டத்தை அமுலாக்குகையில் திருகோணமலையின் கனிய மணல் படிவை முறைப்படி பாவனைக்கு எடுத்து பெறுமதி சேர்க்கின்ற கைத்தொழிலாக மாற்றுவோம். அதைப்போலவே, எமது கண்ணெதிரே இற்றுப்போகின்ற எண்ணெய்க் குதங்களை புனரமைத்து தேசிய பொருளாதாரத்திற்கு பலம் சேர்க்கின்ற நிலைமைக்கு கட்டியெழுப்புவோம். அதைப்போலவே இந்த எண்ணெய்க் குதங்களை சார்ந்ததாக தூய்மையகமொன்றை நிர்மாணிப்பதற்கான வாய்ப்பு வழிவகைகள் பற்றியும் ஆராய்ந்து வருகிறோம். மரபார்ந்த மீன்பிடித் தொழில்துறையை ஆக்கவிளைவுமிக்க தொழிலாக மாற்றும்பொருட்டு ஏற்கெனவே எரிபொருள் மானியம் வழங்கியிருக்கிறோம். அதைப்போலவே, கால்நடை வளங்களை விருத்தி செய்தவற்கான பாரிய வாய்ப்பு வளம் திருகோணமலை மாவட்டத்தில் நிலவுகின்றது.

அதற்கு மேலதிகமாக 23 ஆயிரம் ஏக்கர் கரும்பு செய்கையைக் கொண்டதாக கந்தளாய் சீனித் தொழிற்சாலை நிலவியது. அந்த இயந்திர சாதனங்கள் அழிவடைந்து வருகின்றன. கரும்பு விளைநிலங்கள் யானைகளின் வாழிடங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. இந்தக் காணிகளில் இருந்து 11 ஆயிரம் ஏக்கர்களை தற்காலிகமாக விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுத்தோம். கரும்புச் செய்கையை மீண்டும் ஆரம்பித்து தொழில்சாலையை இயங்கும் நிலைக்கு கொண்டுவரும் வரை விவசாயிகள் இந்தக் காணிகளில் பயிர் செய்வார்கள்.

அதைப்போலவே, அரிசி ஆலை உரிமையாளர்களை சந்தித்த வேளையில் அரிசித் தட்டுப்பாடு நிலவுவதில்லை என எமக்கு தெளிவாகியது. எமக்கும் அவர்களுக்கும் இடையில் புரிந்துணர்வுடன் செயலாற்ற நாங்கள் அடிப்படை அணுகுமுறையை தொடங்கினோம். சட்டத்தை அமுலாக்குவதைப் பார்க்கிலும் புரிந்துணர்வு முக்கியமானது. நாட்டில் அரிசி தட்டுப்பாடு கிடையாதென்பதால் சுற்றுலாத் தொழில்துறைக்கு அவசியமான அரிசியை தவிர்ந்த வேறு அரிசி மணி ஒன்றைக் கூட இறக்குமதி செய்ய நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ரூபா 15 ஆயிரமாக நிலவிய உரமானியத்தை ரூபா 25 ஆயிரமாக அதிகரித்தது அதற்காகத்தான். அடுத்த வருடத்தின் பெப்ரவரி மாதமளவில் எங்களுடைய முதலாவது வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து மக்களுக்கு குறுங்கால ரீதியாக மானியங்களை வழங்குவோம். அதன் பின்னர் நீண்டகால ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்பிய பின்னர் மக்களை சுயசக்தியுடன் நிமிர்ந்து நிற்கும் ஆற்றல் படைத்தவர்களாக மாற்றுவோம். உலகில் விசேடமான ஒரு நிலைமை உருவாகாவிட்டால் 2025 ஆம் ஆண்டை இலங்கைக்கு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிக அதிகமாக வருகை தந்த நாடாக மாற்றுவோம்.

அதேவேளையில் எதிரிகள் அரசாங்கம் மூன்று மாதங்களில், ஆறு மாதங்களில் வீழ்ந்து விடுவதாக சோகக் கதைகளை பிதற்றிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் குடும்ப ஆட்சி சிதைவடைந்து இந்தப் பொதுத் தேர்தலில் போட்டியிட முடியாத அளவிற்கு வங்குரோத்து அடைந்திருக்கிறார்கள். மக்கள் அரசியல்வாதிகளுக்கு பின்னால் சென்ற யுகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து சட்டத்தின் முன் சமமானவர்களாக மாற்றுவோம். 2015 நல்லாட்சி அரசாங்கம் மோசடிப்பேர்வழிகள், ஊழல்பேர்வழிகள் சம்பந்தமாக செயலாற்றுவதற்கு பதிலாக வெறும் காட்சிக்காக மாத்திரம் செயலாற்றி வந்தது. அந்த நிலைமையை மாற்றியமைத்து எல்லா விதத்திலும் நிறைவான ஒரு நாட்டை நாங்கள் கட்டியெழுப்புவோம். அதற்காக இந்தப் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தை திசைகாட்டியின் பிரதிநிதிகளால் நிரப்புங்கள். திருகோணமலை மாவட்டத்திலிருந்து தமிழ் தோழர் ஒருவரை, முஸ்லிம் தோழர் ஒருவரை, சிங்கள தோழர் ஒருவரை என்ற வகையில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவம் செய்கின்ற தோழர்களை பாராளுமன்றத்திற்கு அனுப்பி வையுங்கள். ஒரே கொடியின் நிழலில் அனைத்து மக்களையும் பிரதிநிதித்தும் செய்கின்ற அரசாங்கமொன்றை நாங்கள் கட்டியெழுப்புவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *