உள்நாடு

மயிலை விட்டு மைக்குக்கு தாவிய முஜாஹித்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நீண்ட நாள் போராளியும் வை.எம்.எம். ஏ இன் புத்தளம் மாவட்ட பணிப்பாளருமான முஜாஹித் நிசார் செவ்வாய்க்கிழமை (22)
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் இணைந்து கட்சியின் புத்தளம் மாவட்ட வேட்பாளர் ஆப்தீன் எஹியாவின் வெற்றிக்காக முன் நின்று செயற்பட உள்ளதாக தெரிவித்தார்.

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற வேட்பாளருமான ஆப்தீன் எஹியாவின் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை (22): இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இணைந்து கொண்ட முஜாஹித் நிசார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டதாவது:
தான் நீண்ட நாட்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் போராளியாக இருந்து
புத்தளம் மாவட்டத்தில் கட்சிக்காக கடுமையாக ஒழைத்து வந்துள்ள போதும் இம்முறை இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கலின் பின் மயில் கட்சி சார்பில் புத்தளம் தொகுதியை பிரதிநிதித்துவப் படுத்தும் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் அமைப்பாளர்கள் தன்னை உதாசீனம் செய்துள்ளதுடன் தனது செயற்திட்டங்களையும் புறக்கணிக்கின்றனர். அத்தோடு இளைஞர்களின் முன்னேற்ற செயல்பாடுகளுக்கும் தடையாக செயல்படுகின்ற காரணங்களால் அக்கட்சியை விட்டு வெளியேறியதாக தெரிவித்த அவர் கட்சியின் தலைமைக்கும் தனக்கும் எவ்விதமான கருத்து முரண்பாடுகளும் இல்லை எனவும் தெரிவித்தார்

மேலும் நாட்டில் உள்ள தலைவர்களில் ஜனாதிபதி அநுர மற்றும் மைக் கட்சியின் தலைவர் ரஞ்ஞன் ஆகிய இரண்டு தலைவர்களையே ஊழலற்ற தலைவர் என தான் அடையாளம் கண்டதாகவும் அதன் நிமித்தமே தான் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியில் இணைந்து கொண்டதாகவும் மேலும் தெரிவித்தார்.

இவ் ஊடக சந்திப்பில் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளரும் பாராளுமன்ற வேட்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஆப்தீன் எஹியா மற்றும் முன்னாள் வட மாகாண சபையின் உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினருமான அலிக்கான ஷெரீப் ஆகியோர் கலந்து கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ் – அரபாத் பஹர்தீன்,புத்தளம் எம் யூ எம் சனூன் – ரஸீன் றஸ்மின், முந்தல் காசிம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *