காலி பஹ்ஜதுல் இப்ராஹிமிய்யாவின் புதிய நூலகம் திறந்து வைப்பு
தென்னிலங்கை, காலிக் கோட்டையில் கல்விக் கோட்டையாக அறிவொளி பரப்பிக் கொண்டிருக்கும் வரலாற்று பிரசித்தி பெற்ற பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அரபுக் கலாசாலையின் நூலகம் நவீன வசதிகளுடன் பல இலட்சம் ரூபா செலவில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு,மிகவும் கோலாகலமாக திறந்து வைக்கப்பட்டது.
1892 ஆம் ஆண்டு மாக்கான் மாக்கார் குடும்ப முன்னோடிகளான ஓ.எல்.எம் மாக்கான் மாக்கார் – ஆமினா உம்மா தம்மதியினரால் இக்கலா நிலையம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இத்தம்பதியின் நான்கு புதல்வர்களும் இணைந்து மத்ரஸாவுக்கான இடத்தை கொள்முதல் செய்துள்ளனர். அன்று முதல் இன்று வரை சுமார் 132 ஆண்டுகளாக இக்குடும்ப வாரிசுகளால் இந்த மத்ரஸா பூரண அனுசரணைகளுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது.
மேன் முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் முஹம்மத் அஹ்ஸன் மரிக்கார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு, “ஸேர் முஹம்மத் மாக்கான் மாக்கார் நினைவு நூலகம்” என்ற பெயரில் பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வாயில் நாடாவை வெட்டி திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காலி கோட்டையில் அமையப்பெற்றுள்ள ஜும்ஆ பள்ளியில் அஸர் தொழுகையை நிறைவு செய்த கையோடு அதிதிகள் அடுத்த தெருவிலுள்ள பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அரபுக் கல்லூரிக்கு ஊர்வலமாக பைத் ஓதலுடன் அழைத்து வரப்பட்டனர்.
நூலகம் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, வைபவ நிகழ்வுகள் ஆரம்பமாகின. கல்லூரி அதிபர் கலீபதுஷ்ஷாதுலி மெளலவி முஹம்மத் ரஸுக் (பஹ்ஜி)யின் வழிகாட்டலின் கீழ் நடைபெற்ற பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அரபுக் கல்லூரியின் நான்காம் வகுப்பு மாணவன் முஹம்மத் இப்ராஹிம் கிராஅத் ஓதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர். கல்லூரி நிர்வாக தலைவர் நுஸ்கி முஹம்மத் வரவேற்புரை நிகழ்த்தினார். அத்துடன் கல்லூரி மாணவர்களின் சுற்றுலா பயணத்திற்காக சுமார் ஒரு இலட்சம் ரூபா நிதியையும் கையளித்தார்.
கல்லூரியின் பணிப்பாளர் கொழும்பு உம்மு ஸாவியாவின் பேஷ் இமாமான மெளலவி எம்.எப்.எம் பாஸில் (பஹ்ஜி) உரையில் கூறியதாவது,
ஸேர் முஹம்மத் மாக்கான் மாக்கார் குடும்பத்தின் மூத்த தாய் ஆமினா உம்மாவின் எண்ணக் கருவில் உருவான அரபுக் கல்லூரி தோற்றம் பெற அவரது கணவர் ஓ.எல்.எம் மாக்கான் மாக்கார் உறுதுணையாக நின்றார்.
ஸதகதுல் ஜாரிஆ வான இந்த அரும் தர்மம் இலங்கையில் சரித்திரம் படைத்து விட்டது. சாதனை தொட்டுவிட்டது. இப்பணிக்காக நாம் அனைவரும் இந்த குடும்பத்திற்காக துஆ செய்ய கடமைப்பட்டுள்ளோம். பிரதம அதிதியாக கலந்து கொண்ட நீதியரசர் முஹம்மத் அஹ்ஸன் மரிக்கார் தனது உரையில்,
பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா அரபுக் கல்லூரி இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று பொக்கிஷமாகும். இங்கு வாசிகசாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நூல்களைப் பார்வையிட்டேன். அனைத்தும் விலை மதிக்கவொண்ணாத அறிவுக்களஞ்சியமாகவுள்ளன. சுமார் நூறு வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த அரபு கிதாபுகள் காணப்படுகின்றன. கையெழுத்துப் பிரதிகள் கூட வரலாற்றுப் பழைமையை கட்டியம் கூறி நிற்கின்றன.
இந்த கலாபீடத்தை அமைத்து தொடர்ந்து நிர்வகித்து வரும் ஸேர் முஹம்மத் மாக்கான் மாக்கார் குடும்பத்தினரின் உயரிய சேவைகளை பாராட்ட வேண்டும்.
விஷேட அதிதியாக கலந்து கொண்ட கலீபதுக் குலபா மெளலவி அல் உஸ்தாத் எம்
இஸட் முஹம்மத் ஸுஹுர் (பாரி) ஆங்கில மொழியில் கல்லூரியின் தோற்றம், வளர்ச்சி மற்றும் பணிகள் குறித்து விரிவான உரையொன்றை நிகழ்த்தினார். அதிபர் அல் உஸ்தாத் மெளலவி ரஸுக் (பஹ்ஜி) நன்றியுரையோடு துஆ பிரார்த்தனையையும் நடாத்தினார்.
அவர் பஹ்ஜத்துல் இப்ராஹிமிய்யா கல்லூரியின் வரலாறு மற்றும் தூய்மையான பணிகளின் சிறப்புக்கள் குறித்தும் பிரஸ்தாபித்தார். இக்கல்லூரியின் 132 வருட கால சேவையில் இதுவரை 440 பஹ்ஜிகளே வெளியாகியுள்ளனர். அந்த அளவுக்கு பாடநெறியை சம்பூரணமாக நிறைவு செய்வதுடன் பரீட்சைகளில் உரிய தேர்ச்சி பெற்று மிகவும் தரம் வாய்ந்த உலமாவாகவே வெளியேற்றப்படுகிறார்கள். இதனால் மிகவும் வடித்தெடுக்கப்படும் செயற்பாட்டுக்கே இங்கு முதலிடம் கொடுக்கப்படுகிறது. இதன் விளைவாகவே வெளியேறும் உலமாக்கள் தொகை மட்டுப்படுத்தப்படுகின்றது என்ற கண்டிப்பான முறைமையையும் எடுத்து விளக்கினார்.
அல் உஸ்தாத் மெளலவி எம். ஸப்வான் (பஹ்ஜி)யினால் இயற்றப்பட்ட வாழ்த்து கஸீதா ஒன்றும் மேற்படி கல்லூரி மாணவர்களால் மிகவும் இனிமையாக பாடி சபையை களைகட்டச் செய்தமை சிறப்பம்சமாக அமைந்தது.
அல் உஸ்தாத் முஹம்மத் ஸும்ரின் (பஹ்ஜி) நிகழ்ச்சிகள் அனைத்தையும் மிகவும் சிறந்த முறையில் தொகுத்து வழங்கியதுடன் அதிதிகள் அனைவரையும் சிறப்பாக அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வைபவத்தில், உலமாக்கள், கலாபீட விரிவுரையாளர்கள், மாணவர்கள், ஸேர் முஹம்மத் மாக்கான் மாக்கார் குடும்பத்தைச் சேர்ந்த பெரும் திரளான உறவினர்கள், பல பகுதிகளிலும் இருந்து வருகை தந்த உலமாக்கள், கல்வியாளர்கள், ஊரார், அயலூர்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
(பேருவளை பீ.எம் முக்தார்)