எந்தவொரு கட்சிக்கோ வேட்பாளருக்கோ ஆதரவில்லை – கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபை பகிரங்க அறிக்கை.
தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடே அதன் கிளையான கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபைக்கும் எற்புடையதாக இருப்பதனால் கல்குடாக்கிளை எந்தவொரு கட்சியையோ வேட்பாளரையோ முன்னிலைப்படுத்தாது என கல்குடா ஜம்இய்யதுல் உலமா விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கட்சியினதும் வேட்பாளரதும் அனைத்து நன்மை பயக்கும் விடயங்களுக்கும் கட்சி பேதமின்றி கல்குடா ஜம் இய்யதுல் உலமா சபை ஒத்துழைப்பை வழங்கும்.
தேர்தல்கள் வருகின்ற போது தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், பிரதேச பள்ளிவாயல்கள். பொது அமைப்புக்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கியஸ்தர்களின் ஆலோசனையைப்பெற்று பொதுவான வழிகாட்டல்களை வழங்குவது கல்குடா ஜம்இய்யதுல் உலமாவின் மரபு ரீதியான நடைமுறையாகும்.
இம்முறை. பொது வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தி எமது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதி செய்ய வழிகாட்டும் படி பிரதேச பொது அமைப்புக்கள், இளைஞர்களினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க இதற்கான சாதக கள நிலைமைகளை அறிந்து கொள்வதற்காக ஆலோசனைக் கூட்டங்களில் கலந்துரையாடப்பட்டது.
தகைமைகளைப் பூரணப்படுத்தி இருக்கும் இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜைக்கும் தேர்தலில் போட்டியிடவும் தான் விரும்பிய வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவும் உரிமை இருக்கின்றது.
ஒருவரை தேர்தலில் போட்டியிடுவதற்கோ அல்லது போட்டியிடாதிருக்கவோ வற்புறுத்துவதற்கு யாருக்கும் உரித்து கிடையாது.
நாம் இழந்துள்ள பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தினை மீளவும் பெற்றுக்கொள்வதற்கு வழிவகுக்கும் விதமாக தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்கள், வெற்றி வாய்ப்புக்கான சாதக நிலைகளைக் கருத்திற்கொண்டு விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ளல்.
தேர்தல் பிரசார மேடைகளில் தனிப்பட்ட விமர்சனங்களைத்தவிர்த்து தான் சார்ந்துள்ள கட்சிகளின் கொள்கை மற்றும் அவற்றின் எதிர்காலச் செயற்பாட்டுத்திட்டம் என்பவற்றை முன்னுரிமைப்படுத்தல்.
கட்சித்தொண்டர்கள், ஆதரவாளர்கள் மார்க்க விழுமியங்கள், பண்பாடுகள், நெறிமுறைகளை மதித்து நடக்கும் விதமாக நெறிப்படுத்துவது ஒவ்வொரு வேட்பாளரினதும் கடமையாகும்.
வாக்களிக்க தகுதியான அனைவரையும் வாக்களிக்கத் தூண்டி வாக்களிப்பு வீதத்தினை அதிகரிக்கச் செய்வதுடன், வாக்குகள் நிராகரிக்கப்படும் வீதத்தினைக் குறைப்பதற்கும் கட்சிகள் துரித வேலைத்திட்டங்களை முன்னெடுத்தல்.
தேர்தல் தொடர்பான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் நிலைப்பாடே அதன் கிளையான கல்குடா கிளைக்கும் ஏற்புடையதாக இருப்பதனால், கல்குடா கிளை எந்தவொரு வேட்பாளரையோ அல்லது கட்சியையோ முன்னிலைப்படுத்தாது. கட்சியினதும் வேட்பாளர்களினதும் அனைத்து நன்மை பயக்கும்
விடயங்களுக்கும் கட்சி பேதமின்றி தனது ஒத்துழைப்பை வழங்கும்.
தேர்தல் தொடர்பான நாட்டின் பொதுச்சட்டத்தினை மதித்து அதற்கு கட்டுப்பட்டு நடப்பதுடன், நாட்டின் பொதுச்சொத்துக்களையும் இயற்கை வளங்களையும் பாதுகாக்கும் விதமாக தமது தேர்தல் சார் நடவடிக்கைகளை மேற்கொள்வது ஒவ்வொரு வேட்பாளர்கள் மீதுமுள்ள கடமையாகும் என அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(எஸ்.எம்.எம்.முர்ஷித்)