ஹொங்கொங் சிக்ஸர்ஸ் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு
எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடருக்கான லஹிரு மதுஷங்க தலைமையிலான 7 வீரர்கள் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் ரசிகர்களை சிக்ஸர் மழையில் நனையவைக்கும் அணிக்கு 6 வீரர்கள் கொண்ட ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் எதிர்வரும் நவம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் அனுமதியுடன் இடம்பெற்றுவந்த ஹொங்கொங் சிக்ஸர்ஸ் கிரிக்கெட் தொடர் இறுதியாக கடந்த 2017ஆம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. பின்னர் இத்தொடர் இடைநிறுத்தப்பட்டிருந்தது. அதிரடி சிக்ஸர்களை விரும்புகின்ற உலக கிரிக்கெட் ரசிகர்களை 7 வருடங்களின் பின்னர் மகிழ்ச்சிப்படுத்த இத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றமை அவ் ரசிகர்களுக்கு மிகுந்த உட்சாகத்தை கொடுத்துள்ளது.
இத் தொடரில் 12 அணிகள் இத் தொடரில் பங்கேற்கின்றமை சிறப்பம்சமாகும். குறிப்பாக இம்முறை ஓமான்இ ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நேபாளம் ஆகிய அணிகள் முதன்முறையாய் இத் தொடரில் பங்கேற்கின்றன. அந்தவகையில் சில அணிகள் தமது வீரர்கள் குழாத்தினை அறிவித்திருக்க இன்று (23) இலங்கை கிரிக்கெட் சபை தமது குழாத்தினை அறிவித்துள்ளது. இலங்கை அணியை சகலதுறை வீரரான லஹிரு மதுஷங்க வழிநடாத்துகின்றார்.
அவருடன் அதிரடி சகலதுறை வீரர்களான லஹிரு சமரகோன், நிமேஷ் விமுக்தி, சந்துன் வீரக்கொடி, தனஞ்சய லக்ஷான், தரிந்து ரத்னாயக்க மற்றும் தானுக தாபரே ஆகிய வீரர்களே இத் தொடருக்காக இலங்கையை பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.
இவ்வணிக்கான அனுமதியினை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரான பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(அரபாத் பஹர்தீன்)