ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட வேட்பாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா உலமா சபை பிரதிநிதிகளுடன் சந்திப்பு
2024.10.22ஆம் திகதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளருமான கலாநிதி ஹர்ஷ டி சில்வா அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தலைமையகத்திற்கு வருகை தந்து நிறைவேற்றுக்குழு உறுப்பினர்களுடன் சிநேகபூர்வ சந்திப்பில் ஈடுபட்டார்.
அவர் தரப்பில் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய இச்சந்திப்பிற்கான நேரம் வழங்கப்பட்டது.
இதன்போது, வருகை தந்திருந்த பிரமுகர்களுக்கு ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் அவர்களினால் ஜம்இய்யா பற்றிய அறிமுகமும் அதனால் முன்னெடுக்கப்படும் பணிகள் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டதுடன் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவித அரசியல் கட்சிகள் சார்பற்ற, எல்லா காலங்களிலும் இலங்கைவாழ் மக்கள் அனைவரும் புரிந்துணர்வோடும் சகவாழவோடும் வாழ்வதற்கான வழிகாட்டலை வழங்கக்கூடிய ஒரு சமய நிறுவனமாகும் என்பது பற்றியும் தெளிவுபடுத்தப்பட்டது.
இதனையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர் தரப்பு அரசியல் கொள்கைகள் குறித்து விளக்கமளித்ததுடன் தமது எதிர்கால திட்டங்கள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைத்தார்.
நிகழ்வின் இறுதியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் வெளியிடப்பட்ட அல்-குர்ஆன் சிங்கள மொழிபெயர்ப்பு மற்றும் ஏனைய சில வெளியீடுகளும் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அவர்களுக்கு கையளிக்கப்பட்டன.
குறித்த சந்திப்பில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சார்பில் பதில் தலைவர், உப தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் ஆகியோருடன் நிறைவேற்றுக்குழு உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தனர்.