உள்நாடு

பாராளுமன்ற பெரும்பான்மை கிடைத்தால், ஜனாதிபதியுடன் இணைந்து சர்வதேச நாணய நிதிய இணக்கப்பாட்டில் திருத்தங்களை மேற்கொள்வோம்; ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச

முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட முறையற்ற வரிச்சூத்திரம் விரைவில் மாறும் என மக்கள் எதிர்பார்த்தனர். அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி இந்த வரிச்சூத்திரத்தை மாற்றும் என மக்கள் எதிர்பார்த்தனர். அவர்கள் கூறியதை, கூறுவதை வெறும் பேச்சில் மாத்திரமல்லாது நடைமுறையிலும் மாற்ற வேண்டும். இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் நேரடி மற்றும் மறைமுக வரிகள் குறைக்கப்படும் என எதிர்பார்த்திருக்கின்றனர் என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு வழங்கிய பின்னர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட்டு, IMF ஒப்பந்தத்தில் உள்ள மக்கள் விரோத விதிகளை மாற்றி, மக்கள் பக்கம் இருந்து மக்களுக்கு சுமையை ஏற்படுத்ததாது, சர்வதேச நாணய நிதியத்துடன் மக்கள் வாழ்க்கையை கட்டியெழுப்பும் புதிய இணக்கப்பாட்டை எட்டுவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று ஐக்கிய மக்கள் சக்தியினதும் ஐக்கிய மக்கள் கூட்டணியினதும் தலைவரான சஜித் பிரேமதாச தலைமையில் (20) கொழும்பில் இடம்பெற்றது. ஐக்கிய மக்கள் சக்தியின் மத்திய கொழும்பு தேர்தல் தொகுதி அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இச்சந்திப்பில் கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்தபோது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் பல சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தின. அந்தக் கலந்துரையாடல்களில், முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வந்த வரிச்சூத்திரம் நியாயமற்றது, எனவே அது மாற்றியமைக்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக தெரிவித்தோம். இலக்கு நிர்ணயிக்கப்பட்ட அரச வருவாயை விட அதிக வருவாயைப் பெறும் இந்த நியாயமற்ற வரி சூத்திரத்தை மக்கள் ஆணை மூலம் மாற்றியமைப்போம் என்று தெரிவித்தோம். இம்முறை பொதுத் தேர்தலில் நாட்டு மக்கள் ஐக்கிய மக்கள் சக்திக்கு அதிகாரத்தை வழங்கிய பின்னர், அந்த ஆணையுடன் சர்வதேச நாணய நிதியத்துடன் புதியதொரு இணக்கப்பாட்டை எட்டுவோம் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தற்போதுள்ள IMF இணக்கப்பாடுகள் மாற வேண்டும். மாற்றியமைக்க வேண்டும். தெளிவான ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற பெரும்பான்மையைப் பெற்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவுடன் கைகோர்த்து, IMF இணக்கப்பாட்டை மாற்றியமைக்கும் செயல்முறைக்கு பக்க பலத்தை கொடுப்போம். கர்ப்பிணித் தாய் முதல் குழந்தை, சிறுவர்கள், முதியவர்கள், இளைஞர்கள் சமூகத்தில் உள்ள அனைவருக்கும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் வரிச்சூத்திரம் நாட்டில் அமுலில் காணப்படுகிறது. இதற்கு முன்னாள் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கமே பொறுப்பாகும் என்று சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *