மாலைத்தீவின் இஸ்லாமிய விவகார அமைச்சர் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் ஆகியோரிடையே சிநேகபூர்வ சந்திப்பு
2024.10.17ஆம் திகதி, மாலைத்தீவின் இஸ்லாமிய விவகார அமைச்சர் கலாநிதி மொஹமத் ஷஹீம் அலி ஸஈத் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் ஆகியோரிடையிலான சிநேகபூர்வ சந்திப்பு, மாலைத்தீவு – இஸ்லாமிய விவகார அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விஷேட சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான மார்க்க மற்றும் கலாச்சார ரீதியிலான உறவுகள், தொடர்புகள் குறித்து பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு இலங்கையிலிருந்து மாலைத்தீவுக்கும், மாலைத்தீவிலிருந்து இலங்கைக்கும் வருகை தரக்கூடிய ஆலிம்கள் மற்றும் ஹாபிழ்களின் விடயங்கள் குறித்தும் இதன்போது கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
அத்தோடு, இருநாட்டு முஸ்லிம்களின் மார்க்க மற்றும் பொது விவகாரங்களில் வழிகாட்டல்களை வழங்க அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும், மாலைத்தீவின் இஸ்லாமிய விவகார அமைச்சும் ஒரு புரிந்துணர்வின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது குறித்தும் இதன்போது கலந்தாலோசிக்கப்பட்டது.
இச்சந்திப்பில், மாலைத்தீவின் இஸ்லாமிய விவகார அமைச்சரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்கள் ஒக்டோபர் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலைத்தீவின் ஹுல்ஹுமாலே மஸ்ஜிதுர்-ரஷீத் பள்ளிவாயலில் ஜுமுஆ உரை ஆற்றியமையும் குறிப்பிடத்தக்கது.